வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! 69

உலக அறிவியல் வரைபடத்தில் கோபாலசமுத்திரம் என்னும் சிற்றூரை, ராமச்சந்திரன் அமரச் செய்தார் என்றால், தங்கச் சிம்மாசனமிட்டுக் கொடுத்த பெருமைக்குரியவர் ஒருவரும் உள்ளார். 

டாக்டா் சுதா சேஷய்யன்

உலக அறிவியல் வரைபடத்தில் கோபாலசமுத்திரம் என்னும் சிற்றூரை, ராமச்சந்திரன் அமரச் செய்தார் என்றால், தங்கச் சிம்மாசனமிட்டுக் கொடுத்த பெருமைக்குரியவர் ஒருவரும் உள்ளார். 
ஜி.ஆர். சீதாராமன் என்னும் விடுதலைப் போராட்ட வீரருக்கும் லோகநாயகி என்னும் அவர்தம் மனைவியாருக்கும் 1930 -ஆம் ஆண்டு தென்காசியில் பிறந்தார் வெங்கடராமன். தென்காசியிலும் பாளையங்கோட்டையிலும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து, காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்லூரியில் சேர்ந்தார். கோபாலசமுத்திரம் பண்ணை வெங்கடராமய்யர் பள்ளியிலும் இவர் சில காலம் பயின்றதாகத் தெரிகிறது. கல்லூரிக் காலத்தில், தாவரவியலிலும், பாசிகள் (Algae) பற்றிய ஆய்வுகளிலும் ஈர்ப்புற்றார். முதுநிலை மற்றும் முனைவர் நிலை கல்வியையும் ஆய்வுகளையும் பனாரஸ் இந்துப் பல்கலையில் பூர்த்தி செய்த வெங்கடராமன், 1956 -ஆம் ஆண்டு, இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தில், உதவித் தாவரவியலாராகப் பணியில் இணைந்தார். 
இதன் பின்னர், வேளாண் ஆய்வுகளிலும் பாசி இயல் (Algology) ஆய்வுகளிலும் இவரின் பங்களிப்பு, சொற்களுக்கு அப்பாற்பட்டது. விவசாயத்தில், நைட்ரஜன் பொருத்து காரணிகள் (Nitrogen Fixing Agents) என்பனவற்றைப் பற்றிப் பேசுவார்கள். 
நைட்ரஜன் என்றொரு வளி (gas) இருக்கிறது. காற்றில் காணப்படுகிற இந்த வளியின் மூலக்கூறுகள், உயிரினங்களுக்குப் பயனற்றவை. இந்த மூலக்கூறுகளை, அம்மோனியா மற்றும் நைட்ரஜன் தொடர்புடைய வேறு சில சேர்மங்களாகவும் (Compounds) "மூலக்கூறுகளாகவும் (Molecules) மாற்றினால், அவை உயிரினங்களுக்குப் பயன் தரும். உயிரினப் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு நைட்ரஜன் மூலக்கூறுகளை மாற்றுவதைத்தான், "நைட்ரஜன் பொருத்தம்' (Nitrogen Fixation) என்றழைக்கிறோம். இவ்வாறு மாற்றம் காண்கிற நைட்ரஜன் சேர்மங்கள், வேளாண்மைக்கும், புரதத் தயாரிப்புக்கும் மிகவும் அவசியமானவை. 
வேளாண்மையில், மிகச் சிறப்பான நைட்ரஜன் பொருத்திகளாகப் பாசிகள் செயல்படுகின்றன என்பதனை முதன்முதலில் கண்டறிந்து, ஆய்ந்து கூறியவர் வெங்கடராமன். ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண் கழகம், வெங்கடராமனின் ஆய்வுக் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொண்டது. 
பாசி இயல் ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்ட வெங்கடராமன், பாசிகளை வளர்ப்பது குறித்தும், அவற்றை உயிரி உரங்களாகப் (bio fertilisers) பயன்படுத்துவது குறித்தும் (வேதியியல் பொருட்களின் பாதிப்புகள் இல்லாமல், ஆர்கானிக் விவசாயத்திற்கு உதவும் வகையில்), நெல் விளைச்சலில் பாசிகளின் சிறப்புப் பயன்பாடு எவ்வாறு உதவும் என்பது குறித்தும் பல நூல்கள் எழுதியுள்ளார். உணவு மற்றும் வேளாண் கழகத்தின் ஆலோசகராகவும், ஜப்பான் நாட்டு வேளாண் கழகத்திற்கு வருகைப் பேராசிரியராகவும் செயல்பட்ட வெங்கடராமனுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் சஞ்சய் காந்தி விருது, வேளாண் அறிவியலுக்கான ஓம் பிரகாஷ் பாசின் விருது ஆகியவை வழங்கப்பட்டன. 1992 -ஆம் ஆண்டு, இந்தச் சீர்மிகு புதல்வருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அன்னை பெருமைப்பட்டாள். 
கவிஞராகவும் திகழ்ந்த வெங்கடராமனின் பூர்வீகம்?... வேறென்ன? கோபாலசமுத்திரம்தான்! கோபாலசமுத்திரம் சீதாராம வெங்கடராமனும் தாமிராவின் செல்வ மகன்களில் ஒருவர்தாம்! 
கோபாலசமுத்திரத்தில் பிறந்து வளர்ந்து கல்வி பயின்ற பலர், இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட பெரும்பொறுப்புகளை வகித்துள்ளனர். சொல்லப்போனால், இந்தியத் தலைநகரான தில்லியில் இவர்களில் பலர் வசித்தனர். தமிழர்களான இவர்கள் அவ்வப்போது கூடிப் பேசினர். இவ்வாறு கூடிப் பேசும்போது, பிற ஊர்த் தமிழர்களும் சேர்ந்துகொள்ள, தமிழ்ச் சங்கம் ஒன்றைத் தொடங்கினால் என்ன என்னும் எண்ணம் தோன்றியதாம். இவ்வெண்ணத்தின் விளைவாகத் தொடங்கப்பட்டதுதான் இப்போதைய தில்லித் தமிழ்ச் சங்கம் என்னும், "கோபாலசமுத்திரம் கிளப்' தான், தில்லித் தமிழ்ச் சங்கமாக உருவெடுத்தது என்றும் நெல்லைக்காரர்கள் பெருமை கொள்வதுண்டு.
(தொடரும்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT