வெள்ளிமணி

ஆயுள் நீடிக்க செய்யும் ஹளபேடு ஹொய்சாளேஸ்வரர்!

ஹளபேடு என்பதற்கு பழைய வீடு என்பது பொருள். ஹளபேடு என்பது கன்னட மொழிச் சொல். அதாவது, பழைய தலைநகரம் கி.பி. 11 -ஆம் நூற்றாண்டு முதல் 14 - ஆம் நூற்றாண்டு வரை புகழ்பெற்ற மரபினராக விளங்கிய ஹொய்சாள

பொ. ஜெயசந்திரன்

ஹளபேடு என்பதற்கு பழைய வீடு என்பது பொருள். ஹளபேடு என்பது கன்னட மொழிச் சொல். அதாவது, பழைய தலைநகரம் கி.பி. 11 -ஆம் நூற்றாண்டு முதல் 14 - ஆம் நூற்றாண்டு வரை புகழ்பெற்ற மரபினராக விளங்கிய ஹொய்சாள மன்னர்களின் முதல் தலைநகரம் இது. துவார சமுத்திரம் அல்லது துவாரவதிபுரம் என்றும் இந்த இடத்திற்கு வேறு பெயர்கள் உண்டு. 

கி.பி.1310-ஆம் ஆண்டு முடிய ஹளபேடு புகழ்பெற்று விளங்கியது. முகலாய மன்னர்களின் தாக்குதலுக்குப் பிறகு இந்நகரம் பொலிவிழந்து விட்டது என்று சொல்லப்படுகிறது. ஹொய்சாளர்களின் சிற்பக்கலைக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் இவ்வூரிலுள்ள ஹொய்சாளேஸ்வரர், கேதாரேஸ்வரர் கோயில்களைக் காண உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஹொய்சாள மரபு மன்னர்களுக்குப் போசளர் என்றும் பெயர். இம்மரபில் விஷ்ணுவர்த்தனன் என்பவன் சிற்பக் கலைகளிலும் கட்டடக் கலையிலும் ஆர்வம் காட்டினான். இதற்கு இவனுடைய மனைவியாகிய சாந்தளாதேவி அவனுக்கு உறுதுணையாக இருந்தாள். சமண சமயக் கோயில்களில் சில இவர்களால் கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்குள்ள ஹொய்சாளேஸ்வரர் கோயில் கி.பி. 1121-ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தனின் உயர் அலுவலராக விளங்கிய கேதமல்லன் என்பவரால் கட்டப்பட்டது என்பது இங்குள்ள கல்வெட்டு மூலமாக தெரியவருகிறது. இருந்த போதிலும் கட்டுமானப்பணி முற்றுப்பெற 86 ஆண்டுகள் ஆயிற்று என்பதை அறிய முடிகிறது. முகலாய மன்னர்களின் தாக்குதல் காரணமாகக் கட்டுமானப்பணி கைவிடப்பட்டது என்று வரலாற்று ஆய்வுகள் மூலமாக தெரியவருகிறது. ஹொய்சாளேஸ்வரர் கோயில் வழக்கமான ஹொய்சாளர் பாணியில் நட்சத்திர வடிவில் அமைந்தது. இரட்டை மூலத்தானங்களைக் கொண்டது. 

இரு கோயில்களில் ஒன்று ஹொய்சாளேஸ்வரருக்கு, மற்றொன்று சாந்தளேஸ்வரருக்கு. இக்கோயிலுக்கு கிழக்குப் பக்க வாயில்கள் இரண்டும் வடக்குப் பக்க வாயில் ஒன்றும் தெற்குப்பக்க வாயில் ஒன்றும் உள்ளன. இந்த வாயில்களின் உத்தரங்களில் நடுப்பகுதியில் நடராஜர் உருவமும் அதன் இரு பக்கங்களிலும் நுட்பமான பொருள் பொதிந்த மகர மீன்களின் வடிவங்களும் காணப்படுகின்றன. நாடறிந்த ஒரு பழமொழி உண்டு. அதாவது சிற்பக் கலையை காணவேண்டுமென்றால் பேலூர் கோயிலின் உள்ளேயும் ஹளபேடு கோயிலின் வெளிச் சுவர்களிலும் காணவேண்டும் என்பதே அந்தப் பழமொழி. 

