வெள்ளிமணி

தொழுகைக்குப்பின் திக்ரு

தொழுகை இஸ்லாத்தின் இரண்டாம் கடமை. திக்ரு என்பது இறைவனை இதயத்தில் பதித்து பக்குவமாய் தக்க முறையில் மிக்க உள்ளச்சத்தோடு நாவாலும் துதிப்பது.

மு. அ. அபுல் அமீன்

தொழுகை இஸ்லாத்தின் இரண்டாம் கடமை. திக்ரு என்பது இறைவனை இதயத்தில் பதித்து பக்குவமாய் தக்க முறையில் மிக்க உள்ளச்சத்தோடு நாவாலும் துதிப்பது. அவசர யுகத்தில் வாழும் இக்காலத்தில் எக்கணமும் எகிறி ஓடும் வேகத்தில் தொழுகை முடிந்ததும் முதலில் எழுந்து முட்டி மோதி விழுந்தடித்து விரையாது இருப்பில் நிதானமாக அமைதியாக அடக்கமாக அமர்ந்து திக்ரில் திளைப்பதால் விளையும் பயன்களை விளக்குவதே இக்கட்டுரை.

நீங்கள் தொழுகையை முடித்தபின் உங்கள் நிலையிலும் இருப்பிலும் படுக்கையிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறி திக்ரு செய்து கொண்டே இருங்கள் என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 4- 103 -ஆவது வசனம். தொழுது முடித்தபிறகு இறைவனை நினைத்து உங்கள் நாவாலும் உள்ளத்தாலும் திக்ரு செய்யுங்கள் என்று இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கிறது தப்ஸீர் அல்கர்த்துபீ 373/ 5.

தொழுகைக்குப்பிறகு செய்யும் திக்ருகளுக்கு அதிக நன்மையும் எண்ணற்ற சிறப்புகளும் உள்ளன. அந்நேரம் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும் நேரம். வணக்க வழிபாடுகள் ஏற்று கொள்ளப்படும் காலம். தொழுகை முடிந்த பிறகு உள்ள நேரம் திக்ரு செய்வதற்கான மிக உகந்த நேரம். கண்டிப்பாக இறைவனிடம் அங்கீகாரம் பெறும் காலம். ஒவ்வொரு நாட்ட தேட்டங்களும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படும் சமயம்.
ஒருவர் தொழுகைகளை முடித்த பிறகு இறைவனை நினைவு கூர்ந்து திக்ரில் ஈடுபட வேண்டும். அல்லாஹ்விடம் பிழை பொறுக்க இறைஞ்ச வேண்டும். இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த உடன் இறைவனிடம் பிழை பொறுக்க மூன்று முறை முறையிடுவார்கள். நூல்- முஸ்லிம் 591. தொழுகையில் ஏற்படும் குறைகளை இறைவன் நிறைவு செய்யும் பொருட்டு இவ்வாறு இறைஞ்ச வேண்டும். இறைவா நீ கொடுப்பதைத் தடுப்பார் இல்லை. நீ தடுப்பதைக் கொடுப்பார் இல்லை. இறைவா, உன் அருள் இன்றி எந்த வாய்ப்பினாலும் எத்தனை செல்வத்தினாலும் எப்பயனையும் அடைய முடியாது என்று மொழிந்து நன்றாய் முடிவு அமைய முடிவில்லா முதலோன் அல்லாஹ்வின் அருளைக் கோர அறிவிக்கிறது பத்ஹுல் பாரி 251/3.
நீங்கள் சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனையே நோக்கி நில்லுங்கள் என்ற 94-7, 8- ஆவது வசனங்களுக்கு உங்கள் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, இறைவனை நோக்கி உங்கள் தேவைகளைக் கேட்டு பெறுங்கள் என்று விளக்கம் தருகின்றன தப்ஸீர் அத்தபரீ 497/ 24 தப்ஸீர் அல்குர்த்துபீ 108 / 20. தோழர் முஆத் (ரலி) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவா, உன்னைத் திக்ரு செய்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும்அழகிய முறையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் எனக்கு அருள்புரி என்று இறைவனிடம் இறைஞ்ச இயம்பினார்கள். நூல்- நஸஈ 9857, அபூதாவூத் 1301, அஹ்மது 22119.
அல்லாஹ்விற்கு மிக அழகான பெயர்கள் உள்ளன. அப்பெயர்களால் அல்லாஹ்வை அழைத்திட அறிவுறுத்துகிறது அருமறை குர்ஆனின் 7-180 ஆவது வசனம். அதற்கு விளக்கமாக விழுமிய நபி (ஸல்) அவர்கள் விளம்பியது. அல்லாஹ்வின் தொன்னூற்றி ஒன்பது திருப்பெயர்களைத் தெரிந்து தெளிந்து உவந்து உள்ளச்சத்தோடு மொழிவோர் அழிவில்லா சொர்க்கத்தில் நுழைவர். அறிவிப்பவர் - அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி 2736.
நீங்கள் வெற்றியடைய அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள் என்று 62-10- ஆவது வசனம் கூறுகிறது. தொழுகை முடிந்ததும் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை நிறைவேற்ற பரவிச் செல்ல பகரும் இவ்வசனத்தின் இறுதி எந்த கடமையை ஆற்ற எங்கு செல்லினும் அல்லாஹ்வின் நினைவை அகற்றாது செய்யும் செயலில் வெற்றி கிட்டும் என்று எடுத்துரைக்கிறது. கடமையான தொழுகைகளுக்குப்பிறகு திக்ரில் ஈடுபடுவோர் ஏமாற்றம் அடையார் என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை முஸ்லிம் நூலில் காணலாம்.
தொழுகைகளுக்குப்பிறகு அதிகமாக திக்ரு செய்யும் அடியார்களாக இருப்பதற்கு நாம் ஆர்வம் கொள்ள வேண்டும். அதனால் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழும் அடியார்களாக திகழ்வதோடு அதிக நன்மைகளைச் சேர்த்து இறைவனோடு நெருங்கி இருக்க முடியும். அத்தகு அரும்பேற்றை அல்லாஹ் நமக்கு அருள்வானாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT