வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 114

கிரேக்கப் பதிவுகளைக் கொண்டு இப்பகுதியைப் பற்றி ஆய்வுசெய்த கால்டுவெல் பாதிரியார், "பண்டைக் காலத்தில் ஐரோப்பாவிற்கு அரிசியை ஏற்றுமதி செய்த இந்தியத் துறைமுகங்களிலேயே மிகச் சிறந்த அரிசி

டாக்டா் சுதா சேஷய்யன்


கிரேக்கப் பதிவுகளைக் கொண்டு இப்பகுதியைப் பற்றி ஆய்வுசெய்த கால்டுவெல் பாதிரியார், "பண்டைக் காலத்தில் ஐரோப்பாவிற்கு அரிசியை ஏற்றுமதி செய்த இந்தியத் துறைமுகங்களிலேயே மிகச் சிறந்த அரிசி வகையை அதிக அளவில் ஏற்றுமதி செய்தது, தாமிரவருணியின் கழிமுகப்பட்டினமான கொற்கை' என்கிறார். 

கிரேக்க-ரோமானிய அரசர்களும் மக்களும், கொற்கை முத்தின் மீது மிக்க காதல் கொண்டிருந்தனர். ரோமானியப் படைத் தலைவர்கள், அரசப் பிரதானிகள், பிரபுக்கள் ஆகியோரும் அவர் தம் மனைவிமாரும் தம்முடைய ஆடைகளின் விளிம்புகளில் முத்துக்களை வைத்துத் தைத்துக் கொண்டனராம். கழுத்துகளில் முத்து மாலைகளைச் சரம் சரமாக அணிந்து கொண்டனராம். 

உலகப் பேரழகியாகப் போற்றப்பட்ட பேரரசி கிளியோ பாட்ரா, கொற்கை முத்தின்மீது மிகுந்த பிரேமை கொண்டிருந்தாளாம். தன்னுடைய காதணியில் விலையுயர்ந்த முத்துக்களைப் பதித்திருந்தாள். முத்தின் பள பளப்பிலும், எழிலிலும் மயங்கிப் போன அவள், கொற்கை முத்துக்களை உரைத்து, அந்தத் துகள்களை நேரடியாகவும், மதுவில் கரைத்தும் அருந்துவாள். கிளியோபாட்ராவை எதிர்த்துப் புறப்பட்ட புகார்களில், விலையுயர்ந்த பாண்டிய முத்துக்களை அவள் அரைத்துப் பருகியதே பிரதானமாகக் கூறப்பட்டுள்ளது. 

கொற்கைத் துறைமுகப் பகுதியில் கடல் கொள்ளையரின் நடமாட்டம் இல்லையென்பதும், கடல்கொள்ளையரைப் பாண்டியரும் சோழரும் அடக்கி வைத்திருந்தனர் என்பதும், இதனால் தமிழகத்தோடு வணிகம் செய்வதில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளன.

கொற்கை முத்தின்மீது கொண்ட மதிப்பினால், ரோமானியர்கள் ஏராளமான பொற்காசுகளைக் கொடுத்து இவற்றை வாங்கினர். பல்லாயிரக்கணக்கான வெண்பொற்காசுகளுக்கு நிகரான பொன் கட்டிகளையும் வெள்ளிப்பாளங்களையும் ரோமானியர்கள் பாண்டிநாட்டில் கொட்டியதாகப்

"ப்ளைனியின் பதிவுகள்' வழி அறிகிறோம். இதனால், தங்கள் நாடு வறுமையடைவதாகக்கூட ரோமானியர்கள் வருந்தினராம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னர், ரோமானியப் பெண் ஒருத்தியை மணமுடித்திருந்ததாகவும் தெரிகிறது. 

சித்திரை வைகாசி மாதங்களில் முத்துக் குளியல் முனைப்போடு நடந்துள்ளது. அப்போதே முத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு வணிகரும் வெளிநாட்டு வணிகரும் கொற்கையில் குவிந்திருந்தனர். 

முத்துக்குளியலுக்கு ஏதுவாக, ஓடங்கள், தோணிகள், நாவாய்கள், மரக்கலங்கள், கப்பல்கள் ஆகியவை வகைவகையானஅளவுகளிலும் வடிவங்களிலும் கட்டப்பட்டுள்ளன. 

