வெள்ளிமணி

திளைத்திடும் திக்ரின் விளைவு

திக்ரு என்னும் அரபி சொல்லுக்கு அல்லாஹாவை நினைவு கூர்தல் என்று பொருள்.

மு. அ. அபுல் அமீன்

திக்ரு என்னும் அரபி சொல்லுக்கு அல்லாஹாவை நினைவு கூர்தல் என்று பொருள். திளைத்தல் என்னும் தமிழ் சொல்லுக்குத் துய்த்தல் என்று பொருள். திக்ரில் தோய்ந்து துய்த்து திளைக்கும் முறையையும் விளையும் நன்மைகளையும் ஆய்வோம். 

அல்லாஹாவிற்குப் பிடித்த திக்ருகள்:

* சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)
* அல்ஹம்துவில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹாவிற்கே) 
* அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிக பெரியவன்)
* லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)

- இந்த நான்கு திக்ருகளும் குறைந்த சொற்களைக் கொண்டவை. இந்த திக்ருகளை இடையறாது இயம்ப வேண்டும். இந்த நான்கு திக்ருகளில் தலையாயது லா இலாஹ இல்லாஹ் என்ற நபிகளின் நன்மொழி திர்மிதீ, இப்னு மாஜா நூல்களில் உள்ளது.

அல்லாஹ்வை திக்ரு செய்வது அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நற்பண்பு. திக்ர் வணக்க வழிபாடுகளில் மகத்துவம் உடையது. இதனைக் குறித்த கோமான் நபி (ஸல்) அவர்களின் அமுதமொழி. அமல்களில் அதாவது வணக்க வழிபாடுகளில் சிறந்தது. தூய்மையான படித்தரங்களில் உயர்ந்தது.

தங்கத்தையும் வெள்ளியையும் செலவு செய்வதிலும் செம்மையானது. போரில் புரியும் தியாகத்தினும் மேலானது அல்லாஹ்வைத் திக்ரு செய்வது. நூல் - இப்னு மாஜா 3791 திர்மிதீ 3377. 

திக்ரில் திளைத்திடுவோர் உயிருள்ளவர் போன்றவர். திக்ரு செய்து இறைவனை நினைவு கூறாதவர் உயிரற்றவர் ஆவார் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புகன்றதைப் புகாரியில் காணலாம்.

87-14,15 ஆவது வசனங்கள் எவர் தூய்மை உடையவரோ அவர் நிச்சயமாக வெற்றி பெற்றார். அவர் இறைவனை நினைவில் நிறுத்தி தொழுவார் என்று கூறுகின்றன. தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும் அல்லாஹ் நினைவு கூறப்படுவதால் 20- 14 ஆவது வசனம் "" என்னை நினைவு கொள்வதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக!'' என்று கூறுகிறது. எனவே தொழுகையும் திக்ரு. குர்ஆன் ஓதுவதும் பிறருக்கு ஓதி கொடுப்பதும் (கற்பிப்பதும்) திக்ரு.

33-41, 42 ஆவது வசனங்கள் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும் மாலையிலும்  அவனைத் துதியுங்கள் என்றுரைக்க,  7- 2015 ஆவது வசனம் உங்கள் உள்ளத்தில் பணிவோடும் உரத்து குரல் எழுப்பாதும் பயத்தோடும் மெதுவான  காலையிலும் மாலையிலும் நினைவு கூருங்கள். அல்லாஹ்வை மறந்தவர்களில் ஒருவராக ஆகிவிடாதீர்கள் என்று அறிவுறுத்த, 76-25 ஆவது வசனம் காலையிலும் மாலையிலும் உள்ளத்தில் உள்ளவனைப் பணிந்து உள்ளச்சத்துடன் உரத்து ஒலிக்காது பிறருக்கு இம்மியும் இடையூறின்றி திக்ரில் திளைக்க இந்த வசனங்கள் திருப்பி திருப்பி கூறுகின்றன. 

எந்நேரமும் எந்நிலையிலும் எண்ணும் இறைவனைக் கணக்கிட்டு எண்ணாது திண்ணியமாய் திரும்ப திரும்ப நினைவில் நிறுத்த நினைவு படுத்தும் இந்த வசனங்களில் குறிப்பிடப்படும் காலை வேலை துவங்கும் நேரத்தையும் மாலை வேலை முடியும் நேரத்தையும் குறிப்பாக குறிப்பிடுகின்றன. எச்செயலையும் இறைவனின் திருபெயரால் (பிஸ்மில்லாஹ்) துவக்கி இயன்ற வரை முயன்ற செயல் முனைந்தபடி முடிந்ததும் அல்ஹம்துலில்லாஹ் என்று நன்றியை நவின்றிடும் இறையடியார்களின் இனிய இயல்பை இயம்புகின்றன இந்த வசனங்கள்.

முதுமையில் குழந்தையை கோரிய ஜக்கரியா நபியிடம் இறைவனை அதிகமாக நினைத்து காலையிலும் மாலையிலும் துதிக்குமாறு அதிபதி அல்லாஹ் அறிவுறுத்தியதை அறிவிக்கிறது 3- 41 ஆவது வசனம். அறிவுறுத்தியபடி திக்ரில் திளைத்த ஜக்கரியா நபி அதன் விளைவாய் குழந்தை பேற்றைப் பெற்றார்கள். திக்ரில் திளைத்திருப்பதால் விரும்பியதை விழுமியதாக விழுப்பமானதாக பெறலாம்.

மெய்யாகவே மெய்யோன் அல்லாஹ்வை நம்புவோர் அல்லாஹ்வின் அழகிய பெயர்களை மொழிந்து உள்ளம் நிம்மதி பெறுவர் என்று பேசுகிறது 13- 28 ஆவது வசனம். அல்லாஹ்வை நினைவு கூரும்பொழுது உள்ளம் உயிர்ப்புடன் தூய்மை பெறுகிறது. இதயம் அமைதி அடைகிறது; இறைவனின் நெருக்கத்தைப் பெறுகிறது. அல்லாஹ்வின் அழகிய பெயர்களை அதிகமாக நினைப்பதால் வெற்றியடைவீர்கள் என்று அறிவிக்கிறது 8-45 ஆவது வசனம். எச்செயலையும் செய்யுமுன் அல்லாஹ்வை நினைவில் நிறுத்துவதால் அச்செயலில் வெற்றியடையலாம் என்று திளைத்திடும் திக்ரின் விளைவை விளக்குகிறது இவ்வசனம்.

அல்லாஹ்வின் திருப்பெயரை நினைவில் நிறுத்தி நித்தமும் துதிப்போரைத் தூயவன் அல்லாஹ் மன்னித்து புண்ணியன் ஆக்குவதைப் புகல்கிறது 33- 35 ஆவது வசனம். நாமும் திக்ரில் திளைத்து அல்லாஹ்வின் அருளால் பொருத்தமான நன்மைகள் நிறைந்த நல்ல மாற்றங்கள் வாழ்வில் ஏற்றங்கள் பெற்று வழுக்காது இழுக்குறாது இன்னல் இல்லாது எண்ணியபடி திண்ணியமாய் வாழ்வோம். புண்ணியர் ஆவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT