மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் முறையாக அமைந்த தலங்களில் ஒன்று விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் ஆலயமாகும்.
"காசியிலும் வீசம் அதிகம்' என்ற சொல்வழக்கின் மூலம், இத்தலம் "விருத்தகாசி' என வழங்கப்படுகிறது. "விருத்தாசலம்' என்னும் பெயர் அக்காலத்தில் "திருமுதுகுன்றம்' என்றே வழங்கப்பட்டுள்ளது. "திருமுதுகுன்றம்' என்ற தமிழ்ச்சொல்லே வடமொழியில் "விருத்தாசலம்' என அழைக்கப்படுகிறது.
திருமுதுகுன்றத்தில் கோயில் கொண்டு அருளாட்சி செய்பவர் பழமலைநாதர் ஆவார். அன்னையின் பெயர் பெரியநாயகி, பழமலைநாதரை விருத்தகிரீசுவரர் என்றும், பெரிய நாயகியை விருத்தாம்பிகை என்றும் அழைத்து வருகின்றனர்.
"சிவாயநம' என்கிற ஐந்தெழுத்து எவ்வளவு முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறதோ அதேபோன்று "ஐந்து' என்ற எண்ணின் பெருமை இந்தக்கோயிலில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து பிரகாரங்கள், ஐந்து கோபுரங்கள், ஐந்து தீர்த்தங்கள், ஐந்து கொடிமரங்கள், ஐந்து நந்திகள், ஐந்து மூர்த்தங்கள் என்ற பெருமையைக் கொண்டது இந்தத்தலம். திருஞானசம்பந்தர் "முக்தி தரும் உயர் முதுகுன்றம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் செல்ல வந்த குருநமச்சிவாயர் பசியின் காரணமாகப் பெரியநாயகி தாயாரிடம் சோறு வேண்டி "கிழத்தி!' என்ற சொல் வரும்படி ஒரு பாடலை பாடினார்.
பெரியநாயகி வயதான வடிவில் வந்து ""கிழவி எவ்வாறு சோறு கொண்டு வரமுடியும்... இளமையுடன் இருந்தால்தானே முடியும்?'' எனக்கூற, அவர் ""அத்தன் இடத்தாளே, முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா!'' என முடியும் பாடலைப் பாடினார். அவர் பாட்டுக்கு மகிழ்ந்து இளமைக் கோலத்துடன் அம்மை காட்சி கொடுத்து அமுதளித்தார். அன்று முதல் இளையநாயகி சந்நிதி ஏற்பட்டதாகக் கூறுவர்.
தற்பொழுது, இக்கோயிலின் ஐந்து கோபுரங்களில் தெற்கு கோபுரம் குடமுழுக்குச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை அளித்து அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத பழமலைநாதரின் அருள் பெற்றிட வேண்டுகிறோம்.
தொடர்புக்கு: 9698311146.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.