எகிப்து நாட்டின் தீப்ஸ் நகரத்தில் கிடைக்கப்பெற்ற பதிவுகளில், "பண்டு நாட்டோடு அவர்களுக்கு இருந்த வணிகத் தொடர்பு' சிலாகிக்கப்படுகிறது. "பண்டு நாட்டுப் பொருள்களாக முத்தும் பவழமும்' முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளன. ஆக, "பண்டு நாடு' என்பது "பாண்டிய நாடே' என்றும், கடைச் சங்க காலத்து வணிகம் என்பதனால், கொற்கை வழியாகவே இவ்வணிகம் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கொற்கையைப் பற்றிய பழம்பாடல் ஒன்று, இன்னமும் ஒரு சில முதியவர்களிடம் புழக்கத்தில் உள்ளது. 

"ஆலமரம் அரசமரம் ஆனதிந்த நாடு
        அதன்பிறகு புன்னைமரம் ஆனதிந்த நாடு
நாலாம் யுகம் தன்னில்வன்னிமரமான நாடு
        நால் திசையும் கீர்த்தி பெற்று நலமிகுந்த நாடு
அக்கரையும் மதிபுனையும் சொக்கலிங்க ஈசன்
       அழகுமுடி கொண்ட ஐயன் அருள்புரியும் வண்மை 
திக்கனைத்தும் புகழ்நின்ற ஜகதேவி செழுகிநங்கை
      சென்னிவெற்றி வேல்தாய் முக்கியமாய் அருள்புரியும்
கோட்டைவாழ் ஐயன் முகனையுடன் சிறந்திருக்கும்...
      நாவலடி மெய்யர்....'

மேற்காணும் பாடல், முழுமையாகக் கிடைக்கும் எனில் நன்றாக இருக்கும். சிவபெருமானை, "நாவல் அடி மெய்யர்' என்று வர்ணிப்பது சிந்தனைக்குரியது. 

பல்லாண்டு காலத்திற்கு மிக்க பெரும் புகழுடன் திகழ்ந்த கொற்கை, கடல் நீர் உள் புகுந்ததாலும், நிலம் அரிக்கப்பட்டதாலும், தனது பெருமையைத் தொலைத்தது. மண்மேடிட்டுப் போன கொற்கையில், வணிகம் தொடர முடியவில்லை. 

12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளில், காயல் என்னும் ஊர், பாண்டிய நாட்டுத் துறைமுக நகரமாகச் செழிக்கத் தொடங்கியது. இந்த ஊரும் முதலில் கடற்கரையில் அமைந்திருந்தது. நாளடைவில் கடல் பின்தங்கிவிட, இப்போது கடற்கரையிலிருந்து உள்ளமைந்த ஊராக, மிகுதியும் சிதைந்துவிட்ட சிற்றூராக இருக்கிறது. 

காயல் என்னும் துறைமுக நகரம் செழித்தது குறித்தும் பல்வேறு பதிவுகள்காணப்படுகின்றன. 

13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இத்தாலியச் செல்வந்தரும் வர்த்தகப் பயணியுமான மார்க்கோபோலோ என்பார். சீன-மங்கோலியப் பேரரசோடு அணுக்கத் தொடர்பு கொண்டிருந்த போலோ, இலங்கை இளவரசன் சாவகன் மைந்தன் என்பவனின் உதவியோடு பாண்டி நாட்டிற்கும் வந்தார். இவர் வந்தபோது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னரின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

மார்க்கோபோலோ, காயல் நகரத்தைப் பற்றியும் முத்துக் குளியல் நடைபெற்றதைப் பற்றியும் மிக நீண்ட பதிவைச் செய்துள்ளார். 

காயல், பாண்டிநாட்டின் சிறந்த துறைமுகப்பட்டினமாகும். அரேபியா, ஈடன் போன்ற பல நாடுகளின் கப்பல்கள் இங்கு வருகின்றன. குதிரைகளையும் பலவகைப் பொருள்களையும் இறக்குமதி செய்கின்றன. இங்குத் தங்கும் கப்பல்கள், காயலிலிருந்து பொருள்கள் பலவற்றை ஏற்றிச்செல்கின்றன. இப்பொருள்களில் முதன்மையானது முத்து. ஏப்ரல் மாதம் முழுவதும் மே மாதத்து முதல் பாதியுமாகச் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முத்துக் குளியல் நடைபெறுகிறது. 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச. 22ல் பியூஷ் கோயல் சென்னை வருகிறார்!? கூட்டணி முடிவு எட்டப்படுமா?

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

SCROLL FOR NEXT