முகப்பு
வெள்ளிமணி

சகல செல்வமும் தரும் செங்கோயில்!

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தாரகாசூரன் அல்லல் தந்தான். அவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள். சூரனின் கொட்டத்தை அடக்க சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து முருகன் உதித்தான்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:29 PM
பகிர்:

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தாரகாசூரன் அல்லல் தந்தான். அவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள். சூரனின் கொட்டத்தை அடக்க சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து முருகன் உதித்தான். ஓர் அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய சப்தரிஷிகளும் அமைதியாய் தவ வாழ்வு மேற்கொண்டிருந்தனர். இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள். மாரிசி மகரிஷியின் பேரன் சூரியன் அத்திரியின் மகன் சந்திரன், சந்திரனின் மகன் புதன், ஆங்கீசரின் மகன் குரு, வசிட்டரின் வழி வந்தவர் செவ்வாய் உலகெங்கும் திருவிளையாடல் செய்த ஈசன், இளம்பாலகனான முருகனை கொண்டுவந்து அந்த ஏழு முனிவர்களின் குடில் அருகில் விளையாடிக் கொண்டிருக்க விட்டார்.

முனிவர்களின் மனைவியர் கண்பார்வையில் இருந்த குமாரன் பசி காரணமாக அழத் துவங்கினான். ஏழுவரின் மனைவியரும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர். ஆனாலும் நேரமாக நேரமாக பசியால் அழகை அதிகரித்தது குமரனுக்கு ரிஷி பத்தினிகள் பாலூட்டாமல் தாமதப்படுத்தினர். அங்கு வந்த கார்த்திகைப் பெண்கள் குமரனைத் தூக்கி பாலூட்டினார்கள்.

யாகம் முடிந்து இல்லம் வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர்கள் கூற நடந்ததை கேள்விப்பட்டனர். சிவகுமாரனுக்கு பாலூட்ட மறுத்த மனைவியரை ஏசினர், பேசினர். 

முருகப்பெருமான் அவதார நோக்கப்படி, தாரகாசூரனைக் கொன்றார். வெற்றிவீரனாய் திரும்பினார். சப்தரிஷிகள் தனக்காக மனைவியரை விரட்டிய தகவல் கேட்டு, வெகுண்டார். அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய ஏழு ரிஷிகளுக்கும் தீராத சாபம் தந்தார். தவறு உணர்ந்து, திருவையாறு சென்று, பஞ்ச நதிகளில் நீராடி ஐயாரப்பனை வணங்கி தவம் செய்தனர். உரிய பலன் கிட்டாத நிலையில் திருமால், லட்சுமி. சரஸ்வதி ஆகியோர் தவம் செய்து பலன் பெற்ற திருத்தவத்துறை வந்து சிவனை வணங்கி பாவத்திற்கு பிராயச்சித்தம் அளித்து, தங்களை ஆட்கொள்ளுமாறு. கடும்தவம் புரிந்தனர்.

சுயம்புலிங்கமான சிவன், முனிவர்கள் தவத்தினை ஏற்று, அக்னி உருவாய். தன் தலைப்பகுதி திறந்து அதிலே தீயினை உண்டாக்கி அந்தத் தீப்பிழம்பினுள் ஏழு முனிவர்களையும் உள்வாங்கிக் கொண்டு சாப விமோசனம் தந்தார். ஏழு முனிவர்களும் சிவனின் முழு அருளுக்கும் உரியவர்களாகி சிவனுள் ஒடுங்கியதால் இறைவனும் அன்றுமுதல் "சப்தரிஷீஸ்வரர்' என்று வழங்கப்பட்டார்.

திருத்தவத்துறை: ரிஷிகள் தவம் செய்த ஆற்றை ஒட்டியுள்ள துறை ஆதலால் தவத்துறை எனப்பட்டது. திருமால் இங்கு தவம் செய்து சுதர்சன சக்கரத்தினை மீட்டதாலும், லட்சுமி தவம் செய்து திருமாலின் நெஞ்சிலே இடம் பிடித்து மணந்து கொண்டதாலும் திரு என்ற அடைமொழி சேர்த்து திருத்தவத்துறை எனப்பட்டது. கல்வெட்டுகளில் இத்தலம் திருத்தவத்துறை எனப்படுகிறது. 

லால்குடி: மாலிக்காபூர் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தான் வழியில் இந்த ஊரைக் கடக்கும்போது தளபதியிடம் உருது மொழியில், "அது என்ன குடி?' எனக்கேட்டான். நெருப்பாய் நின்ற சிவனின் கோயில் என்பதை மொழி பெயர்த்த அவனது தளபதி "லால்- குடி' என்றான். செந்தழல் நிறமான சிவன் உறையும் கோயில் என்பது பின்னர் அதுவே பெயராக மாறிவிட்டது. ஆங்கிலேயருக்கும் சுலபமாக இருக்கவே அதுவே வருவாய் பதிவேடுகளில் ஏறிவிட்டது.

கருவறைக் கடவுள் சுயம்புலிங்கமான சிவன், முனிவர்களுக்கு சாப விமோசனம் தர, தன் தலைப்பகுதி திறந்து அதிலே தீயினைக் காட்டினார். அந்த செந்தீப் பிழம்புடைய ஈசன் குடிகொண்ட கோயில் என்பதால் செங்கோயில் என்பது லால் (சிவப்பு) குடி என அழைக்கப்பட்டது எனவும் கூறுவர். இங்கு காளியின் கர்வத்தை சிவபெருமான் அடக்கியதால் இத்தலம் பைரவி வனம் எனப்படுகிறது.
வணங்கி வளம் பெற்றோர்: மழவ நாட்டரசன் திருத்தவத்துறை பெம்மானை வணங்கி குஷ்டம் நீங்கி சுகம் பெற்றான். வசிஷ்ட முனிவர் வணங்கி பேறு பெற்றார் முரண்டகன் என்னும் அசுரன் இத்தல இறைவனை வணங்கி பிசாசு வடிவம் நீங்கினான். இதே போல் குணாகரன், பாபவிமோசனம் அடைந்தான். குபேரன் தீர்த்த யாத்திரையாய் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி பூசித்தார். திருப்பாற்கடலில் உருவான அமிர்தகடேஸ்வரர் லிங்கமாய் இங்கு திரண்டார். பராசரர் இங்கு வந்து வணங்கி அர்ச்சித்து ஆயுள் ஆரோக்கியம் பெற்றார். இது போன்ற இன்னும் பல அற்புதங்களும் வரலாறுகளும் நிகழ்ந்துள்ள தலம் லால்குடி என்னும் திருத்தவத்துறை ஆகும். 

தீர்த்தமும் கோயிலும்: கோபுரவாயிலுக்கு அருகில் சிவகங்கை தீர்த்தம் நால்வர் மண்டபத்திற்கு அருகில் சக்கர தீர்த்தம், சுவாமிசந்நிதிக்கு அருகில் வஜ்ஜிர தீர்த்தம் ஆகிய முக்கிய 3 தீர்த்தங்கள் உள்ளன. மேற்கு நோக்கி உள்ள கோயிலில்
மட்டையடி மண்டபமும் விஜய நகர கால ராஜ கோபுரமும் திருவாதிரை மண்டபம், நந்தி, பலிபீடம், கொடிக் கம்பமும் உள்ளன. நுழைவாயில் கடந்து விநாயகர், கிருஷ்ணர் திருமாலுக்காக தவம் செய்த மஹாலட்சுமி, பைரவர், சப்தமாதர்கள், சப்தகணபதிகள், பைரவி, நாயன்மார்கள் ஆகியோர் அருள்தருகின்றனர்.

கருவறை: சோழர்காலக் கலைப்படைப்பான மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ள கருவறையின் வெளிப்புறத்தில் சப்தரிஷீஸ்வரர் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகின்றார். இங்குள்ள லிங்கத்தின் மேல் வரிவரியாய் பள்ளங்கள் உள்ளன. நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள் சப்தரிஷீஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும்.

பெருந்திருப்பிராட்டியார்: இரண்டாம் பிரகாரத்தில் அம்பாள் பெருந்திருப்பிராட்டியார் என்ற பெயரோடு அங்குசம் பாசம் அபயம் வரதம் ஆகிய கரங்களுடன் தனி சந்நிதியில் அருள்தருகிறாள். அறம் வளர்த்த நாயகி, நித்ய கல்யாணி என்றெல்லாம் வணங்கப்படுகின்றாள். 

மணம் சேர்க்கும் மாங்கல்ய மஹரிஷி: மாங்கல்ய மகரிஷி உத்திர நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகியோருக்கு மாங்கல்ய தாரண பூஜையை நடத்தியவர். தம்பதிகளை ஆசிர்வதிக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகள் போன்ற அனுக்ரக தேவதைகளுக்கு எல்லாம் மாங்கல்ய மகரிஷியே குரு எனப்படுகிறார். திருமணத்திற்கான அமிர்த நேரத்தை இவரே சூட்சுமமாக உரைப்பவர் எனப்படுகிறது. தடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர், திருமணம் தள்ளிப்போவோர் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு தீபமிட்டு , மாலை சார்த்தி, அவரின் திருப்பாதத்தில் ஜாதகம் வைத்து வழிபடுகின்றனர்.

ஜுரஹரேஸ்வரர்: ஜுரகரேஸ்வரருக்கு எங்கும் உருவம் உண்டு. ஆனால் இத்திருக்கோயிலில் அமிர்தகடேஸ்வரர் சந்நிதியின் முன்புறம் மூலஸ்தானத்தின் பின்புறம் சந்நிதியின் இடப்புறம் உள்ள பித்திப் பகுதியில் எங்கும் இல்லாத சிறப்பு அம்சமாய் அரூப வடிவ ஜுரஹரேஸ்வரர் உள்ளார். வணங்குவோர்க்கு நோய் நீக்கும் தன்மை பெற்றவர். எவ்வளவு கடும் சுரம் இருந்தாலும் இளநீர், பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனம் தெளித்து தீபம் ஏற்றி தயிர் சாதம் நெய்வேத்தியம் செய்யப் படுகிறது. 

ஆயுள்விருத்திக்கு அமிர்தகடேஸ்வரர்: திருப்பாற்கடல் கடைந்து அமிர்தம் வெளிப்பட அமுத கலசத்தை மறைத்து வைக்க விநாயகர் எடுத்துச் செல்லும் போது ஒரு துளி அமிர்தம் ததும்பி தவத்துறையில் இறைவனின் அருகில் விழுந்தது. அக்னி சொரூபமாய் ஏழு மகரிஷிகளை உள் வாங்கிக் கொண்ட செவ்வண்ணல் சந்நிதிக்கு அருகில் இடப்பாகத்தில் அமிர்தகடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாய் உருவானார், ஆயுள் விருத்திக்கு அமிர்தகடேஸ்வர்ருக்கு அபிஷேகம் அர்ச்சனை ஹோமம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

மாங்கல்ய பாக்கியம் கூட்டும் மாங்கல்ய மஹரிஷி மூன்று தீர்த்தங்கள் சரஸ்வதி லட்சுமி துர்கை எனப்படும் முப்பெரும் தேவிகள் கிழக்கு நோக்கி ஒன்றாய் நின்று இறைவனை வழிபட்டு பலன் பெற்றத்தலம். 

திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி திருப்பதிகம் பாடினார் என சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தில் உறையும் முருகனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தியாகராஜசுவாமிகளால் லால்குடி பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடப்பட்டத் தலம். திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1கி. மீ. தொலைவில் லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

பங்குனித்தேரோட்டம்: தினமும் 6 கால பூஜை, 7 ரிஷிகள், 7 விநாயகர்கள், 7 நாகங்கள் துணை நிற்கும் அருள்மிகு சப்தரிஷீஸ்வரருக்கு 11 தினங்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா இவ்வாண்டு, 21.03.2018 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் அபிஷேகம், வாகனப் புறப்பாடு நடைபெறும். 24.03.2018 - பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 26.03.2018 -சோமாஸ்கந்தர் திருக்கல்யாணம், 29.03.2018 - பஞ்சமூர்த்திகள் திருத்தேர், 30.03.2018 - நடராஜர் அபிஷேகம், 01.04.2018 -பிட்சாடனர் புறப்பாடும் சிறப்பாக நடைபெறுகின்றன. 

தொடர்புக்கு: 04312541329/ 94886 04955.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.