வெள்ளிமணி

ஆதமின் மக்களில் பேதம் இல்லை

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்து பின்னர் தரித்திருக்கச் செய்தவன் அல்லாஹ் என்று அறிவிக்கிறது அருள்மறை குர்ஆனின் 6-98-ஆவது வசனம். மனிதர்கள் ஆதம் நபி வழி வந்தவர்கள்.

மு. அ. அபுல் அமீன்


உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்து பின்னர் தரித்திருக்கச் செய்தவன் அல்லாஹ் என்று அறிவிக்கிறது அருள்மறை குர்ஆனின் 6-98-ஆவது வசனம். மனிதர்கள் ஆதம் நபி வழி வந்தவர்கள். ஆதம் நபி மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்ற விளக்கம் அஹ்மது நூலில் 8736-ஆம் எண்ணில் தரப்படுகிறது.
உங்கள் இறைவன் வானவர்களை நோக்கி நான் மனிதர்களை களிமண்ணால் படைக்கப் போகிறேன் என்று கூறி, நான் அவரைச் செப்பனிட்டு அவருக்குள் நம்முடைய உயிரையும் புகுத்தினால் அவருக்கு நீங்கள் பணிந்து வழிபடுங்கள் என்று கூறியதையும் 38-71, 72-ஆவது வசனங்கள் விவரிக்கின்றன.
மனிதனின் உடலைச் சீரான வடிவத்தில் உருவாக்கிய பின்னர் அதில் அல்லாஹ் உயிரை ஊதினான். உயிர் பெற்ற மனிதர் தும்மினார். உடனே அல்லாஹ்வின் உதவியினால் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். ஆதம் நபி மொழிந்த முதல் மொழி எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்ததே. அதற்கு மறுமொழியாக அல்லாஹ் கருணை மொழியை வழங்கினான். 
அவர்களை வானவர்களிடம் சென்று அவர்களுக்குச் சலாம் சொல்லப் பணித்தான். அவ்வாறே ஆதம் நபி வானவர்களுக்கு "அஸ்லாமு அலைக்கும்' என்று சலாம் சொன்னார்கள். வானவர்கள் "அலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி' என்று பதில் கூறினர். ஆதம் நபி இறைவனிடம் திரும்பினார்கள். அதுதான் உங்கள் சந்ததிகள் பரிமாறிக்கொள்ளும் முகமன் என்று கூறினான் அல்லாஹ். நூல்-திர்மிதீ.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஸலாம் என்னும் முகமன் கூறுவது இதன் அடிப்படையில் அமைந்தது. ""முதன் முதலில் ஆதம் நபி கற்றது சலாம் உரைத்தலே'' நூல்-புகாரி 209/15. சலாம் உரைப்பது உலகாளும் அல்லாஹ்விற்கு உவப்பானது. ""அஸ்ஸலாம் என்பதற்கு அமைதி என்று பொருள். இவ்வுலகில் அமைதி நிலவ பரஸ்பரம் சலாம் சொல்வது வழிவகுக்கும். நூல்-அபூதாவூத் 989. ""நீங்கள் இறை நம்பிக்கை கொள்ளாதவரை சொர்க்கம் புக முடியாது. ஒருவரையொருவர் நேசிக்காதவரை இறை நம்பிக்கை கொள்ள முடியாது. நேசம் நிலைக்க ஸலாம் சொல்லுங்கள்'' நூல்- முஸ்லிம் 93.
ஆதமுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்து அவைகளை அந்த வானவர்களுக்கு முன் கொண்டு வந்து "நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் இதோ இருக்கும் பொருள்களின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்' என்று அல்லாஹ் கூறியதைத் தெரிவிக்கிறது 2-31 -ஆவது வசனம். இந்த வசனத்தில் வானவர்களுக்கு ஆதம் நபிகளின் சிறப்பை உணர்த்துகிறான். அந்த வானவர்களினும் ஆதம் நபி கல்வியில் சிறப்பு பெற்றதைச் செப்புகிறான் இறைவன் என்று இயம்புகிறது இப்னு கதீர் 222/1. இந்நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ் கல்வியின் சிறப்பை மனிதர்களுக்கும் உணர்த்துகிறான்.
ஒரே மனிதரிலிருந்து உங்களைப் படைத்தவன் கூடி வாழ்வதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான் என்று செப்புகிறது 7-189-ஆவது வசனம். ""ஆதம் நபி மனைவியோடு சேர்ந்து வாழ்ந்தார். நேசம் கொண்டிருந்தார். மேலும் அவள் மூலம் அவர் நிம்மதி பெற்றார்'' என்று பேசுகிறது இப்னு கதீர் 525/3.
மனிதகுல தந்தையாகிய ஆதம் நபி அவர்களின் காலம் முதலே எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த இயல்பான சூழலை உருவாக்கித் தந்தான். அதாவது ஒருவர் அவரின் துணைவியோடு சேர்ந்து வாழ்வதையும், அதனால் நிம்மதி பெறுவதையும் அமைத்திருக்கிறான். அல்லாஹ் ஆதம் நபி அவர்களை அவர்களின் மனைவியோடு சொர்க்கத்தில் வாழ வைத்தான். பின்னர் அவர்களைப் பூமியில் இருவேறு இடங்களில் இறக்கி ஒருவரையொருவர் தேட வைத்து, இறுதியில் மக்காவில் உள்ள அரபாவில் சந்திக்க வைத்தான். அதன் பிறகு மக்களைப் பெற்றனர். சந்ததி உருவானது.
""அனைவரும் ஆதமின் மக்களே. அவர்களுக்குள் நாட்டாலோ, மொழியாலோ, நிறத்தாலோ ஏற்றத்தாழ்வு இல்லை'' நூல்-அஹ்மது 23489. நாடு, மொழி, நிறம், பழக்க வழக்கம் எல்லாம் வாழும் பகுதியைப் பொறுத்து அமைவது. நாடு, மொழி, பழக்க வழக்கம் வாழும் பகுதியைச் சுட்டிக் காட்டும் அடையாளங்களே. மனிதர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவன அல்ல.
ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் கடலில் நாம்தான் அவர்களைச் செல்லும்படி செய்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்தவற்றில் அவர்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்று வையம் காக்கும் வல்லவன் அல்லாஹ் 17-70- ஆவது வசனத்தில் கூறுகிறான்.
ஆதமுடைய மனிதர்கள் அறிவு, ஆற்றல், ஆட்சி, எண்ணியதை எழுதி, பேசி பிறருக்குத் தெரிவித்தல், நல்லது கெட்டதைப் பிரித்தல், உணர்ந்து விளங்கி செயல்படுதல், புதியன காணும் புது முயற்சிகள், வாழ்வை வகுத்து வாழ்தல், இம்மையில் நன்மைகள் புரிந்து மறுமைக்கும் வலுவூட்டல் முதலிய பிற உயிரினங்களுக்கு இல்லாத சிறப்புகளைப் பெற்றுள்ளதைப் பேசுகிறது இந்த வசனம்.
51-56-ஆவது வசனம் ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்கன்றி நான் படைக்கவில்லை என்று பகர்கிறது. என்னை வணங்குவதற்காக என்று இறைவன் இயம்புகிற இபாதத் என்னும் அரபிச் சொல்லுக்கு "கீழ்ப்படிதல்-பணிதல்' என்பது பொருள். இவ்வுலக மக்கள் அனைவரும் இறைவனைப் பணிந்து வணங்குகின்றனர். அந்த முறைகளில் முரண்கள் உள்ளன. முரண்கள் முட்டுக்கட்டை ஆகக் கூடாது ஒற்றுமைக்கு. இதனை உணர்ந்து மனிதநேய மாண்போடு ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். அப்பொழுது நாகரீக, நவீன வளர்ச்சியில் முழுமை பெற முடியும். இவ்வுலகில் அமைதியைத் தொடர முடியும். ஆதமின் மக்கள் அனைவரும் பேதம் இல்லாதவர்களாக வளமாய் வாழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT