சிற்பி ஒருவர் சிற்பங்கள் ஐந்து:
கரிசூழ்ந்த மங்கலத்தில் நடராஜப் பெருமானும் எழுந்தருளியிருக்கிறார். இவரைப் பற்றியும் சுவாரசியமான கதை ஒன்று நிலவுகிறது. கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்தது உத்தர தேசம். இதனை ஆண்ட மன்னன் சிங்கவர்மன். ஆரம்பத்தில் கொடுங்கோலனாக இருந்த இவன், பின்னர் மனம் மாறினான். தன்னுடைய தவறுகளுக்குக் கழுவாயாகத் தவம் செய்யப் போனான். எந்த வனத்திற்குச் சிங்கவர்மன் சென்றானோ, அந்த வனத்தில்தான், பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அம்பலவாணரின் ஆடல் திருக்காட்சி காண்பதற்காகத் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் அருளாலும் ஆடல்வல்லானின் பெருங்கருணையாலும், சிங்கவர்மனும் ஆடல் காட்சியைக் கண்டான்.
பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும், அவனுக்கு ஒரு பணியை இட்டனர். அதன்படி, நடராஜப் பெருமானுக்கு, அதாவது ஆடல்கோல ஆண்டவனுக்குச் சிதம்பரத்தில் திருகோயில் எழுப்பினான். ஆடல் திருக்கோலத்தை எப்போதும் காணவேண்டும் என்னும் ஆசையில், சிற்பிகளைக் கொண்டு நடராஜ சிலா ரூபம் அமைக்கச் செய்தான். அவர்களும் தாமிரத்தில் (செப்பு உலோகம்) சிலாரூபம் சமைத்தனர்.
அந்தச் சிலையைக் கண்ட அரசன் சிங்கவர்மன் அசந்து போனான். தாமிரச் சிலையே இத்தனை அழகா? தங்கத்தில் வடிவமைத்தால். . . ? சிற்பிகளை அழைத்து, தலைமைச் சிற்பியான நமச்சிவாய ஸ்தபதியிடம் ஏராளமான பொன் கொடுத்தான். பொன்னுருவம் படைக்கும்படி ஆணையிட்டான்.
நாள் பார்த்து, ஆணை வேண்டி, பொன்னின் வார்ப்பெடுத்துப் புதுச் சிலையை வடித்தனர் சிற்பிகள். ஆயின், அந்தோ... இதென்ன அதிசயம்... தங்கச் சிலை, தன்னாலேயே தாமிரச் சிலையாக மாறிவிட்டது! தலைமைச் சிற்பி, தவியாகத் தவித்தார். மன்னனுக்குச் செய்தி போனது. நமச்சிவாய ஸ்தபதியின்மீதுதான் மன்னனுக்குச் சந்தேகம். பொன்னைத் திருடிவிட்டதாக ஸ்தபதி கைது செய்யப்பட்டார். அன்றிரவு. மன உளைச்சலோடு உறங்க முயன்ற மன்னனின் கனவில், சாக்ஷôத் ஆடல்வல்லான், காலைத் தூக்கி ஆடிக்கொண்டே காட்சி கொடுத்தார். தங்கமாக இருக்கத் தமக்கு விருப்பம் இல்லையென்று தெரிவித்தார்.
ஆண்டவனார் அருளாணையின்படி, தாமிரமாக மாறிக்கொண்ட இரண்டாவது சிலையைச் சிதம்பரம் திருக்கோயிலில் ஸ்தாபித்தனர். அதே ஆணையின்படி, முதலாவதாக வடிக்கப்பட்ட தாமிரச் சிலையைத் தென் திசைக்குத் தூக்கி வந்தனர். எந்த இடத்தில் சிலையின் சுமை அதிகப்படுகிறதோ, அந்த இடத்தில் சிலாரூபத்தை பிரதிஷ்டை செய்துவிடவேண்டும் என்றும் சிவனார் கூறியிருந்ததால், சுமை அதிகப்பட்ட செப்பறை என்னும் இடத்தில், அந்த அம்பலனாரைப் பிரதிஷ்டை செய்தனர்.
இதற்கிடையில், செப்பறையில் சிவனாருக்குக் கோயில் எழுப்பிய ராமபாண்டியனுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம். வாராது வந்த மாமணியாம் அம்பல நடராஜருக்குத் தனிச் சந்நிதி கட்டுவித்தான். ராமபாண்டியனுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை ஆட்சி செய்தான் வீரபாண்டியன் என்னும் சிற்றரசன். செப்பறைச் சிலையைக் கண்ட அவனுக்கும் நடராஜ வடிவத்தின்மீது கரைகாணா காதல் தோன்றியது. சிற்பிகளிடம் இரண்டு சிலைகள் வடித்துக் கொடுக்கும்படி வேண்டினான். அவர்களும் இசைந்தனர்; எழிலார்ந்த சிலைகள் இரண்டினை வடித்தனர்.
இதுவரைக்கும் எல்லாம் சரிதான். இதற்கு மேல்... அரிதான ஒன்று தனக்குக் கிட்டிவிட்டால், பிறருக்கு அது கிட்டக்கூடாது என்றெண்ணும் வக்கிரம், வீரபாண்டியனைப் பற்றியது. இத்தனை அழகான சிலைகளை வடித்த சிற்பிகள், வேறு யாருக்கேனும் இவ்வாறே செய்துவிட்டால்... தலைமை ஸ்தபதியாம் நமச்சிவாயரைக் கொல்லும்படி உத்தரவிட்டான். தன்னிடம் கிடைத்த சிலைகளைக் கரிசூழ்ந்த மங்கலத்திலும் கட்டாரிமங்கலத்திலும் ஸ்தாபிக்க எண்ணினான்.
சிற்பியின்மீது இரக்கம் கொண்ட அவனுடைய வீரர்கள், அவரைக் கொல்லாமல், கைகளை மட்டும் வெட்டினர். எப்படியோ, செய்தி ராமபாண்டியனுக்குச் சென்றது. வீரபாண்டியனின் கொடூரத்தைக் கண்ட அவன், சிற்பியின் கைகளைத் துண்டித்ததைப் போலவே, வீரபாண்டியனின் கைகளைத் துண்டிக்கச் செய்தான். இருப்பினும், வீரபாண்டியன் ஆசைப்படியே, கரிசூழ்ந்த மங்கலத்திலும் கட்டாரிமங்கலத்திலும் பிரதிஷ்டை செய்தான். நமச்சிவாயச் சிற்பியின் திறமை வீணாகக்கூடாது என்பதற்காக, சிற்பக் கலையைப் பிறருக்கு அவர் கற்றுக்கொடுக்க வசதியாக மரக் கைகளைப் பொருத்தச் செய்தான்.
இறைவனையே சரணடைந்த நமச்சிவாயர், மரக்கைகளைக் கொண்டு, முன்னைக் காட்டிலும் அழகான சிலாரூபமொன்றைப் படைத்தார். சிலையின் எழிலைக் கண்டு மனம் பறிகொடுத்த ராமபாண்டியன், அந்த அழகைக் கொஞ்சிக் களித்துக் கன்னத்தில் கிள்ளினான். அவனுடைய கிள்ளலை அப்படியே தமது கன்னத்தில் ஏந்திக் கொண்டார் அம்பலவாண அழகர். கிள்ளிய வடு உடனாய அச்சிலை, கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டிக்கப்பட்டது. (கருவேலங்குளம் என்பது நாங்குநேரி-களக்காடு மேலக் கரிவலம் குளத்திலும், கட்டாரி மங்கலம் என்பது சாத்தான் குளம் அருகிலும், செப்பறை என்பது நாம் ஏற்கெனவே கண்டிருக்கும் ராஜவல்லிபுரத்திற்கு அருகிலும் உள்ளன.)
மேற்கூறிய 5 சிலை கதைக்குச் சிற்சில மாற்றங்கள் ஆங்காங்கே கூறப்பட்டாலும், கதையின் முக்கிய போக்கு இதுதான். சிற்பிக்கு மரக்கைகளெல்லாம் பொருத்தவில்லை, வெட்டுப்பட்ட கையில் அகப்பையைக் கட்டிக்கொண்டு அவர் வார்ப்பெடுத்தார் என்று சில வேறுபாடுகளும் உண்டு. இந்தக் கதையின் சிங்கவர்மன்தான், தொண்டை மண்டலத்தில் பல்லவப் பேரரசு அமைவதற்குக் காரணமான சிம்மவர்மன் என்றும் எண்ணப்படுகிறது. சிதம்பரத்தையும் செப்பறை, கரிசூழ்ந்த மங்கலம், கட்டாரிமங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களையும் சேர்த்து, "பஞ்சப்படி மத் தலங்கள்' என்றும் "பஞ்ச நடராஜத் தலங்கள்' என்றும் அழைக்கிறார்கள். நடராஜப் பெருமானை எப்படியெல்லாம் நம் முன்னோர்கள் ரசித்திருக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது.
(தொடரும்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.