வெளிச்சுற்றுச் சுவரில் அமைந்துள்ள சிற்பங்கள் பழைய இந்து சமயம் கலாச்சாரத்தை விளக்குகின்றன. சுவரின் மாடங்களில் திருமாலின் வடிவங்களாகிய வாமனர், திரிவிக்கிரமர், நரசிம்மர், அயக்கிரீவர், சிவபெருமானின் வடிவங்களாகிய அந்தகாசூரசம்காரர், கஜசூரசம்காரர், உமாசங்கரர், பைரவர் ஆகியவையும் காணப்படுகின்றன. துர்க்கை, சரஸ்வதி ஆகியோரின் சிற்ப வடிவங்கள் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. உருத்திரனின் பதினோரு வடிவங்கள், கதிரவனின் பனிரெண்டு வடிவங்கள், எட்டுத்திக்குப் பாலர்களின் எட்டு உருவங்களையும் அந்தந்த திசைகளில் இருந்து பார்க்க இயல்வது போன்ற சிற்ப வடிவம். 

காண்பதற்கு அரிய சிறந்த சிற்பங்கள் இரண்டை இங்கு காணலாம். இவை விநோதமான வடிவம் கொண்டவை. மோகினியின் உருவம் ஆடை எதுவும் இல்லாமல் பாம்புகளே உடல் முழுதும் அணிகலன்களால் மூடி காணப்படுகிறது. மற்றொன்று, யோக முத்திரையுடன் காணப்படும் தட்சிணாமூர்த்தியின் சிற்பம். தலை மற்றும் கழுத்தை மூடியுள்ள உடையுடன் காணப்படுகின்றது. கோயில் வளாகத்தில் நந்தி மண்டபங்கள் இரண்டு பெரிதும் சிறிதுமாகக் காணப்படுகின்றன. 

துவார சமுத்திரம் குளத்தின் கரையில் கேதாரேஸ்வரர் கோயில் உள்ளது. இதைக்கட்டுவித்தவர் வீரவள்ளால தேவன் என்று நம்பப்படுகிறது. இம்மன்னனின் துணைவியாகிய அபிநவ கேதாள தேவி என்றழைக்கப்படும் பத்மாவதி தேவி இப்பணியில் மன்னனை ஊக்கப்படுத்தினாள். இது கட்டப்பட்ட ஆண்டு, கி.பி.1219. பல ஆண்டுகள் இடிபாடுகளில் மூழ்கி இருந்தது. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை இக்கோயிலின் புனரமைப்பணிகளை மேற்கொண்டது. இருந்த போதிலும் மராமத்துப் பணிகள் மேற்கொண்டபோது சிற்பங்கள் பல இடமாற்றி வைக்க வேண்டியதாயிற்று. இப்போது நாம் காண்பது முந்தைய கட்டுமானம் அல்ல. சோமநாதபுரத்திலுள்ள சென்னகேசவர் கோயிலுக்கு இந்தக் கோயில்தான் முன்மாதிரி என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 

ஹளபேடுவைச் சுற்றிலும் சமண சமயக் கோயில்கள் பல காணப்படுகின்றன. பஸ்திஹன்னி என்னும் ஊரில் உள்ள மூன்று சமணக் கோயில்களே இன்று எஞ்சியுள்ளவை. அவை சமணத் தீர்த்தங்கரர்களாகிய பார்சுவநாதர், சாந்தி நாதர், ஆதிநாதர் ஆகிய சமண முனிவர்களுக்காக எழுப்பப்பட்டவை என்பது அனைவரும் அறிந்ததே. கோயில் வாசலில் விநாயகப் பெருமான் கம்பீரமாக வீற்றிருக்கிறார், மேலே உள்ள இருகைகளில் பாச அங்குசம் உள்ளது. இடதுக்கரம் மோதகத்தைத் தாங்குகிறது. விநாயகரின் கிரீடமும், திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடுகளாக கருத்தைக் கவர்கின்றன.

சிறப்புகள்: முதல் குழந்தை பிறந்தவுடன் இங்குள்ள ஹொய்சாளேஸ்வரரை வந்து வேண்டினால் அந்த குழந்தை ஒழுக்கமாக வளர்ந்து ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். மைசூரில் இருந்து சுமாராக 155 கி.மீ. தொலைவில் உள்ளது ஹளபேடு நிறுத்தம். அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் கோயில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT