யோவான் ஸ்நானகன் தலை துண்டிக்கப்பட்ட இடம்
இஸ்ரேல் நாட்டின் என்கரீம் நகரில் எலிசபெத் என்ற பெண்ணுக்கு பிறந்தவர் தான் யோவான் ஸ்நானகன்.
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 10
இஸ்ரேல் நாட்டின் என்கரீம் நகரில் எலிசபெத் என்ற பெண்ணுக்கு பிறந்தவர் தான் யோவான் ஸ்நானகன். இயேசுவின் தாயான மரியாளுக்கு உறவுக்கார பெண் அவர். இயேசு தனது வயிற்றில் கர்ப்பம் தரித்திருக்கிறார் என்ற முதல் செய்தியை எலிசபெத்திடம் தான் மரியாள் சொன்னதாக விவிலியம் கூறுகிறது. யோவான் ஸ்நானகன் இயேசுவை போலவே பிரசங்கம் செய்தல், நோயாளிகளை குணப்படுத்துதல் உள்ளிட்டவற்றை செய்து வந்தார்.
இயேசுவுக்கு ஜோர்தான் நதியில் ஞானஸ்தானம் (திருமுழுக்கு) கொடுத்தவரும் இந்த யோவான் தான். இயேசுவுக்கு மட்டுமன்றி பலருக்கு அவர் திருமுழுக்கு கொடுத்து வந்ததால் திருமுழுக்கு யோவான் அல்லது யோவான் ஸ்நானகன் என அழைக்கப்பட்டார்.
அவர் ஏரோது மன்னரால் சிறை வைக்கப்பட்டு, பின்னர் தலை துண்டிக்கப்பட்ட இடம் ஜோர்தான் நாட்டின் முகாவீர் மலையில் உள்ளது. இந்த இடத்தில் இப்போது இரண்டு நினைவு தூண்கள் மற்றும் கிணறு போன்ற ஓர் அமைப்பு மட்டும் உள்ளது. பழைய சிறைகள் உடைந்து சிதலமடைந்து கிடக்கிறது.
யோவான் ஸ்நானகன் தலை துண்டிக்கப்பட்டதற்கான முழு விவரத்தை விவிலியத்தில் மாற்கு 6:17 முதல் 29-ஆம் வசனங்கள் வரை காணலாம். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது,
யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும் அவளால் கூடாமற்போயிற்று. அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.
பின்பு சமயம் வாய்த்தது; எப்படியென்றால், ஏரோது தன் ஜென்ம நாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினபோது, ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம் பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்; நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.
அப்பொழுது, அவள் வெளியே போய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான் ஸ்நானகனுடைய தலையைக் கேள் என்றாள். உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து: நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான் ஸ்நானகனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்;
உடனே அவனுடைய தலையைக் கொண்டு வரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்.
அதன்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறுபெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள்.
அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள். யோவான் ஸ்நானகன் தலை துண்டிக்கப்பட்ட இடம் இந்த முகாவீர் மலை பகுதி தான். ஜோர்தான் தலைநகர் அம்மானில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் இங்கு செல்லலாம்.
- ஜெபலின் ஜான்
(தொடரும்...)