முகப்பு
வெள்ளிமணி

ஒரே இடத்தில் 108 திவ்ய தேச சந்நிதிகள்!

அனந்த மூர்த்தியான ஸ்ரீமந்நாராயணனின் மீது அளவற்ற பக்திகொண்டு அவன்திருவடியை அடைந்த அழ்வார்கள் பன்னிருவர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:36 PM
பகிர்:

அனந்த மூர்த்தியான ஸ்ரீமந்நாராயணனின் மீது அளவற்ற பக்திகொண்டு அவன்திருவடியை அடைந்த அழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் தீந்தமிழால் பாடிய திவ்ய பிரபந்தம் எனும் பதிகங்களின் மூலம் மங்களா சாசனம் செய்துள்ள திருத்தலங்களே திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவ திருப்பதிகளாகும். இந்த தலங்கள் நில உலகில் சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாடு, மலை நாடு, பாண்டிய நாடு, வட நாடு ஆகியவற்றில் 106 என்ற எண்ணிக்கையிலும், பரந்தாமன் வசிக்கும் இடங்களான பாற்கடல் மற்றும் பரமபதம் ஆகிய இரண்டு, விண்ணுலகம் என்ற எண்ணிக்கையிலும் ஆக மொத்தம் 108 தலங்களும் ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
இந்த 108 திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்ற பரந்த நோக்கில் ஸ்ரீ புண்ணியக்கோட்டி மதுரை முத்து ஸ்வாமிகள் என்ற அம்பாள் உபாசகர் ஸ்ரீமந் நாராயணன் திருவருளால் அனைத்து திவ்ய தேசங்களுக்கும் தனித்தனி சந்நிதிகளை செங்கற்பட்டு அருகில் திருவடி சூலம் கிராமத்தில் அமைத்துள்ளார்கள். சப்த சைலஜ மத்ய பீடம் என்று அழைக்கப்படும் சிறப்புடன் கூடியது. மலைகள் மற்றும் வனங்கள் சூழ்ந்த இப்பகுதியில் ஏற்கனவே இவரால் ஸ்தாபிக்கப்பட்ட 51 அடி உயர விஸ்வரூப கருமாரியம்மன் மற்றும் ஸ்ரீ வாரு வெங்கடேசப்பெருமாள் சந்நிதி வழிபாட்டில் உள்ளது. திவ்ய தேச சந்நிதிகளில் உள்ள 106 இல் (நில உலகில்) உள்ள எம்பெருமான்களின் திருமேனி அந்தந்த தலங்களில் உள்ளது போன்றே ஆனால் சிறிய வடிவங்களில் பிரதிஷ்டையாகி உள்ளது. பாற்கடல், பரமபதம் ஆகிய இரண்டு சந்நிதிகளிலும் (107, 108) ஸ்ரீமந் நாராயணனின் திருக்காட்சி 21000 சாளக்ராம ஸ்வரூபமாக அமைய விருக்கின்றது.
முதற்கட்டமாக, நில உலகில் நாம் வழிபடும் 106 திவ்ய தேச மாதிரி சந்நிதிகளுக்கும் மகாசம்ப்ரோக்ஷணம் எனும் திருக்குட நன்னீராட்டு விழா ஏப்ரல்- 5 ஆம் தேதி காலை 9.56 மணிக்கு மேல் 10.26 மணிக்குள் நடைபெறுகின்றது. இதனையொட்டிய யாகசாலை, பூர்வாங்க ஹோம பூஜைகள் ஏப்ரல் -1 ஆம் தேதி ஆரம்பமாகின்றது. மேலும் இந்த சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு 108 திவ்ய தேச திருக்குடைகள் பவனி கோவிந்த நாம முழக்கத்துடன், பஜனைப் பாடல்களுடன் மார்ச் -30, மாலை திருவல்லிக்கேணியிலிருந்து புறப்பட்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று குரோம்பேட்டை, தாம்பரம், சிங்கப்பெருமாள் கோயில் வழியாக திருவடி சூலம் சென்றடைகின்றது. பக்தர்கள் அனைத்து வைபவங்களிலும் பங்கேற்று காண்பதற்கரிய 108 திவ்ய தேச சம்ப்ரோக்ஷணத்தை ஒரே நேரத்தில் காணும் பேறு பெறலாம். 
திருவடிசூலம்: செங்கற்பட்டிலிருந்து திருப்போரூர் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு: 99404 53178.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.