"அழகிய வீரபாண்டியபுரம்' பகுதியை ஆண்டு வந்தார், பாண்டிய வம்சாவளியைச் சேர்ந்த ஜகவீரபாண்டிய மன்னர். கட்டபொம்முவின் திறமையையும் துணிச்சலையும் கேள்விப்பட்ட மன்னர், அந்த இளைஞனைத் தமக்கு உறுதுணையாக அமர்த்திக்கொண்டார். காலப்போக்கில், இருவருக்கும் இடையே தந்தை}மகன் போன்றதொரு உறவு மலர்ந்தது.
பகைவர்கள் செய்த சூழ்ச்சிகளிலிருந்து ஜகவீரபாண்டியரைக் கட்டபொம்முவே காப்பாற்றினான். வாரிசுகள் அற்ற ஜகவீரபாண்டியர், தம்முடைய மகனாகவே கட்டபொம்முவை அடையாளம் காட்டிவிட்டுக் காலமானார். மகனுக்கு மகனாய் நின்று ஈமக் கடன்களை நிறைவேற்றிய கட்டபொம்மு, ஆட்சியையும் திறம்படவே நடத்தினான். கொல்லம் ஆண்டு 270}75 வாக்கில் மேற்கூறிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது, கி.பி.1095-1100 காலகட்டத்தில்!
அழகிய பாண்டிய புரத்திலிருந்து ஆட்சி செய்தாலும், புதியதொரு கோட்டை கட்டுவதற்குக் கட்டபொம்மு இடம் தேடினான். இதற்கிடையில், சாலிகுளம் காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் சென்ற சிலர், விநோதமானதொரு காட்சியைக் கண்டு, அரசாட்சி செய்து கொண்டிருந்த பொம்முவிடம் வந்து அதனை விவரித்தனர்.
சின்னஞ்சிறு முயல் ஒன்று இருந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு நாய்கள் அதனை விரட்டின. எட்டாமல் தாவி ஓடிய முயல், குறித்த இடம் சென்றதும், நின்று திரும்பி, விரட்டிய நாய்களை முறைத்தது. நாய்கள் நடுங்கியபடி அகல, முயல் மாயமாய் மறைந்தது. வேட்டைக்குச் சென்றவர்கள் திரும்ப வந்து இப்படியொரு காட்சியை விவரிக்க, கேட்டுக் கேட்டு மகிழ்ந்த கட்டபொம்முவுக்கு மெய் சிலிர்த்தது. இப்படியொரு வீரமா? இப்படியொரு இடமா?
அடையாளம் காட்டியவர்களுடன் சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டபோது, திடீரென்று உள்ளத்தில் ஒரு வெளிச்சம். இந்த இடத்தில் கோட்டை அமைத்தால் என்ன? வெள்ளை முயலின் வீரம் வெளிப்பட்ட
இடமல்லவா!
எண்ணத்தை உடனே செயல்படுத்த, ஒரு சில மாதங்களிலேயே சீர்மிகு கோட்டை ஒன்று சிறப்புடன் எழுந்தது. கோட்டைக்கும் அதைச் சூழ்ந்த பகுதிக்கும் "பாஞ்சாலன்குறிச்சி' என்னும் பெயர் சூட்டி, கொல்லம் 276-ஆம் ஆண்டு வைகாசி மாதம் குடியேறினான்.
பால்ராஜாவின் தந்தை பெயர் பாஞ்சாலன் என்றும், தன்னுடைய பாட்டனார் பெயரையே தான் புதிதாக நிர்மாணித்த கோட்டைக்கும் நகருக்கும் கட்டபொம்மு சூட்டினான் என்றும் கருதப்படுகிறது. இந்தக் கட்டபொம்முதான், பாஞ்சாலங்குறிச்சி பாளைய வம்சத்தின் நிறுவனராகப் புகழப்பெறுகிற ஆதிக் கட்டபொம்மு நாயக்கர் ஆவார். கி.பி. 1101}ஆம் ஆண்டு, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள் இவர் குடிபுகுந்ததாக எண்ணப்படுகிறது.
ஆதிக் கட்டபொம்முவின் வம்சாவளியில் 47}ஆவது தலைமுறையினர்தாம், ஜெகவீரக்கட்டபொம்மு - ஆறுமுகத்தம்மாள் தம்பதியரின் திருமகனும் சுதந்திரப் போராட்டத் தலைமகனுமான வீரபாண்டிய கட்டபொம்மன்!
1790-ஆம் ஆண்டு (கொல்லம் 965) தை மாதம் 20}ஆம் தேதி (பிப்ரவரி 2), வீரபாண்டிய கட்டபொம்மன் பட்டமேற்றதாகத் தெரிகிறது. அப்போது இவருக்கு 30 வயது. இவரைக்காட்டிலும் 9 வயது இளையவர், ஊமைத்துரை என்று பரவலாக அறியப்பட்ட தளவாய்க் குமாரசுவாமி. இந்த இருவருக்கும் பின்னர், துரைசிங்கம் என்றொரு தம்பியும், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என்றிரு தங்கைகளும் உண்டு.
அருமைத் திருவாட்டி வீரஜக்கம்மாள் துணை நிற்க, திருக்கோயில் பணிகளும் குடிமக்கள் நலப்பணிகளும் செய்து, அடைந்தாரை ஆதரித்து ஆட்சி செய்தார் கட்டபொம்மன். "காகம் பறவாது கட்டபொம்மன் கோட்டைமேல்' என்றொரு சொலவடை இப்பகுதிகளில் உண்டு. விலங்குகளும் பறவைகளும்கூடக் கட்டபொம்மன் ஆணைக்கும் அறத்துக்கும் கட்டுப்பட்டிருக்கும் என்பதன் வெளிப்பாடுதான் இச்சொலவடை.
இவர் ஆட்சிக்கட்டிலேறிய இரண்டாண்டுகளில், வரி வசூலிக்கும் அதிகாரமும் ஆட்சியில் தலையிடும் அதிகாரமும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியிடம் சென்றன. 1792}இல் இந்த அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட கம்பெனி நிர்வாகம், தென்பாண்டிப் பகுதிகளின் வளமையைக் கண்டு வியந்தது.
இந்த வளமையைச் சாதகமாக்கிக் கொள்ள முனைந்தது. எப்படியேனும், தென்பாண்டிப் பாளையக்காரர்களுக்கிடையில் சண்டை மூட்டி விட்டு விட்டால், அந்தச்சண்டைக்கு இடையில் குளிர்காய்ந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டது. எவ்வெவ்வளவு நிலம் எங்கெங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. "லாண்ட் செட்டில் மெண்ட் ஆபீசர்கள்' என்னும் பெயரில், ஆங்காங்கே நில அளவை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
நெல்லைப் பகுதியின் நில அளவை அலுவலராகப் பொறுப்பேற்றார் லெஃப்டினெண்ட் கர்னல் மேக்ஸ்வெல். இவர் பொறுப்பேற்றவுடன், பாளையக்காரர்கள் பலரும் இவரைச் சென்று சந்தித்தனர்.
இவ்வாறு சென்று பணியாத வெகு சிலரில், வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். கட்டபொம்மனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், தன்னை வந்து பார்க்கவில்லையே என்னும் எரிச்சல் கொண்டார் மேக்ஸ்வெல்.
பாளையக்காரர்களுக்கிடையே இருந்த சிறு சிறு பூசல்களைப் பெரிதாக்கி பூதாகாரம் செய்யத் தீர்மானித்தார். பாளையக்காரர்களும் ஒழிவார்கள்; கம்பெனியும் வளமையுறும் என்று கணக்குப் போட்டார். அப்போதைய பாஞ்சாலஞ்குறிச்சியில் 96 கிராமங்களும் கிராமங்களை உள்ளடக்கிய ஊர்களும் இருந்தன. மொத்த பாளையமும் ஆறு வணிதங்களாகப் (பகுதிகளாக) பிரிக்கப்பட்டிருந்தது. இந்த வணிதங்களில் ஒன்றுதான், ஆதனூர் வணிதம். இதன் பகுதிகளாக விளங்கியவை அருங்குளம் மற்றும் கப்பலாபுரம் என்னும் ஊர்கள். சிண்டு முடிதலுக்கு வழி பார்த்துக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லுக்கு இது நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.