வெள்ளிமணி

உபரியில் அபரிமிதம்

உபரி என்ற சொல்லுக்குக் கூடுதல், அதிகம் என்று பொருள். அபரிமிதம் என்ற சொல் அளவற்றது என்பதைக் குறிக்கிறது.

DIN

உபரி என்ற சொல்லுக்குக் கூடுதல், அதிகம் என்று பொருள். அபரிமிதம் என்ற சொல் அளவற்றது என்பதைக் குறிக்கிறது. உபரியான அதாவது கூடுதலான, அதிகமான வணக்க வழிபாடுகளுக்கு அல்லாஹ் அளவற்ற அருளைப் பொழிகிறான் என்பதை எடுத்துரைக்கிறது இத்தலைப்பு.
 பர்லான் அதாவது கடமையான ஐந்து வேளை தொழுகைகளுக்குப் பிறகு உபரியான தொழுகை வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது இரட்டிப்பு பயனைத் தரும். கடமையான வணக்க வழிபாடுகளில் ஏற்பட்ட குறைகளை உபரி வழிபாடு நிறைவு செய்யும். நிறைந்த பயனைக் குறைவின்றி பெற உதவும். உபரி வழிபாடு ஒரு பாவம் அழிய உதவும்.
 ஒரு நாளில் கடமையான ஐந்து வேளை தொழுகைகளுக்கு முன்னும் பின்னும் தொழும் சுன்னத் தொழுகை உபரியாகும். இதற்கு மேலும் விரும்பியோர் தஹஜ்ஜத், இஸ்ராக், லுஹா, அவ்வாபீன், வித்ரு, தஹிய்யத்துல் மஸ்ஜித் முதலிய தொழுகைகளை இரண்டு ரக் அத் முதல் எத்தனை ரக் அத்துகள் முடியுமோ விருப்பமோ அத்தனை ரக் அத்துகள் தொழலாம். வித்ரு தொழுகை மட்டும் மூன்று ரக் அத்துகள். இந்த உபரி தொழுகைகளை எந்தெந்த நேரத்தில் தொழ வேண்டுமோ அந்தந்த குறிப்பிட்ட நேரத்தில் காலத்தில் மட்டுமே தொழ வேண்டும். அதைப்போல் சூரிய, சந்திர கிரகண தொழுகைகள், மழை வேண்டி தொழும் தொழுகை, விரும்பியது விரும்பியவாறு நிறைவேற இறைஞ்சும் ஹாஜத் தொழுகைகளும் உபரி தொழுகைகளே. உபரி தொழுகைகளை வீட்டில் தொழுதால் வானவர்கள் வீட்டிற்கு வருவார்கள். வல்லோன் அல்லாஹ்வின் அருளைப் பொழிவார்கள். பெரியவர்கள் தொழுவதைப் பார்த்து வீட்டில் இருக்கும் குழந்தைகளும் தொழ துவங்கும் ரமலான் மாத கட்டாய கடமையாக கணக்கிட்டு கணித்தவருக்குக் கொடுக்கும் ஜகாத்திற்கு மேலும் கணக்கின்றி எல்லோருக்கும் அள்ளி வழங்குவதும் உபரி வழிபாடே.
 உபரி வணக்க வழிபாடுகள் இணக்கமான இறைதூதர் இறதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை முழுவதும் ஒவ்வொரு நிலையிலும் இன்பத்திலும் துன்பத்திலும் மகிழ்ச்சியிலும் வருத்தத்திலும் பொருத்தமாய் பின்பற்றி நடப்பதே. இதற்குச் சுன்னத் என்று பெயர் சொல்வர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களோடு பழகிய தோழர்கள் அண்ணலாரின் வாழ்க்கை முறையை இம்மியும் பிசகாது பின்பற்றினர். இதுவே சுன்னத் - உபரி வழிபாடு.
 அபூ ஸல்மா (ரலி) அவர்கள் அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்களிடம் உண்ணல், பருகுதல், உடுத்தல் முதலியன உலக வழக்கமா? இவற்றில் இஸ்லாமிய வழிகாட்டல் உண்டா? என்று கேட்டார்கள். அல்லாஹ்விற்காக அதாவது அல்லாஹ்வைப் புகழ்ந்து உண்ணுங்கள், பருகுங்கள், உடுத்துங்கள், பயணம் புறப்படுங்கள், எந்த நல்ல செயலையும் செய்யுங்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி தூதர் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைப்படி அமைய வேண்டும். அதுவே உபரி வணக்க வழிபாடும் ஆகும் என்று பதில் கூறினார்கள்.
 உபரி வழிபாட்டை வாழ்க்கையில் பின்பற்றுவதால் அதற்குரிய பயன் இம்மை மறுமை இரண்டிலும் கிடைக்கும். விட்டுவிடுவதால் பாவம் தொட்டுவிடாது. இவ்வுலக வாழ்வில் உபரி வணக்க வழிபாட்டின் பயனைக் கண்முன் காணலாம். அதனால் உயர்வு பெற்றவரின் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் அதிகரிக்கும். மாற்றாரும் போற்றும் ஆற்றலும் அறிவும் தோற்றத்தில் தோன்றும். ஏற்றத்தில் உள்ளம் மகிழும். ஏற்கும் ஏகன் அல்லாஹ்வின் அருளும் கிட்டும்.
 உபரி வழிபாட்டில் உள்ளம் தூய்மை அடைகிறது. உயிரோட்டமான வளர்ச்சி கிடைக்கிறது. இவ்வளர்ச்சி என்பது இவ்வுலகில் கண்ணியமான வாழ்வு. மறுமையில் இறைவனின் கருணையை பெறுவது. அந்த கருணையால் சொர்க்கவாசல் கதவுகள் திறந்து நிரந்தர சுக வாழ்வைப் பெறுவது.
 அபரிமிதமான அருளை அள்ளித் தரும் உபரி வழிபாடுகளை விடாது நிறைவேற்றி, தொடாது துன்பம் விலகியோட இலகுவாய் இன்பமாய் இவ்வுலகில் வாழ்வோம். மறுமையிலும் மாறா நற்பேற்றைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT