வெள்ளிமணி

தன்னிகரில்லா தவமுனி!

விஷ்ணுபுராணத்தில் கூறப்பட்டுள்ள பன்னிரண்டு புண்ணிய புருஷர்களில் தேவரிஷியான நாரத மகரிஷியும் ஒருவர்.

எஸ். எஸ். சீதாராமன்


விஷ்ணுபுராணத்தில் கூறப்பட்டுள்ள பன்னிரண்டு புண்ணிய புருஷர்களில் தேவரிஷியான நாரத மகரிஷியும் ஒருவர். இதன்படி, முக்காலங்களையும், மூன்று உலகங்களையும் கடந்து செல்லும் சக்தியுடையவர்; இதனால் இவரை திரிலோக சஞ்சாரி என்பர். இவர் செல்லும் இடங்களிலெல்லாம் ஏதோவொரு கலகம் ஏற்பட்டு விடும்; ஆனால் முடிவில் நன்மையே கிட்டும். இதனால் தான் “நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்ற ஒரு பழமொழி உருவானது. 

ஸ்ரீமத் பாகவதம் அருளிய வேத வியாசர்; தனக்கு ஏற்பட்ட ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள நாரத மகரிஷியை அணுகியுள்ளார். இப்படி எழுதிய ஸ்ரீமத் பாகவதம் அப்படியே சாப்பிடக்கூடிய கனிந்த பழமாக, வேதத்தின் சாரமாகக் கருதப்படுகிறது. இதுபோல் வியாசர் அருளிய பதினெண் புராணங்களில், நாரதீய புராணமும் ஒன்றாகும். இதில் நாரதரின் வரலாறு மற்றும் அனைவரது வாழ்வின் நீதி நெறிகளை உலகிற்கு கூறும் வகையில் 207 அத்தியாயங்களில் 25,000 சுலோகங்களைக் கொண்டு மலர்ந்துள்ளது. 

பகவானின் திருப்திக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயலும், அவனது உன்னத அன்புத் தொண்டு அல்லது பக்தி யோகம் எனப்படுகிறது. மேலும், ஞானம் என்பது இந்த பக்தி யோகத்துடன் இணைபிரியாததாக ஆகிவிடுகின்றது. யோகப்பயிற்சியால் புலன்களைக் கட்டுப்படுத்துவதால் ஒருவன் ஜடத்துன்பத்தில் இருந்து தற்காலிக விடுதலையைப் பெறலாம்; ஆனால் பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டினால் மட்டுமே உண்மையான ஆத்ம திருப்தியை பூரணமாகப் பெற முடியும்”என வேதவியாசர் கேட்ட ஒரு வினாவிற்கு தும்புறு நாரதர் விடையளித்து அருளினார். 

இவர், உண்மையான மிகச்சிறந்த இசைஞானி ஆனதாலும், “மஹதி என்னும் வீணையை தாமே உருவாக்கி; அந்த வீணையைக் கொண்டு இசையை மீட்டியவாறு நாராயணனின் புகழை பாடிக்கொண்டு எந்தவித தடங்கலுமின்றி மூவுலகிலும் சஞ்சரிக்கும் விசேஷ சலுகையைப் பெற்றிருந்த தீவிரமான விஷ்ணுபக்தர்.  “நாரத பக்தி சரித்ரம்” என்ற நூலின் மூலம் பக்திமார்கத்தின் சிறப்பினை இவர் எடுத்துரைக்கின்றார்.  

மகாதேவன் மற்றும் மகாவிஷ்ணு இருவரிடமும் நன்மதிப்பை பெற்று இருவரது பரிபூரண அருளுக்கு பாத்திரமாக விளங்கியவர். “பிரகலாத, நாரத, பராசர, புண்டாசிக” என்ற பக்திமான்களின் வரிசையில் நாரதரும் இருந்து வருகிறார். நான்கு வேதங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், கலைகள், ஒலி மற்றும் ஒளிகளின் வடிவால் ஏற்படும் தாக்கங்கள் அனைத்தையும் அறியும் தெய்வீக ஆற்றல் பெற்று இறப்பில்லா நிலையைப் பெற்றதால்; இவரை தன்னிகரில்லாதவராக வேதம் கூறுகிறது.   

திருவையாறு சத்குரு தியாக பிரம்மத்தின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக, ஒரு நாள் இரவு அவர் துயிலில் இருந்தபோது கனவில் தோன்றிய நாரத மகரிஷி “ஸ்வரார்ணவம்” என்னும் சங்கீத நூலைக் கொடுத்து மறைந்தார். அன்று முதல் சத்குருவின் ஞானஅழகுக்கு அணி சேர்ப்பதைப்போல் அவரது சங்கீத ஊற்று மேலும் ஆறாகப்பெருக ஆரம்பித்தது. அன்று முதல் தன் ஆத்மார்த்த குருவாக நாரத மகரிஷியை போற்றி, அவர் மீதுள்ள பக்தியின் வெளிப்பாடாக பல கீர்த்தனைகளை இயற்றியிருந்தாலும்; குறிப்பிட்டு சொல்லும் வகையில்; “ராக பைரவி’ என்ற ராகத்தில், ஆதிதாளத்தில் ஸ்ரீநாரத முனி "குரு ராய' என்று தொடங்கும் பாடலையும் அவருக்கு சமர்ப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் பாதையில் கடலங்குடி என்ற ஊரிலுள்ள பெருமாள் கோயிலில் நாரதருக்கு தனி சந்நிதி உள்ளது. இது தவிர கர்நாடக மாநிலம், தவனகிரி மாவட்டத்தில் சிகட்டேரி என்ற ஊரில் நாரதமுனிக்கென்று தனி ஆலயம் உள்ளது.

தேவரிஷி நாரதரின் ஜெயந்தி நந்நாள் இவ்வாண்டு, மே மாதம் 9-ஆம் தேதி (சித்திரை 26) வருகிறது என ஸ்ரீதிக்ஷத்ர சகடபுரத்தில் வெளியிடப்பட்டுள்ள பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT