பழைய பல்லாவரத்தில் அமைந்துள்ளது பச்சையம்மன் மன்னாதீஸ்வரர் திருக்கோயில். பல்லாவரம் திரிசூலம் மலை நடுவே ஓடைக்கரையில் குடியிருக்கிறாள் இவ்வாலய பச்சையம்மன். இவ்வம்மன் கோயில் பல்லாவரத்தின் எல்லைக்குள் இருந்தாலும் அடுத்துள்ள திரிசூலம் கிராமத்துக்கும் உரியவள். இரண்டு ஊருக்கும் பொதுவானவள். திருவிழா சமயத்தில் திரிசூலம் குளத்தில் இருந்து அக்னி கரகம் கிளம்பி வரும். அதேபோன்று பழைய பல்லாவரம் பால்கேணி குளத்திலிருந்து கங்கை திரட்டி வருவார்கள். ஆடி 5 -ஆம் வாரம் திங்கட்கிழமையன்று இரண்டு ஊரையும் சேர்ந்த சுமார் 400 பேருக்கு மேற்பட்டோர் தீ மிதித் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதிப்பர்.
சிவனில் சரிபாதி அடைய வேண்டி தவம் மேற்கொண்ட பச்சையம்மன், இத்தலத்திலும் கோயில் கொண்டாள். இயற்கை மாற்றங்களால் மக்கள் வேறிடம் குடிப்பெயர, கோயில் இருந்த இடம் தெரியாமல் போனது. மீண்டும் அம்மன் வெளிவர வேண்டிய காலமும் வந்தது.
பல்லாவரத்தை ஒட்டிய பகுதியிலிருந்த மக்களின் கனவில் அம்மன் அடிக்கடி தோன்றினாள். தான் திரிசூலம் மலையிலிருந்து இறங்கும் ஓடைக்கரையின் கீழே குடியிருப்பதாகவும் தன்னை எடுத்து வணங்க, சகல செளபாக்கியங்களும் வழங்கி அருள்செய்வதாகவும் கூறினாள்.
அதன் காரணமாக, இரண்டு ஊராரும் சேர்ந்து அம்மன் குடிகொண்டுள்ள இடத்தைத் தேடிச் செல்ல சுற்றிலும் பனஞ்சாலைகள் நின்றன. ஆலமரமும் வேப்பமரமும் சற்று தள்ளி இருக்க, ஓடை ஓரிடத்தில் வலம் சுழித்து ஓடியது. அவ்விடத்தில் மூதாட்டி ஒருவரிடம் பிரசன்னமாகி தான் தவம் செய்வதற்காக அங்கு வந்து குடியிருந்ததாகவும் அப்போதைய மக்கள் கேட்டுக்கொண்டபடி அங்கே நிரந்தரமாகத் தங்கி அருள்புரிவதாகவும் தெரிவித்தாள். சிறிய கல்லால் ஆன கருவறை கட்டி மக்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் கி.பி 1903 }ஆம் வருடம், முன்மண்டபம் அமைக்கப்பட்டது. திரிசூலம் மலையிலிருந்து வரும் ஓடையின் வலப்புறம் கோயிலின் பெரிய பரப்பு அமைந்துள்ளது.
கருவறையில் பச்சையம்மன் கிழக்குப்புறம் பார்த்து சிலாரூபமாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். கருவறை முன்புறம் வலதுபுறத்தில் விநாயகரும் இடது புறத்தில் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் இருந்து அருள்கின்றனர். இதன் நேர் எதிரில் வீரமுத்து சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதிக்கு வலதுபுறம் சுமார் 16 அடி உயரமுடைய வாழ்முனி சிரிக்கும் கோலத்தில் அமர்ந்துள்ளார். அவரின் காலடியில் பாதாளஅரக்கனும் பீடத்தில் வீரமுத்து சண்டையிட வரும் கோலத்திலும் இருக்க, அவனை அழிக்கும் கோலத்தில் வாழ்முனி இருக்கிறார். மற்றொரு பக்கத்தில் அவன் மனைவி வீராச்சி உயிர் பிச்சை கேட்டு நிற்கின்ற கோலம் உள்ளது.
வாழ்முனிக்கு இடப்புறம் சப்தகன்னியர்கள் மன்னாதீஸ்வர லிங்கத் திருமேனி அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதிக்கு வடமேற்கில் மலையிலிருந்து நீர் வரும் கண்மாய் அமைக்கப்பட்டுள்ளது ஞாயிறு, திங்கள், வெள்ளி ஆகிய நாள்களில் மக்கள்வரத்து அதிகமாக இருக்கும். பிரார்த்தனைக்காக வந்து மொட்டையடிப்போர், பொங்கல் வைப்போர், காதுகுத்து செய்வோர் என பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
அமாவாசை நள்ளிரவு 1.00 மணிக்கு பூஜை முடிந்தபிறகு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி, தைப்பொங்கல், வரலட்சுமி நோன்பு போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி 5-ஆம் வாரத்தில் தீமிதி உற்சவம், கங்கை திரட்டி அக்னிகரகம் எடுத்தல் என திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது.
பல்லாவரம் குவாரி ரோடு வழியாகச் சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம். திரிசூலம் ரயில் நிலையத்தில் இறங்கி ஊருக்குள் செல்லும் வழியில் சென்று ஹார்பர் ரோடு வழியாக 1/2 கி.மீ. சென்றால் எளிதில் கோயிலை அடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.