வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 173

எத்தனை அழகான குற்றாலம்:  1811-ஆம் ஆண்டு, காய்ச்சலோடு கூடிய கொள்ளை நோயொன்று, தென்காசி, திருச்செந்தூர்ப் பகுதிகளைத் தாக்கியுள்ளது.

டாக்டா் சுதா சேஷய்யன்

எத்தனை அழகான குற்றாலம்:  1811-ஆம் ஆண்டு, காய்ச்சலோடு கூடிய கொள்ளை நோயொன்று, தென்காசி, திருச்செந்தூர்ப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய களநிலவரத்தைக் கண்டறிய மருத்துவக் குழு ஒன்றை அமைத்தது. 

குற்றால அருவியில் குளித்து, சாரலில் சில நாட்கள் தங்கியிருந்தால், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பொது நலம் கூடுகிறது என்றே அறிக்கை அளித்துள்ளது.  

குற்றாலம் அருவி என்பது ஒன்றன்று. குற்றாலம் என்னும் ஊரை, "அருவிகளின் பதி' என்றே அழைக்கலாம். குற்றாலம் அருவி என்று சாதாரணமாக எல்லோரும் கூறுவதும், படங்களில் காட்டப்படுவதும் பேரருவி ஆகும். இதற்கு வட அருவி என்னும் பெயர் இருந்துள்ளது. சுமார் 280 அடி உயரத்திலிருந்து, ஏறத்தாழ நேர் கீழே பாயும் இது, இடையில் பொங்குமாங்கடல் என்னும் துறையால் (பள்ளத்தால்) தடுக்கப்படுகிறது. இதனால், வேகமாகப் பாய்ந்து வரும் நீரின் ஓட்டமும் வேகமும் தடுக்கப்பட்டுக் குறைக்கப்படுகின்றன. 

பொங்குமாங்கடலில் தேங்கி விடுகிற நீர், இதன் பின்னர் பாறைகளின் மீது வழியும்போது, மக்கள் நீராடுவதற்கு ஏற்றதாக ஆகிவிடுகிறது. இயற்கையாகவே அமைந்திருக்கும் இன்னருள் இது! 

வட அருவி அல்லது பேரருவி வழியாகத்தான், சிற்றாற்றுப் பெண்ணாள் தரையைத் தொடுகிறாள் எனலாம். இந்த அருவியின் பெருமையையும் குற்றாலக் குறவஞ்சி நூல் குறிப்பிடுகிறது. 

"கற்றாத ஊர்தோறும் சுற்றவேண்டாம் புலவீர்
குற்றாலம் என்றொருகால் கூறுமின் வற்றா
வட அருவி போல வளம் பெருக்கும், மாளா
இடர்களையும் எந்தை கழல் 
வடவருவியானது வளம் கொழிக்கச் செய்யுமாம்..!'     

சிற்றாற்றின் அருவிகள் ஏராளம். அடர்மலை என்பதால், ஆங்காங்கே நீரோடைகள் பலவும் உருவாகி, ஆங்காங்கே அருவிகளாகி, இயற்கையின் இனிய அரவணைப்பைச் சிற்றாற்றாள் தருகிறாள். 

பிரதான குற்றால அருவியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு மேலே போனால், செண்பகாதேவி அருவியை அடையலாம். 30-35 அடி உயரத்திலிருந்து வீழும் இந்த அருவிக்கு அருகில் செண்பகாதேவி திருக்கோயில். சித்ரா பெளர்ணமி வெகு சிறப்பு. இதற்கும் மேலே சுமார் 3 கி.மீ. தொலைவில், உயரத்தில் தேனருவி. ஏறத்தாழ 100 அடிக்குப் பாயும் நீர்நங்கை. தேனருவிதான் சிற்றாற்றின் முதல் அருவி என்று கூறலாம். தேனருவியாக விழுந்து, பின்னர் 2 கி.மீ. ஆறாக ஓடிவந்து, செண்பகாதேவி அருவியாகப் பாய்ந்து, பின்னர்தான் பொங்குமாங்கடலுக்குள் பாய்ந்து, வட அருவியாக வீழ்கிறாள்.  

சித்ரா பெளர்ணமி காலத்தில், தேனருவியிலும், செண்பகாதேவி அருவியிலும் சந்தன மழை பொழியும் என்றொரு வட்டாரப் பெருமை உண்டு. தேனருவிப் பகுதியில் அம்பிகை சந்தனம் தெளித்துச் சிவனாரை வணங்குகிறாள் என்றும், இதனால் தெறிக்கும் துளிகள் சந்தன மழையாகப் பெய்கின்றன என்று உள்ளூர் மூதாட்டிகள் விளக்குவார்கள். 

தேனருவி என்னும் பெயருக்கு ஒரு காரணம் உண்டு. அடர்மலைப் பகுதியில் ஆங்காங்கே தேனடைகள் இருக்கும். இவற்றிலிருந்து வழிகிற தேன்துளிகள், நீரில் கலந்து விழும்போது, தேன் வந்து பாய்வதாகத் தோன்றும். இப்படிப்பட்ட தேன் கலப்பும், அருகிலிருந்த சந்தன மரங்களில் ஏதேனும் பறவைகளோ விலங்குகளோ கொத்தி மோதித் துண்டுத் துணுக்குகளைக் கிளப்பியதால் வந்த கலப்பும் சேர்ந்து மஞ்சள் நிறத் துளிகள் பரவியிருக்கக்கூடும். இப்படிப்பட்ட துளிகளைச் சந்தன மழையாக மக்கள் கண்டிருக்கலாம். எப்படியாயினும், இயற்கையும் இறைமையும் அருள்கிற அற்புதம்தானே!  

தேனருவிக்கு அருகில், சிறியதாக, அருவி என்னும் பெயருக்கு அவ்வளவாகப் பொருத்தமில்லாமல் "பாலருவி'. ஆற்றின் தொடக்கப் பகுதி எனலாம். 

குற்றால ஊரின் மையப்பகுதியிலிருந்து சற்று தொலைவில் ஐந்தருவி (அல்லது ஐந்தலை அருவி). சிற்றாற்றுப் பெண்ணாள், தன்னிலிருந்து ஐந்து கிளைகளைப் பிரியச் செய்து, ஐந்து அருவிகளாக விழச் செய்யும் இடம். அருவியின் உயரம் சுமார் 40 அடி என்பதாலும், ஐந்தாகக் கிளை பிரிந்து விடுவதாலும், நெருங்குவதற்கும் நீராடுவதற்கும் ஆபத்து இல்லை. அருகிலேயே சாஸ்தாவுக்கும், முருகனுக்கும் திருக்கோயில்கள். 

ஐந்தருவியிலிருந்து சற்று தூரம் சென்றால் பழத்தோட்ட அருவி. கூட்டமில்லாமல், தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பகுதியில் இருப்பதால், இது வி.ஐ.பி. அருவி! 

ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் புலியருவி. பெயருக்கு மாற்றாக ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்கிறது; எனவே சிறுவர்களும் நீராடத் தக்க இடம். பிரதானப் பேரருவிக்குப் பக்கத்தில் இன்னுமொரு அருவி – சிறியதாகவும் வேகம் குறைவாகவும் இருப்பதால் சிற்றருவி. சிற்றருவியைக் கானருவி (காட்டு அருவி; ஆங்கிலத்தில் ஃபாரஸ்ட் ஃபால்ஸ்) என்றும் வழங்குவதுண்டு. 

ஊரிலிருந்து சற்றொப்ப 15 கி.மீ. தொலைவில் மற்றொரு அருவி. இதைத்தான் பழைய குற்றால அருவி என்றழைக்கிறோம். திரிகூட மலைகளின் நீரோடைகளில் அழகனாறு என்பதும் ஒன்று. இந்த அழகனாற்றிலிருந்து வீழும் அருவியே பழைய குற்றால அருவி. 

"உலகத்திலேயே மிக அருமையானதும் தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலம்' என்று குறிப்பிடுகிறார் அறிஞர் கால்ட்வெல்.  

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT