முகப்பு
வெள்ளிமணி

கம்பரசன்பேட்டை!

கி.பி. 1371-ஆம் ஆண்டு, பரிதாபி வருடம், சித்திரை மாதம், தமிழக மக்களின் வாழ்க்கையிலும், சரித்திரத்திலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள, மகத்தான, மறக்கமுடியாத மாதம் அது!

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கி.பி. 1371-ஆம் ஆண்டு, பரிதாபி வருடம், சித்திரை மாதம், தமிழக மக்களின் வாழ்க்கையிலும், சரித்திரத்திலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள, மகத்தான, மறக்கமுடியாத மாதம் அது!

ஆம்! 48 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னியர்கள் வசம் அகப்பட்டு, நித்திய ஆராதனைகள் அனைத்தையும் இழந்து, மூடப்பட்டிருந்த புகழ்வாய்ந்த மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும், திருவரங்கத்து இன்னமுதன் ஸ்ரீரங்கநாதரின் திருக்கோயிலும் மீட்கப்பட்டு, மீண்டும் கோலாகலமாகத் திறக்கப்பட்ட மாதம்தான் அது!

அப்போது நடைபெற்ற சரித்திரப் பிரசித்திப் பெற்ற நான்கு நாள்கள் போரில் இருபக்கத்திலும் சுமார் 20,000 வீரர்கள் கொல்லப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிய அப்போரைத் தலைமை தாங்கி நடத்தியது விஜய நகர சாம்ராஜ்யத்தின் மன்னரான கம்பண்ணரும், சர்வ சேனாதிபதியான கோபண்ணாவுமே ஆவர்.
மகாராணி கங்காதேவி: மாமன்னர் கம்பண்ணரின் மனைவி ராணி கங்காதேவி அழகிலும், அறிவிலும், வீரத்திலும், நாட்டுப் பற்றிலும் இணையற்று விளங்கிய மங்கை, வடமொழியிலும் பாண்டித்தியம் பெற்றவள்.

Advertisement

48 ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரர் திருக்கோயில் திறக்கப்பட்டபோது, மன்னர் கம்பண்ணருடன் பிரவேசித்தவுடன், தான் கண்ட கோரக் காட்சிகளைத் தனது காவியமான "மதுரா விஜயம்'”எனும் நூலில் விவரித்துள்ளார்.

மல்லிகை, முல்லை, ஜாதி, சம்பங்கி, தாமரை, ரோஜா, இருவாட்சி ஆகிய மலர்களின் நறுமணம் வீசித் திகழும் மதுரை மாநகரின் வீதிகளிலும், திருக்கோயில் பிராகாரங்களிலும், சங்கப் புலவர்கள் அலங்கரித்த பொற்றாமரைக் குளக்கரைகளிலும் வெட்டுண்ட மிருகங்களின் உடல் பாகங்களையும், இறைச்சிக் கடைகளின் துர்நாற்றத்தையும் கண்டு, மனம் துடித்து, கண்ணீரால் அக்காட்சிகளை வர்ணித்திருக்கிறாள் கங்கா!

மதுரையிலிருந்து ஓரிரு மாதங்களில், கம்பண்ணரும், ராணி கங்காதேவியும், சர்வ சேனாதிபதி கோபண்ணாவும் விஜய நகரம் திரும்ப வேண்டிய அவசியம் நேரிட்டது. திரும்புமுன், தமிழகத்தில் வேத தர்மமும், அதற்கு அஸ்திவாரமாகத் திகழும் திருக்கோயில்களின் அன்றாட பூஜைகள் குறைவில்லாது நடைபெறவும், முக்கிய திருத்தலங்களில் நான்கு வேதங்களையும் அறிந்த பெரியோர்களைக் குடியமர்த்தி, அவர்களின் வாழ்க்கை வசதிக்காக ஏராளமான நிலங்களையும் வழங்கினர். அத்தகைய இடங்கள்தான் "சதுர்வேத மங்கலம்' என அழைக்கப்பட்டன (நான்கு வேதங்களும் ஒலிக்கும் ஊர் என்பது பொருள்).

அவ்விதம் மன்னர் கம்பண்ணராலும், ராணி கங்காதேவியினாலும் நிர்மாணிக்கபட்ட புண்ணிய தலங்களில் ஒன்றுதான் காவிரியின் கரையில் திகழும் இன்றைய கம்பரசன்பேட்டை. இயற்கை அழகு கொஞ்சும் இவ்வூரின் புராதனப் பெயர், "கம்பண்ண அரசன் பேட்டை' ஆகும். அதுவே மருவி, இன்று "கம்பரசன் பேட்டை'யாக மாறியுள்ளது.

காலத்தின் சோதனையில்...!: காலத்தின் பிடியில் சிக்காதவர் யார்? கம்பண்ணரும், ராணி கங்காதேவியும் அளவற்ற பக்தியுடன் நிர்மாணித்த இவ்விரு திருக்கோயில்களும், க்ஷீணதசையை அடைந்தன. இதற்கிடையில்,  சிவன் கோயிலுக்கும், ஊருக்கும் இடையே ரயில் பாதையை அமைக்க வேண்டிவந்ததால், கோயில், ஊரிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனியாகவே நின்றது.

ரயில் பாதையைத் தாண்டித்தான் திருக்கோயிலுக்குச் சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டதால், நாளடைவில் மக்கள் வருவதும் குறைந்து, சிவன் கோயிலும் கவனிப்பாரின்றி சீர்குலைந்த நிலை ஏற்பட்டது.
இருப்பினும், கம்பரசன்பேட்டை பிரமுகரும்,  பரம பக்தருமான மணி அய்யரின் முயற்சியினால், சிவன் கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, 2017}ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்றிலிருந்து, தின பூஜைகள் குறைவில்லாது நடைபெற்று வருகின்றன.

அதே சீர்குலைந்த நிலையிலுள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலையும் புதுப்பிப்பதற்கு ஊர் மக்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர். இதற்காக, மணி அய்யர், ஜே. ராதாகிருஷ்ணன் (வழக்கறிஞர்), டி. ஸ்ரீநிவாசன் ஆகியோர் தலைமையில், "தஹற்ட்ங்ந்ழ்ண்ள்ட்ய்ஹ ரங்ப்ச்ஹழ்ங் பழ்ன்ள்ற்'என்ற அறக்கட்டளையை நிறுவி, புனர்நிர்மாணப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தன் திருக்கோயிலுக்காக ஒரு ரூபாய் கொடுத்தாலும், அதனை ஒரு கோடியாக ஏற்று, ஸ்ரீவரதராஜப் பெருமான் திருவுள்ளம் உகப்பான் எனப் புராதன நூல்கள் கூறுகின்றன. ஆதலால், சக்தியும் வசதியும் உள்ள அன்பர்கள், தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து, புண்ணிய பலன்களைப் பெற்று மகிழுமாறு பிரார்த்திக்கிறோம். 

இருப்பிடம்: திருச்சி } கரூர் பிரதான சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில், காவிரியின் வடகிழக்கில் திகழ்கிறது, இயற்கை அழகு, எழில் கொஞ்சும் கம்பரசன்போட்டை. பேருந்துகள், கார், ஆட்டோ வசதிகள் உண்டு. 

மேலும் விவரங்களுக்கு: 09962644455, 09443195560.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments