தூய இதயம், தூய உடல், சுறுசுறுப்பு, செயல் புரிய எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் நிலை ஆகியவை ஒருவனிடம் இருக்க வேண்டும்.
-மகாநிர்வாண தந்திரம்
எல்லா மார்க்கங்களும் பின்பற்றுகின்ற இறைவன் அனைத்துக்கும் பழைமையானவன்.
-சாமவேதம்
"நான்' என்றும், "என்னுடையது' என்றும் சொல்லிக்கொண்டு அக்ஞானத்தில் (மதிமயக்கத்தில்) இந்த உடல் கிடக்கிறது. இந்த நிலை புத்திமான்களால், "ஸ்தூலம்' என்று சொல்லப்படுகிறது.
-விவேகசூடாமணி
"துளசி தளம் தரித்து ஹரி நாமஜபம் செய்பவர்களை யமபடர்கள் நெருங்கவே கூடாது' என்று யமதர்மன் கட்டளையிட்டிருக்கிறான்.
-இந்து தர்ம சாஸ்திரம்
ஓ மனமே! துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் கோபம் காரணமாக இருக்கிறது. அதனுடன் பல விகார எண்ணங்களை உண்டு பண்ணும் காமம் இருக்கிறது; இந்த இரண்டும் உனக்கு வேண்டவே வேண்டாம்!
மேலும், மிக மிகக் கொடியதாகிய அகங்காரம், பேராசை, பொறாமை, டம்பம் போன்றவை உன் மனதின் அருகில்கூட வருவதற்கு அனுமதிக்காதே!
-சமர்த்த ராமதாசர் எழுதிய "மானச சுலோக'
இறைவன் மீது நாம் கொள்ளும் நம்பிக்கைதான் நாம் விடும் மூச்சாகும், தெய்வ நம்பிக்கைதான் நம்முடைய பேச்சாகும், தெய்வ நம்பிக்கைதான் நாம் வணங்கிடும் தெய்வம். அந்த நம்பிக்கைதான் நம்முடைய வலிமையாகும்.
-பக்தியோகம்
"ஸ்ரீ கிருஷ்ணா' என்கிற திருப்பெயர் மங்களங்களை வாரி வாரி வழங்கும். அந்தத் திருப்பெயர் எவனுடைய வாயில் நடனமாடுகிறதோ, அவன் கோடி கோடிப் பிறவிகளில் செய்த பாவக்குவியல்கள் எல்லாம் அந்த நொடியிலேயே எரிந்து சாம்பலாகின்றன.
-விஷ்ணு தர்மோத்தரம்
தனது ஆச்சார அனுஷ்டானங்களான அறநெறிகள் அனைத்தையும் கைகழுவியவனும், அனைத்துப் பாவங்களையும் விரும்பிச் செய்தவனும் பகவானது திருப்பெயரைக் கூறுவானேயாகில், நிச்சயமாகப் பாவங்களிலிருந்து விடுதலை அடைகிறான்.
-வைஸம்பாயன ஸம்ஹிதை
ஒருவன் மிகச் சிறிய அளவாவது நன்மை தரும் சான்றோர் வாய்ச்சொல்லைக் கேட்க வேண்டும். அது சிறியதாயினும் அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.
-திருக்குறள், 416
பதினான்கு உலகங்களிலும் எத்தனை எத்தனையோ ஜீவராசிகள் வசிக்கின்றன. அவை ஒன்று சேர்ந்து செய்தாலும், பகவானது ஒரு திருநாமத்திற்கு எத்தனையளவு பாவங்களை அழிக்கும் சக்தி இருக்கிறதோ, அத்தனை பாவங்களைச் செய்ய இயலாது.
-பிரம்மாண்ட புராணம்
ஆசையை ஒழி, பொறுமையைக் கைக்கொள், கொழுப்பை அடக்கு, பாவத்தில் மனதைச் செலுத்தாதே. சத்தியத்தைப் பேசு, மதிப்புடையவருக்கு மரியாதை செய். எதிரிகளைச் சமாதானப்படுத்து, உன் குணங்களைப் பிரகடனம் செய்யாதே, உன் கீர்த்தியைக் காப்பாற்றிக்கொள், துன்புற்றவர்களுக்கு இரங்கு; இதுதான் நல்லவர்களுக்கு அடையாளம்.
-பர்த்ருஹரியின் நீதி சதகம், 80
வியப்பு, பயம், துன்பம் முதலிய எந்த நிலையிலும் இறைவன் பெயரை ஏதோ ஒரு காரணத்தால் ஒருவன் கூறினாலும் நினைத்தாலும், அவன் நற்கதி பெறுகிறான்.
ஒருவன், தான் இறக்கும் சமயத்திலோ, வாழ்க்கையிலோ பகவான் நாமத்தை நினைப்பானேயாகில், அவனது பாவமூட்டைகள் அப்பொழுதே அழிகின்றன.
-சிவகீதை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.