நாம் மனம் என்னும் நிலத்தை, சத்தியம் என்னும் ஏரால் உழ வேண்டும்; அதில் விருப்பம் என்னும் விதையை விதைத்து, பொய் போன்ற களைகளை நீக்கி, பொறுமை என்னும் நீரைப் பாய்ச்ச வேண்டும்; "தான்' என்னும் அகந்தையை நீக்கி, மனப்பக்குவம் என்னும் வேலியை இட வேண்டும்; அத்தகைய நிலையில் சரணாகதி என்னும் உணர்வுடன் நின்றால் சிவமார்க்கம் என்ற விளைச்சலைப் பெறலாம். இந்த உணவை நாம் உண்பதன் மூலம் ஈசனை அடையலாம்.
-திருநாவுக்கரசர்
நன்மையைத் தரும் மங்கள வடிவம் உடையவரும், கலியுகத்தில் மக்களுக்கு நன்மையை அளிப்பவரும், கருணைக்கடலாக இருப்பவரும், சங்கம் முதலான தெய்விக ஆயுதங்களை ஏந்தியவரும், குருவாயூரில் இறைவனாக விளங்குபவரும் ஆகிய உங்களுக்கு வணக்கம்.
-ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம்
திருவரங்கப்பெருமானே! நான் உன்னுடைய திவ்ய தேசங்கள் எதிலும் பிறக்கவும் இல்லை, வாழவும் இல்லை; வாழ்க்கை நடத்துவதற்கு உதவும் வகையில் எனக்குக் காணி நிலமும் இல்லை; எனக்கு உதவி செய்வதற்கு உன்னைத் தவிர, உறவினரும் வேறு யாரும் இல்லை.
"இந்த உலகில் வாழ்வதற்கு உன் திருவடிகள்தான் ஆதாரம்' என்று உணர்ந்து, நான் உன் திருவடிகளைப் பற்றி வாழவும் இல்லை. மேலான பரம்பொருளே! கார்மேகம் போன்ற கரியநிறம் உடையவனே! என் கண்ணப்பெருமானே! "திக்கற்ற எனக்கு நீயே துணை!' என்று நான் கதறுகிறேன். உன்னைத் தவிர என் துன்பத்தை நீக்குவதற்கு எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? (நீ விரைந்து வந்து என்னைக் காப்பாற்று!)
-தொண்டரடிப்பொடியாழ்வார்
திருமாலை 29
""என்னிடமிருந்தே எல்லாம் தோன்றுகின்றன; என்னிடம் எல்லாமே அடங்கியிருக்கின்றன; என்னிடமே மீண்டும் எல்லாம் திரும்புகின்றன. நானே என்றும் உள்ள பிரம்மம்'' இது பிரம்மஞானியின் அனுபவமாக விளங்குகிறது.
-கைவல்ய உபநிஷதம்
என்னைப் போன்று சரணடைந்த அறிவில்லாதவர்களின் தளைகளை நீக்குபவரும், தளைகள் இல்லாதவரும், எல்லையற்ற கருணையுள்ளவரும், ஓய்வு இல்லாமல் செயல் புரிபவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.
தன்னுடைய அம்சத்தால் உடல் எடுத்தவர்கள் எல்லோருடைய மனங்களிலும் பகவான் இருக்கிறார். அந்தப் பெரியவராகிய பகவானுக்கு நமஸ்காரம்.
-ஸ்ரீமத் பாகவதத்தில் கஜேந்திரன்
சுவையான உணவு படைப்பதற்கு அன்புள்ள தாய் இருக்க வேண்டும்; ஒழுக்கமுள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் இருக்க வேண்டும்; நல்ல அறிவு வளரவும், ஆற்றல் பெருகவும், சிறந்த ஆசான் இருக்க வேண்டும். தூய்மையான சிந்தனை பிறப்பதற்கு, இறைவன் மீது பக்தி இருக்க வேண்டும்.
-உபநிஷதம்
பல நிறங்களையுடைய பசுக்களின் பால் ஒரே வெண்மையுடையதாக இருக்கிறது. அது போலவே ஞானிகள் பலவகைப்பட்ட சரீரங்களில் உள்ள ஜீவன்களை ஒரே அறிவுமயமானவர்களாகக் காண்கிறார்கள்.
-பிரம்மபிந்து உபநிஷதம்
ஆத்மசுத்தியாகிய தொழிலைச் செய்யுங்கள். அதில் எப்போதும் விழிப்போடு இருங்கள்; அதே சிந்தனையுடன் இருங்கள்; முக்தி பெறுவதிலேயே கருத்துச் செலுத்துங்கள்.
-மகா பரிநிர்வாண சூக்தம்
தூய்மையானவனாக இரு. அதற்கும் மேலாக, நேர்மையுடன் இரு. ஒரு விநாடியும் இறைவன் மீது நம்பிக்கை இழந்துவிடாதே! அப்போது நீ ஒளியைக் காண்பாய்.
-சுவாமி விவேகானந்தர்
என் கால்கள் உங்களுடைய திருத்தலங்களுக்குச் செல்வதிலும், என் கைகள் உங்களுக்குப் பூஜை செய்வதிலும், என் கண்கள் உங்களுடைய வடிவத்தைத் தரிசிப்பதிலும், என் மூக்கு உங்கள் பாதத்தில் அர்ச்சித்த துளசியை முகர்வதிலும், என் காதுகள் உங்களுடைய கதைகளைக் கேட்பதிலும் இன்புறுவதற்கு என்னுடைய துன்பங்களைப் போக்கி அருள் புரியுங்கள்.
-ஸ்ரீ நாராயணீயம்
எவன் எந்த வித்யையைக் கற்றிருக்கிறானோ, அதுதான் அவனுக்கு மேலான தெய்வம். அதைத்தான் அவன் பூஜித்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதுதான் அவனுக்கு உதவி செய்யும்.
-விஷ்ணுபர்வம்
மெüனம் அறிவிற்கு அழகு தருகிறது. பொறுமை திறமைக்கு ஏற்றது.
-கவி காளிதாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.