வெள்ளிமணி

காலனைக் கடிந்த காலசம்ஹார மூர்த்தி!

தஞ்சை மாவட்டம் திருவையாறு திருத்தலத்தில் ஐயாறப்பன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை மாத காலாஷ்டமியில் காலசம்ஹார மூர்த்தி நல்கும் தீர்த்தத் திருவிழா சிறப்பானதாகும். இத்திருத்தலத்தின் கண்

எஸ்.பி. உமாமகேஷ்வரன்

தஞ்சை மாவட்டம் திருவையாறு திருத்தலத்தில் ஐயாறப்பன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை மாத காலாஷ்டமியில் காலசம்ஹார மூர்த்தி நல்கும் தீர்த்தத் திருவிழா சிறப்பானதாகும். இத்திருத்தலத்தின் கண் தென்புறம் தனி சந்நிதி கொண்டருளும் ஆட்கொண்டாரே "காலசம்ஹார மூர்த்தி' என்றும், "சேஷத்ர பாலகர்' என்றும் அழைக்கப்படுகின்றார். 

துவாரபாலகர் ஆட்கொண்டாரான புராண வரலாற்றின் படி, கவுதமி நதிபாயும் நாட்டில் சுதபன் என்ற பெயருடைய அந்தணன் தன் மனைவி சுசிலையோடும், மகன் சுசரிதனோடும் வாழ்ந்து வந்தான். ஒரு சமயம், மழையின்றி பஞ்சம் ஏற்படவே அவர்கள் காவிரிக்கரையை நாடிவந்தனர். வரும் வழியில் பெற்றோர்கள் கோயிலில் இறந்துவிடவே, அநாதையான சுசரிதன் திருவையாறு அருகில் உள்ள திருப்பழனத்தை வந்தடைந்தான். கிடைத்த உணவைக் கொண்டு காலம் கழித்து வந்த நிலையில் ஒரு நாள் இரவு தென்றிசைக்கோன் (எமன்) அவன் கனவில் தோன்றி "இன்றிலிருந்து ஐந்தாவது நாள் நீ இறப்பாய்' எனக்கூறி மறைந்தான். செய்வதறியாது திகைத்த சிறுவன் திருவையாற்றுக்கு வந்து வசிட்ட முனிவரை வணங்கி தனது துயரைக் கூறினான். அவரும் சிறுவனிடம், "ஐயாறனடித்தலத்து வந்துவிட்டாய், எம பயம் உனக்கேதுமில்லை காவிரியில் நீ மூழ்கி ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு ஐயாறன் அடிகளே சரணம் என தென்புற வாயிலிலிருந்தால் நம பயம் நீங்கும், நமனும் நின்னையணுகான்' எனக்கூறி அருளினார்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. தென் வாயிலில் சிறுவனைக் கண்ட எமன் சற்று தயக்கமுற்றான். எமனைக் கண்ட சுசரிதன் "ஐயாறனடைக்கலம்' என முழங்கிடவும், சிறுவன் மீது பாசம் வைத்த பிரானும் காவல் தெய்வமான துவார பாலகரை அனுப்பி சிறுவனைக் காப்பாற்றும்படி ஆணையிட, துவாரபாலகரும் தனது ஆயுதத்தையெறிய நமனும் ஒழிந்தான், சிறுவனும் தப்பினான். அவனுக்கு நீண்ட ஆயுளையும் நல்கி, எமனையும் உயிர்ப்பித்து அத்தலத்தில் குங்கிலியப்புகை பரவுந்தூரம் வரை எமவாதனைக் கூடாது எனக் கூறி மறைந்தனன். இதனால்  இவருக்கு ஆட்கொண்டார் எனப்பெயர் வழங்கப்பெற்றது. ஆட்கொண்டார் சந்நிதி எதிரில் அமைந்துள்ள கிணற்றில் எப்பொழுதும் குங்கிலியம் புகைந்து கொண்டே இருக்கும். 

அவ்வாறு ஆட்கொண்டது ஒரு கார்த்திகை மாதம் அட்டமி தினத்தன்றாகும். இந்நிகழ்வை ஒவ்வோராண்டும் கார்த்திகை மாதம் அட்டமியில் காலாஷ்டமி எனக் கொண்டாடுவர். இவ்வாண்டு கார்த்திகை 14 (நவம்பர் 30) அன்று எம வாகனத்தில் காலசம்ஹாரமூர்த்தி காவிரிக்கரையில் தீர்த்தவாரி கண்டருளுதலும், ஆட்கொண்டாருக்கு கணக்கற்ற வடைமாலை சாற்றி சிறப்பு பூஜை அலங்காரமும் நடைபெறும். வேண்டுபவர்க்கு வேண்டுவன நல்கும் வரப்பிரசாதியாக விளங்கும் ஆட்கொண்டாரை நாமும் அந்நாளில் சென்று தரிசித்து ஐயாறப்பன் அருளைப் பெறுவோமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT