வெள்ளிமணி

எப்படி இருக்க வேண்டும் இல்லறம்?

மோசே

திருமண பந்தம் என்பது இரு இருதயங்கள் இணைகிற ஓர் உன்னதமான உறவு. அதில் குறுக்கும் நெடுக்குமாய் மதிகெட்ட மனிதர்களால் கிழிக்கப்படுகிற கோணல் கோடுகள் மானுடத்தின் வசந்த வாழ்வினைப் பாழாக்கிவிடுகிறது என்பதை தேவமைந்தன் இயேசு தீர்க்கமாய்ப் பேசினார்.

மோசேயின் சட்டத்தை ஒட்டி ஒழுகுவதாய் பெருமை பேசியவர்கள் யூதர்கள். அச்சட்டம் "இல்லற வாழ்க்கையில் இருக்கிற ஆண் ஒருவர், மணமுறிவுச் சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு தன் மனைவியை விலக்கிவிடலாம்' என்று பேசியது. ஆனால் இயேசு அச்சட்டத்தின் ஆணாதிக்க அச்சாணியை முறிக்கவே முயன்றார்.

ஒருமுறை, யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயா பகுதிக்கு இயேசு சென்றபோது அவரைப் பரிசோதிக்கும் நோக்கில் பரிசேயர் அவரிடம் "ஒருவர் தன் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?' எனக்கேட்டார். 

இயேசு எதிர்வினையாக "படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் என்பதை நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா? இதனால் கணவன், தன் தாய் தந்தையை விட்டுவிட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள்(கணவன்-மனைவி) இருவர் அல்லர். ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்' என்றார் (மத். 19:2-6). 
இயேசுவிடம் பேசிய பரிசேயர் "அப்படியானால் மணமுறிவுச் சீட்டு எழுதிக் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?' என்றார். 

அங்கேதான் அச்சமூகத்தின் ஆழ்மன ஊனம் வெளிப்பட்டது. பெருமைக்குரிய பெண்மையை கொச்சைப்படுத்தும் அர்த்தமற்ற மணமுறிவினை நியாயப்படுத்தும் வெறுப்பும், வெஞ்சினமும் வெளிப்பட்டது. 

அதனை அவர்களுக்கு உணர்த்தும் விதமாகவே "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கம் முதல் அவ்வாறு இல்லை' என்றார் இயேசு. 

இன்னமும் ஒருபடி மேலாக அவர் "நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் பரத்தமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் மனைவியை விலக்கிவிடக்கூடாது' என்றார் (மத். 5:32). இருபாலருக்கும் பொதுவான இல்லற ஒழுக்கத்தை இறைமகன் தெளிவாக இங்கே மொழிகிறார்!

திருமணம் என்பது நறுமணம் வீசும் சொந்தங்கள் மலர்கின்ற சோலை. உறவுகள் உருவாகும் அழகான நந்தவனம். நட்பிற்கும் மேலான கணவன் மனைவி உறவில், பிரிவு என்னும் நூலிழை விரிசலும் நுழையக்கூடாது என்பதே இயேசுவின் வேதமாகும்..!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்

நீங்களாகவே இருக்க தயங்காதீர்கள்... சுஜிதா

SCROLL FOR NEXT