முகப்பு
வெள்ளிமணி

நடுபழநியில் அருள்தரும் மரகத தண்டாயுதபாணி!

கந்தபெருமான் அருள்பாலிக்கும் தலங்கள் பல இருந்தாலும் அவற்றுள் கோபமுற்று  ஞானப் பழமாக, முருகப்பெருமான்  நின்ற இடம் தென்பழநி. தென்பழநி, வடபழநி இரண்டும் நாம் அறிந்த முருகன் தலங்கள்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

கந்தபெருமான் அருள்பாலிக்கும் தலங்கள் பல இருந்தாலும் அவற்றுள் கோபமுற்று ஞானப் பழமாக, முருகப்பெருமான்  நின்ற இடம் தென்பழநி. தென்பழநி, வடபழநி இரண்டும் நாம் அறிந்த முருகன் தலங்கள். இவைகளுக்கிடையே தொண்டை மண்டலத்தில் "நடுபழநி' என வழங்கும் பெருங்கருணை கனகமலையில் அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி.  

அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சிறு குன்றில் அமைந்த தலம், பெரும்பேர் கண்டிகை. இக்குன்றின் மீது முருகன் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்தப் பெரும்பேறு கண்டிகைக்குப் "பேறை நகர்' என்றும் ஒரு பெயர் உண்டு.  நீண்டகாலம் ஊரை விட்டுச் சென்றிருந்த முத்துசுவாமி என்பவர் இங்கு வந்து தங்கி இருந்தார். 

முத்துசுவாமியின் கனவில் வந்த  ஒரு சிறுவன் தூங்கிக்கொண்டிருக்கும் முத்துசுவாமியை வந்து எழுப்பி இருக்கிறான்.  அவன் சின்னஞ்சிறு பாலகன். அவனைச்சுற்றி நறுமணம் பொங்கியது. அதோடு சிறு சதங்கை ஒலி. அப்பாலகன் ஒரே நேர்க்கோடு போல் கையை நீட்டி தூரத்தில் உள்ள "பெருங்கருணை கனகமலை' பகுதியை காட்டினான்.  இது கனவா? நினைவா? என்று புரியாத முத்துஸ்வாமிகள் இனம் புரியாத பரவசத்தை உணர்ந்தார். கண் திறந்து பார்த்தார். அருள்கிடைத்த ஆனந்தத்தில் முருகா! முருகா! என்று உரக்கச் சொன்னபடி பெருங்கருணை கனகமலையை வந்தடைந்தார். ஆனால் மலைகள் எல்லாம் கரடுமுரடாக சுண்ணாம்பு மலையாக இருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் வருவதும் போவதுமாக இருந்தார்.  

ஒரு சந்நியாசி பெருங்கருணை மலைக்கு வந்து மலையின் உச்சியில் ஓரிடத்தில் அமர்ந்து திருப்புகழ், தேவாரம், திருவாசகம் என தெய்வீக பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். மலைக்கு வரும் போதெல்லாம் அதே இடத்தில் உட்கார்ந்து அவர் பாடுவதை முத்துசுவாமி கவனித்தார்.  இந்த இடத்தில் என்னவோ விந்தை இருப்பது அவர் மனதிற்குப்பட்டது.  அந்த சந்நியாசி சில தினங்களாக வரவே இல்லை.  முத்துசுவாமி அந்த இடத்தை தோண்டிப் பார்த்தார்.  என்ன ஆச்சர்யம் அங்கு ஒரு வேல் கிடைத்தது. வேலை வணங்கினால் வேதனை தீர்ந்து விடும் என்று,  அந்த கரடுமுரடான மலையில் சிறு கொட்டகை போட்டு வேலை வைத்து வணங்கி வரலானார் முத்துசுவாமி.

வெயில் கொளுத்துவதையும், மழைகொட்டுவதையும் பொருட்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக மலையை வெட்டி, புதர் செடிகளை நீக்கி, மலையில் ஏறுவதற்குத் வசதியாக பாதை அமைத்தார். அந்த இடம் ஒரு பொட்டல் காடு. இதைத் தாண்டி செல்லும் மக்கள் பக்தியோடு கோயில் கட்ட தண்ணீர் கொண்டு வருதல், மண்ணை அள்ளிப் போடுதல் போன்ற சிறுசிறு வேலைகளை செய்து கொடுத்துவிட்டு செல்வார்கள். முத்துசுவாமி அற்புதமாக காவடி ஆடுவார். திருப்புகழ், தேவாரப் பதிகங்களை பக்தியோடு பாடுவார். அருகிலிலுள்ள ஆலய விழாக்களில் கரகாட்டம் ஆடி அதனால் வரும் ஊதியத்தை கோயில் எழுப்பும் பணிக்குச் செலவிடலானார்.  இவர் கோயில் எழுப்பும் பணி தெரிந்ததும் பக்தர்கள் பலர் பொன்னும், பொருளுமாகக் கொண்டு நிறைத்தனர்.  

என்றாலும், முருகப்பெருமான் தன் சோதனைகளைக் காட்டாமல் இல்லை. இவரைப் பல சோதனைகளுக்கு உட்படுத்தினான்.  அத்தனை சோதனைகளையும் தாங்கிக் கொண்டு வசதிகளே இல்லாத சூழ்நிலையில் முருகன் ஆலயத்தைத் தம் முயற்சியால் கட்டி முடித்தார். அமைதி தவழும் சூழ்நிலையில் ஆலயம் மலை மீது பிரமிக்க வைக்கும் வகையில் எழும்பி நின்றது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த பணி வெற்றிகரமாக நிறைவேறியது.  பழநியில் உள்ள பாலசுப்பிரமணியனைப் போலவே இத்தலத்திலும் ஸ்ரீ மரகத தண்டாயுதபானி  கோயில் கொண்டுள்ளார்.  இக்கோயிலை உருவாக்கியவர் கணபதி ஸ்தபதி.  400 அடி உயரமுள்ள இம்மலை மீது முருகன் பால தாண்டாயுதபாணியாக நிற்கிறான்.  சுற்றிலும் 24 தூண்களுடன் கூடிய மகா மண்டபமாக விளங்குகிறது.

காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகை தந்து முருகனை வழிபட்டார். தமிழகத்தில் வடபழநி-தென்பழநி. இதோ ஒரு பழநி என்று காஞ்சிப் பெரியவர் பெயரிட்டு மகிழ்ந்தார்.  

1975}இல் முதன் முறையாகத் தேரோட்டம் நடந்தது.  அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது.  ஒருவர் மேல் அருள் வந்துவிட, அவர் தன் முதுகில் அளகைக் குத்திக்கொண்டு தான் ஒருவராகவே தேரை கரடு முரடான பாதையில் மின்சார ஒயர்களை எல்லாம் அறுத்துக் கொண்டு தேரை இழுத்துக்கொண்டு போனாலும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.  

ஆயிரக்கணக்கானவர்கள் காவடி எடுத்துக்கொண்டு "முருகா முருகா' என்ற கோஷத்துடன் சந்நிதிக்கு வேக நடையுடன்   வருவார்கள். பால்குடங்களை சுமந்து கொண்டு வரும் பக்தர்கள் நாக்கில் அலகு குத்திக்கொண்டு வரும் பக்தர்கள், இரண்டு தோள்களின் கீழ்பக்க சதைகளை இழுத்து அதில் கொக்கிகளைக் கோர்த்துக் கொண்டு லாரி, வேன் போன்ற வாகனங்களை இழுத்துக் கொண்டு வரும் பக்தர்கள் என பல வகையான வழிபாடுகள் நடைபெறும்.  

இத்திருத்தலம் குன்றின் உச்சியில் உள்ள ஆலயத்தில் ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.  குன்றின் வாயிற்படி தெற்கு நோக்கி செல்வது போல் இருக்கின்றது.  வாயிலுக்கு முன்புறம் ஆலமரங்களும் அரசமரங்களும் இருக்க, இயற்கை சூழலோடு திருத்தலம் காட்சி அளிக்கின்றது. பக்தர்கள் சுற்றிவர குன்றைச்சுற்றி தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் குன்றின் மீது செல்வதற்கான தனிப்பாதையும் அமைக்கப்பெற்றுள்ளது.  இந்த கோயிலை தற்போது நடுபழநி தண்டாயுதபாணி தத்தாத்ரேயா அறக்கட்டளை மூலம் நிர்வாகம் செய்கின்றனர். 

மலைப்படியின் ஆரம்பத்தில் வலது பக்கம் விநாயகர் சந்நிதி இருக்கின்றது. இதன் அருகில் முருகனடியார்கள் அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள், வள்ளலார்  சந்நிதிகள் உள்ளன. இங்கும் "திருவாவினன்குடி' என்ற பெயரில் திருச்சந்நிதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. குன்றின் உச்சியில் இடது புறம் முத்து சுவாமியின் சமாதி சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  

முருகப்பெருமானுக்குரிய  கார்த்திகை, சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாள்களில் ஆலயம் திருவிழா கோலத்தோடு காட்சி தரும். பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேன்தினை மாவு அருட்பிரசாதமாக வழங்கப்படுகின்றது. நாகதோஷம் உள்ளவர்களுக்கு நிவர்த்தித் தலமாக விளங்குகிறது. குழந்தைப் பேறு வேண்டிஇங்கு வந்து பலனடைந்தவர்கள் ஏராளம்.

சென்னையிலிருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சிறுப்பாக்கத்திலிருந்து சுமார் 5 கி. மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது.
தொடர்புக்கு:  98400 40310 / 97898 56722.

முழு கட்டுரையைப் படிக்க →