வெள்ளிமணி

அண்ணல் நபிகளின் அவையழகு!

பல தெய்வ வணக்கத்தை வழக்கமாக்கி ஒழுக்கத்தைத் துறந்து இழுக்கான செயல்களில் ஈடுபட்ட கொடூர கொலை வெறியர்களை அடாத செயல்களை விட்டு விலகி இலகுவாய் இணைந்து வாழ சமுதாயமாய் சகோதரத்துவம்

மு. அ. அபுல் அமீன்

பல தெய்வ வணக்கத்தை வழக்கமாக்கி ஒழுக்கத்தைத் துறந்து இழுக்கான செயல்களில் ஈடுபட்ட கொடூர கொலை வெறியர்களை அடாத செயல்களை விட்டு விலகி இலகுவாய் இணைந்து வாழ சமுதாயமாய் சகோதரத்துவம் பேணி வாழ ஏகத்துவத்தை எடுத்துரைத்து திருத்திய திருநபி (ஸல்) அவர்களின் அவையழகை ஆய்வோம்.
பலர் கூடும் கூட்டம் அவையாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்புகளைக் கேட்க தெளிவு  பெற தெளிவின் ஒளிவை வாழ்வில் காண ஆவலோடு அமர்ந்திருப்போர் அவையை அழகாக்க கடைபிடித்த நடைமுறைகளைக் காண்போம். 
அவையில் முன் வந்தோரிடம் பின்னால் வருபவர் இடம் கேட்டால் இடம் கொடுக்க இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 58}11 ஆவது வசனம், "" நம்பிக்கையுடையோரே, எவரும் உங்களிடம் அவையில் அகன்று இடம் கொடுக்க வேண்டினால் நீங்கள் நகர்ந்து இடம் கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இடத்தை விசாலமாக்குவான்.''  அவைக்கு முன் வந்தவர் தாமதமாக வருபவர் அமர முடியாமல் இடத்தை அடைத்து கொண்டு அமருவது அவைக்கு அழகல்ல. பின்னால் வந்து நிற்பவர் உட்கார இடம் கொடுப்பவர்களுக்கு இறைவன் இம்மையிலும் உலகில் உயர்ந்த இடங்களை விரிவாக வழங்கி, மறுமையில் இடங்களை ஏற்படுத்தித் தருவதோடு அறிவிலும் ஆற்றலிலும் பரஸ்பரம் போற்றும் நற்குணங்களிலும் பெருக்கத்தைக் கொடுக்கிறான். "" ஒரு அவையில் அமர்ந்திருப்பவரை எழுந்து செல்ல செய்து மற்றவர் அங்கு அமரக் கூடாது. நெருங்கி உட்கார்ந்து இடத்தை விரிவாக்கி வந்தவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற  ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அறிவிக்கிறார் இப்னு உமர் (ரலி) நூல் - புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ. இருவருக்கு இடையில் அவ்விருவரின் அனுமதியின்றி பிறர் அமர்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை அம்ருப்னு ஸூஐப் அவரின் தந்தை மூலமும் பாட்டன் மூலமும் அறிந்ததாக அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் உள்ளது. 
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அவைக்குச் செல்லும் நாங்கள் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கே அமர்வோம் என்று அறிவிக்கிறார். ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) நூல்- அபூதாவூத். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அவை நற்குணங்கள் நிரம்பிய நல்லறிவு பளிச்சிடும் தெள்ளிய பண்பு மிளிரும் சகிப்புத் தன்மை உடைய உயரிய முக்கியத்துவ அவையாக அமைந்திருந்தது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவையில் அமர்ந்திருப்போரையும் வெளிநாட்டு தூதுவர்களையும் கண்ணியப்படுத்துவார்கள். அவைக்கு வரும்பொழுது கண்ணியமான நல்ல ஆடைகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அணிவார்கள். வெளிநாட்டு தூதுவர்களைச் சந்திக்கும்பொழுது ஜுப்பா என்ற மேலங்கியை மேன்மை நபி (ஸல்) அவர்கள் அணிவார்கள் என்று அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் - அல் அதபுல் மப்ரார். ஜுப்பா என்பது அகலமான ஆடை. அதனை வழக்கமான ஆடைகளுக்கு மேல் மேலங்கியாக அணிந்து கொள்வார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவைக்கு வரும் விருந்தினர்களை நேரில் சென்று வரவேற்று அவைக்கு அழைத்து வருவார்கள். அப்துல் கைஸ் என்பவரின் தலைமையில் வந்த தூதுக்குழுவை "வருக வருக' என்று கூறி வரவேற்றார்கள். அத்தூதுக்குழு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்போடு வரவேற்றதையும் அவர் வசதியான இடம் தந்ததையும் வந்தவர்களை வாழ்த்தி அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சியதையும் நிறைவோடு கூறியது அஹ்மது நூலில் பதியப்பட்டுள்ளது.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைக் காண வருவோர் அவர்களுக்கு அன்பளிப்பு அளித்தால் அதனினும் மேலான பரிசை அவர்களுக்கு வழங்கி ஒரு நல்ல நடைமுறையை பழக்கப்படுத்தினார்கள். வந்தவர்களுக்குக் காணிக்கை வழங்கி கண்ணியப்படுத்திய பிறகுதான் பேசுவார்கள். இதனை, 68}4 ஆவது வசனம் நிச்சயமாக, நீங்கள் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள் என்று இயம்புகிறது. அவையில் பேசுவதை அமைதியாக கேட்பார்கள். அன்பான அக்கறையும் பூரிக்கும் புன்னகையும் அவையில் நிறைந்து இருக்கும். பூமான் நபி (ஸல்) அவர்கள் புன்னகைக்கும்பொழுது அவையினரும் மகிழச்சியுடன் மலர்ந்து புன்னகைப்பர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அவையில் மூத்தோரும் இளைஞர்களும் அமைதியாக கூடியிருப்பார்கள். பெரியவர்களின்அனுபவங்களை சிறியவர்கள் அறிந்து அறிவுரையை ஏற்று செறிவுடன் நடக்க உதவும் உன்னத அவையாக அமைந்தது. முதியவர்களை முன்னால் அமர வைத்து அவர்களுக்கு அனுசரணை செய்து மரியாதை கொடுப்பார்கள். சிறியவர்களைச் செம்மல் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமரவைத்து வழங்கப்படும் அறிவுரையை ஒழுங்காக கேட்க துணை புரிவார்கள். ஒரு தரம் அவைக்கு வந்த பேரீட்சை பழங்களை அனைவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுத்தார்கள். வட்டமாக அமர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிக்கும் அவை (திக்ரு மஜ்லிஸ்) உலகின் சொர்க்க பூங்கா என்ற பதிவு அஹ்மது நூலில் உள்ளது. அவையில் அமர்ந்திருப்போர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவைக்கு வரும்பொழுது எழுந்து நிற்பதைத் தடை செய்ததை அறிவிக்கிறார் அபூஉமாமா (ரலி) நூல் - அபூதாவூத்.
ஒருமுறை பள்ளிவாயிலுக்கு வந்த வள்ளல் நபி (ஸல்) அவர்கள் தோழர்கள் பல பிரிவுகளாக பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு உங்களுக்கு இடையில் தடை ஏன்? என்ன நிகழ்ந்தது என்று வினவியதை விவரிக்கிறார் ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத். 
அவைகளின் மேன்மை அவற்றின் விசாலத்தைப் பொறுத்தது என்று பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றதை அறிவிக்கிறார் அபூஸஈதில் குத்ரி (ரலி) நூல்- அபூதாவூத். இந்நபி மொழிப்படி பரந்த இடத்தில் விரிந்த உள்ளத்துடன் கூடி கலந்து அவையை அழகாக்கி பழகி பாசத்தோடு நேசத்தை நிலை நாட்டி ஒற்றுமையாய் வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT