வெற்றிக்கு வழி விசுவாசம்!
தன்னம்பிக்கையும் தைரியமும் நாம் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது நமக்கு வெற்றி மிகவும் எளிதாகக் கிடைக்கும்.
தன்னம்பிக்கையும் தைரியமும் நாம் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது நமக்கு வெற்றி மிகவும் எளிதாகக் கிடைக்கும். மாறாக, எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும். ஏனென்றால், ஆழ்மனதிற்கு நாம் எதை அனுப்புகிறோமோ, அதையே நமக்கு திருப்பி அனுப்புகிறது. எனவே , மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில், நேர்மறை எண்ணங்களால் நிறப்ப வேண்டும்.
வேதாகமத்தில் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் ஆபிரகாம் நேர்மறை எண்ணங்களோடு வாழ்ந்து தேவனால் ஆசீர்வாதங்களைப் பெற்றார். தேவன் ஆபிரகாமை அழைத்து, "நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றார்' (எபி. 6:14). இந்த வசனத்தில் தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குத்தத்தம்.
இவ்வாறு தேவன் ஆபிரகாமைப் பார்த்து கூறும்போது, அவனுக்கு பிள்ளையில்லாதிருந்தது. மேலும் அதிக வயது சென்றவனாயிருந்தான். இந்த நிலையில்தான் தேவன் ஆபிரகாமிடம் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார். தேவன் எனக்கு குழந்தைகளைக் கொடுப்பார்; பெருகப்பண்ணுவார் என்று ஆபிரகாம் முழுமையாக விசுவாசித்தான். அவன் பொறுமையாய்க் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்.
நாமும், ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கிறோம். விசுவாச மார்க்கத்தார் எவர்களோ, அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கிறார்கள். ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களும், சுதந்தரங்களும் நமக்கும் உரியது. தேவன், ஆபிரகாமுக்கு எவ்வளவாய் பெருகப் பண்ணப்போகிறார்
என்பதையும் காண்பித்தார். நீ பூமியின் தூளைப்போல பெருகுவாய், கடற்கரை
மணலைப் போல பெருகுவாய், வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகுவாய் என்று ஆபிரகாமின் சந்ததியின் பெருக்கத்தை மூன்று காரியங்களுக்கு ஒப்பிட்டுப் பேசினார்.
அதில் இரண்டு காரியங்கள், பூமிக்குரிய பெருக்கங்கள். அதாவது பூமியின் தூளும், கடற்கரை மணலும், அடுத்தது உன்னதத்திற்குரிய பெருக்கம். அதுதான் வானத்தின் நட்சத்திரங்கள். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் உலகத்திற்குரிய ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்து பெருக வேண்டும். மட்டுமல்ல, உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களையும், சுதந்தரித்து பெருக வேண்டும்.
உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி எழுதுகிறார், "ஞானவான்கள் ஆகாய மண்டலத்திலுள்ள ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும், என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்' (தானி. 12:3).
ஆகவே, நாமும் நம்முடைய மனதை நேர்மறை எண்ணங்களால் ஆன வேத வாக்குத்தத்தங்களால் நிரப்ப வேண்டும். அதை அனுதினமும் தியானித்து வரும்போது தேவன் நமக்கும் நன்மையான ஈவுகளை பரத்தில் இருந்து நிச்சயம் அருள்செய்வார்.