காலமுணர்த்தும் உத்தரவுப் பெட்டி!
மேருமலையின் சிகரம், அகத்தியர், சிவ வாக்கியர் தவம் செய்த மலை, சங்ககாலத்திலேயே புகழ்பெற்ற மலை, திருப்புகழ் பாடல் பெற்றத் தலம் -காலத்தை உணர்த்தும் உத்தரவுப் பெட்டி கொண்ட அரிய கோயில் எனப் பல்வேறு
மேருமலையின் சிகரம், அகத்தியர், சிவ வாக்கியர் தவம் செய்த மலை, சங்ககாலத்திலேயே புகழ்பெற்ற மலை, திருப்புகழ் பாடல் பெற்றத் தலம் -காலத்தை உணர்த்தும் உத்தரவுப் பெட்டி கொண்ட அரிய கோயில் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது, சிவன்மலை முருகன் திருக்கோயில்.
தொன்மைச் சிறப்பு: சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான திரிபுர சம்ஹாரத்தின் போது, வாசுகியை கணையாக வைத்து, மேரு மலையை வில்லாக வளைத்தார். அப்போது, மேரு மலையின் சிகரங்களில் ஒன்று காங்கேயம் பகுதியில் விழுந்தது. அதுவே சிவன் மலையாக போற்றப்படுகிறது.
"சிவ வாக்கியர் சித்தர் மலை' என்பது மருவி, "சிவன் மலை'யானதாகவும் கூறப்படுகிறது.
அகத்தியர் ஆகமங்களைக் கற்றுத் தெளிய, இம்மலையில் தவம் இயற்றினார் என்றும், இம்மலையில் தனது கமண்டலத்து கங்கை நீரைக்கொண்டு தீர்த்தம் உருவாக்கினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. கார்த்திகைப் பௌர்ணமியில் இத்தீர்த்ததிற்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
அதுமட்டுமின்றி, வியாசரின் அறிவுரைப்படி, அனுமன் தன் சக்தியை பெருக்க இம்மலையில் தவம் இயற்றியதாகவும் கூறப்படுகிறது.
சங்க காலத்தில் இத்தலம் காங்கேயம், நாட்டின் பெரிய நகரமாக விளங்கியது. அன்றைய பெயர் "பட்டாலியூர்' ஆகும். மலையை பட்டாலி நகர்ச் சிவன்மலை என்றும், முருகனை பட்டாலி பால் வெண்ணீசுவரர் பாலன் என்றும் பழங்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.
சிவ வாக்கியச் சித்தர் குகை: இறைவன் கருவறைக்கு அருகில் சிறிய குகை காணப்படுகிறது. இதில், சிவ வாக்கியச் சித்தர் இன்றும் தவமியற்றி வாழ்வதாக நம்பப்படுகிறது.
அஷ்ட துர்க்கை: இம்மலையைச் சுற்றி ஆலம்பாடி வனசாட்சி, பாப்பினி அங்காளம்மன், காங்கேயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அந்தனூரம்மன், கரிய காளி, செல்வநாயகி என எட்டு துர்க்கைகள் வீற்றிருக்கின்றனர்.
இலக்கியங்கள்: இத்தலத்து இறைவனை சங்க இலக்கியங்கள் புகழ்ந்துள்ளன. அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றியுள்ளார்.
அன்னை பார்வதி எழுந்தருளிய மலை என்பதால், சக்தி சிவகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
சிவன்மலை: பசுமையான இம்மலை, நானூறு அடி உயரத்தில், 496 படிகளைக்கொண்டு விளங்குகிறது. அடிவாரத்தில் பால விநாயகர் மண்டபம், பழைய கோட்டை மண்டபம், அருளாடிகள் மண்டபம், சின்ன அரண்மனை மண்டபம் என, எண்ணற்ற கல் மண்டபங்கள் வழி நெடுக அமைந்துள்ளன.
இத்தலத்தில் சிவ சண்டிகேசுவரர், குக சண்டிகேசுவரர் என இரண்டு சண்டிகேசுவரர்கள் காட்சியளிக்கின்றனர்.
ஆண்டவன் உத்தரவுப் பெட்டி: இத்திருக்கோயிலின் தனித்துவம் இது. மனிதர்களுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை முன்கூட்டியே உணர்த்தும் பெட்டியாக இது விளங்குகிறது.
சிவன்மலை ஆண்டவன் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி, அது தொடர்புடைய பொருளை பெட்டிக்குள் வைப்பது வழக்கமாக உள்ளது. இதற்கு பூ வைத்து முருகனிடம் உத்தரவு கேட்பது என்பார்கள். இப்பெட்டி, மகசூல், வெள்ளம், யுத்தம், பஞ்சம், சுனாமி போன்ற பல நிகழ்வுகளை முன்கூட்டியே உலகிற்கு உணர்த்தி வருகிறது.
பூக்கேட்டல்: சிவன்மலையின் முக்கிய பிரார்த்தனை பூக்கேட்டல் ஆகும். எந்த செயலைச் செய்ய விரும்பினாலும், சிவன்மலை முருகன் திருவடிகளில் பூ வைத்து வேண்டிய பிறகே அந்த செயலைச் செய்வது இப்பகுதிவாழ் பக்தர்களின் வழக்கமாக உள்ளது.
தலமரம், தீர்த்தம்: தலமரமாக, தொரட்டி மரமும், தலத் தீர்த்தமாக காசித் தீர்த்தமும் அமைந்துள்ளன. இது தவிர, அனுமன் தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் என மொத்தம் ஏழு தீர்த்தங்கள் உள்ளன.
வேண்டுதல்கள்: இத்தலம் திருமணம், குழந்தைப்பேறு, ஞானம் தருதல் இவற்றிற்குப் புகழ்பெற்ற பரிகாரத் தலமாக விளங்குகிறது.
அமைவிடம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் சிவன்மலை அமைந்துள்ளது. காங்கேயத்தில் இருந்து 4 கி.மீ., கோயம்புத்தூரில் இருந்து 85 கி.மீ. தொலைவில் உள்ளது.