வெள்ளிமணி

வள்ளலார் போற்றும் ராம நாமம்!

டி.எம். இரத்தினவேல்

திருஅருட்பிரகாச வள்ளலார் பாடிய பாடல்கள் எல்லாமே அருட்பெரும் ஜோதி ஆண்டவரைப் பற்றிய பாடல்களே ஆகும். எங்கும் இருக்கும் பரம் பொருள் ஒன்றுதான்! இறை உணர்வில் முழுவதும் பக்குவப் படாத நிலையில் உள்ளவர்களுக்கும் அரைகுறையான இறை அனுபவம் உள்ளவர்களுக்கும் இறை உணர்வில் போதுமான அளவு அனுபவப் பட்டவர்களுக்குமாக மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் வள்ளலார் சுவாமிகள் திருஅருட்பா பாடல்களைப் பாடி அருளி இருக்கிறார். 
இப்படி, ஒரே தெய்வ வழிபாட்டை, ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய வள்ளலார் சுவாமிகள், சமரச நோக்குடன் வைணவ பாடல்களையும் பாடியுள்ளார் என்பது வியப்புக்குரியதாகும். இறைவன் வழிபாட்டு முறைகளில் அவன் திவ்விய திருநாமங்களை மனம் கனிந்து சொல்லுவது ஒன்றாகும். அவ்வண்ணம் சொல்லும்போது மனத்துக்குள் மெல்ல மெல்ல இன்பம் சுரக்கிறது. மனக்கவலை அகன்று வாழ்வின் நோக்கம் இறைபக்தியே என்பதும் புரிகிறது. இறைவன் திருநாமச் சிறப்பை பக்தர்கள் பலரும் வியந்து பாராட்டி இருக்கின்றனர். 
ராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமானும் ராமநாமச் சிறப்பைப் பாடுவது இயல்பே அல்லவா? தமது திருவருட்பா பாடல்களில் வைணவ பரமான பாடல்கள் சிலவற்றைப் பாடி அதற்கும் பெருமை சேர்த்துள்ளார். ராமாவதாரத்தின் பெருமையை போற்றும் வகையில் ""ராம நாம சங்கீர்த்தனம்'' என்றொரு அழகிய பாடலையும் கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் என்ற பக்தர் கேட்டுக்கொண்டபடி பத்துப்பாடல்கள் அடங்கிய ""ராமநாம பதிகம்'' ஒன்றையும் பரந்தாமனின் திருவிளையாடல்களைப் போற்றும் வண்ணம், எவ்வுள் திருத்தலத்தில் உறையும் வீரராகவப் பெருமாளைக் குறித்தும் ஐந்து பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
மேலும் மற்றொரு அன்பரின் வேண்டு கோளுக்கிணங்கி சென்னை ஏழு கிணறு பதியில் உறையும் ரேணுகை எனும் திருமகளையும் வாழ்த்தி ஐந்து பாடல்கள் இயற்றியருளினார். இப்படி வைணவ நெறியைப் போற்றவும் செய்கிறார். 
திரு அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் தம் திருஅருட்பா இரண்டாம் திருமுறையில் ""ராமநாம சங்கீர்த்தனம்'' தனிப்பாடலில் வைணவ சம்பிரதாயமான திருமாலின் மந்திர வாசகங்கள் வருகின்ற முறையில் அழகாக எடுத்துக் கூறுகிறார். பாட்டினிடையே வரும் ""ராம'' மந்திரச் சிறப்பால் ""ராம நாம சங்கீர்த்தனம்'' செய்வதன் மேன்மையை போற்றிச் சிறப்பிக்கிறார். அவர் அருளிய அருள்பாவைக் காண்போம். 

""காராய வண்ண மணி வண்ண 
கண்ண கன சங்கு சக்ரதர நீள்
சீராய தூய மலர் வாய நேய 
சீராம ராம எனவே..'' 

கார் என்றால் கரிய மேகம், அதாவது கருக்கொண்ட கரிய மேகம். மழை பொழியத் தயாராக இருக்கும் கருணை மேகம். கரிய மேகத்தைக் கண்டால் மயில்கள் தங்கள் அழகிய தோகையை விரித்தாடும். வாடிய பயிர்கள் வான் முகம் நோக்கி மழை வருமோ, சுகம் தருமோ எனத் துளிர் விடும் துடிப்போடு அசையும். உலக உயிர்கள் அனைத்தும் நிலை குலைந்து வாடும் போது கருணை மயமாய் வந்து அருள் பொழியும் பெருமான் என்பதால் வள்ளலார் சுவாமி அவர்கள், ""காராய வண்ண மணி வண்ண'' என்கிறார்.

மேலும் அவன் உயிர்களுக்குக் கண்ணாக இருக்கிறான். மேன்மையுடைய சங்கு, சக்கரம் தரித்தவனாக இருக்கிறான். நெடிய புகழ், தூய்மை மற்றும் செந்தாமரை போன்ற சிவந்த இதழை உடையவன். ஆருயிர் அனைத்துக்கும் அன்பன். எண்ணற்ற அவனுடைய திருப்பெயர்களில் மிகவும் சிறந்ததான ""ராம ராம'' என்ற நாமத்தைச் சொல்லுங்கள். என்பதைக் குறிப்பிடும் வகையில் ""கண்ண கன சங்கு சக்ரதர நீள் சீராய தூய மலர்வாய நேய சீராம ராம எனவே''என்கிறார்.
""ராம'' எனும் இந்த உயர்வுடைய சொல்லால் உயர்வுற்ற உத்தமர்கள் அநேகம் பேர். வான்மீகி முனிவர், கம்பர் பெருமான், துளசிதாசர், கபீர்தாசர், ராமதாசர், தியாகராசர், மகாத்மா காந்தியடிகள் என்ற எண்ணற்ற மகான்கள் இம்மந்திரச் சொல்லால் உயர்வு பெற்றவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT