வெள்ளிமணி

புண்ணியம் தரும் ஸ்ரீபூலாநந்தீஸ்வரர்!

பொ. ஜெயசந்திரன்

புராண வரலாறு:

பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியர்களில் ராசசிம்ம பாண்டியன் அளநாட்டை, ஆட்சி புரிந்து வரும் காலத்தில் மிருகங்களால் கஷ்டப்படும் குடிமக்களின் குறைதீர்க்க பூலாவனத்தின் மேற்கே சுரபி நதிபக்கம் வந்து சேர்ந்தான். ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த மன்னன், அனைத்தும் சிவபெருமான் திருவருள் என்று சிந்தித்து இருந்த வேளையில் எதிரே பூலா மரங்கள் அடர்ந்த காட்டைக் கண்டான். அங்கு வாழும் ஆயர்குலத் தலைவனை அழைத்து தினந்தோறும் தனக்கு பால் கொண்டுவருமாறு சொல்லி, அதற்கு வேண்டிய மானியமும் அளித்தான். 

ஆயர்குலத்தலைவனும், மன்னருக்கு பூலாவனத்தின் வழியே பால் கொண்டு வரும் வேளையில் பூலா மர வேர் தடுக்கி விழுந்தான். பால் முழுவதும் பூலாமரத்தின் அடியில் கொட்டியது. தொடர்ந்து அவ்வாறே நிகழ்ந்தது. ஒரு நாள் கோபத்துடன் இடறிய வேரை பூலாமரத்தின் அடியோடு வெட்டினான். பூலாமரத்தின் அடியில் இருந்து செங்குருதி வெள்ளம் போல் வெளியேறியது. ஆயர்குலத்தலைவன் திகைப்புடனும் பயத்துடனும் மன்னனிடம் ஓடினான். ராசசிம்ம பாண்டியன் ஆயன் பால் கொண்டு வராததைக் கண்டு கோபக்கனலோடு வினவ, அவனோ நடுக்கத்துடன் நடந்த சம்பவங்களை விவரித்தான். 

அதனை கேட்டதும், அரசன் பதறி எழுந்தோடினான். சிவலிங்கத்தினின்று வெளியேறிய செங்குருதி கண்டு துணுக்குற்று மயங்கினான். "இக்கோலம் காணவோ நான் பிறந்தேன்' என அரற்றினான். உடனே செங்குருதியானது ஆகாயம் ஊடுருவும்படி ஜோதி மலையாய் நின்றது. அதைக்கண்ட மன்னன், ஆனந்த வெள்ளத்தில் ஆடினான். "என்னை ஆட்கொள்ள வந்த இறைவனே! நீ இவ்வாறு விஸ்வரூப தரிசனம் தந்தால் எப்படி பூசிப்பது?' என்று இறைஞ்சினான். இறைவன், ராசசிம்ம பாண்டியனின் அளவுக்கு குறுகி நின்ற வடிவைக் கண்டு இறைவனின் கருணையை எண்ணி மனம் பூரித்தான்.

ஆனந்தத்தில் இறைவனை ஆரத்தழுவினான். முகம் புதைத்து அழுதான். அரசன் அன்புக்கு கட்டுண்ட இறைவன், சிவலிங்கத்தில் அரசனுடைய முகமண்டலமும், மார்பில் அணிந்திருந்த ஆரமும் அவனது கைக்கடங்களும் தன் திருமேனியின் பதியும் வண்ணம் குழைந்து அருளினார். அவ்வடையாளங்களை இன்றளவும் மூலவரின் மேனியில் தெள்ளத் தெளிவாகக் காணலாம். சிவபெருமான் பூலா வனத்தில் இருந்தமையால் "பூலாநந்தீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். 

கல்வெட்டுச் செய்தி: இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் அளநாட்டின் அரிகேசரி நல்லூரில் அமைந்துள்ளது. "ராசசம்மேசுவரமுடையார்' என்று இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்வன் திரிபுவன சக்ரவர்த்தி முதலாம் குலசேகரவர்மன்(1268-1308) ஜடாவர்மன், திரிபுவன சக்ரவர்த்தி வீரபாண்டியன், சடைமாறன் ஆகிய பாண்டிய மன்னர்களின் காலத்தில் இத்திருக்கோயிலுக்கு நிலம், பொன், ஆடு முதலியவை தானமாக வழங்கப்பட்ட செய்திகளை இக்கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. 

சுங்கம் வரி, பொருள் விற்பனை ஆகியவை வசூலிக்கப்பட்டவுடன் அவற்றால் கிடைத்த தொகைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தானமாக இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டது. துர்கா பரமேஸ்வரியின் சந்நிதியில் நந்தா விளக்கு எரிப்பதற்காக அருகிலுள்ள மூன்று கிராமங்களில் சபையார் முன்னிலையில் நிலதானம் அளிக்கப்பட்டது. மாறவர்மன் குலசேகரரின் கல்வெட்டு ஒன்றில் "திருப்பூலாந்துரை உடையார்' அல்லது "ராசசிம்ம சோழீச்சுர முடையார்' என இத்தல ஈசன் குறிப்பிடப்பட்டுள்ளார். 

சிறப்புகள்: பார்க்கிறவர்களின் பார்வை எந்த உயரமோ அதே அளவு உயரமாக லிங்கம் காட்சி தரும் அதிசயத்தை இங்கு காணலாம். இத்தல இறைவனாகிய பூலாநந்தீஸ்வரரை வேண்டினால் புண்ணியங்கள் கிடைக்கும் என்றும்; சிவகாமியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தால் சிரமங்களை போக்குவார் என்கின்றனர். இக்கோயிலில் தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. 

திருவிழாக்கள்: தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை பெருந்திருவிழா, ஆனி திருமஞ்சனம், முளை கொட்டுத் திருநாள், அம்மன் தபசு, புட்டுத்திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம் மற்றும் 63 நாயன்மார்களின் திருநட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. 

வழித்தடம்: தேனியில் இருந்து கம்பம் செல்லும் பிரதான சாலையில் 23 கி.மீட்டர் தூரத்தில் சின்னமனூர் உள்ளது. அங்கிருந்து 1கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஆட்டோ, நகரப்பேருந்து வசதிகள் உள்ளன. 

தொடர்புக்கு: 94876 61929 / 98425 41252. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT