பொருநை போற்றுதும்! - 151
பிழைப்பு தேடி இந்தியா வந்தவர்கள், ஸ்காட்லாந்து சகோதரர்களான ஆண்ட்ரூ ஹார்வி மற்றும் ஃப்ராங்க் ஹார்வி ஆகிய இருவர்.
பிழைப்பு தேடி இந்தியா வந்தவர்கள், ஸ்காட்லாந்து சகோதரர்களான ஆண்ட்ரூ ஹார்வி மற்றும் ஃப்ராங்க் ஹார்வி ஆகிய இருவர்.
பருத்தி பக்குவப்படுத்தல், நூற்பு, நெசவு போன்ற தொழில்களில் இவர்கள் ஈடுபட்டனர்.
19-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், விருதுப்பட்டி (இப்போதைய விருதுநகர்) மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் இவர்களின் தொழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் கோரல் மில்லையும், மதுரையில் மதுரா மில்லையும் தொடங்கினார்கள்.
இவர்களின் தொழில் முயற்சிகளில் தொடக்கம் முதலே இந்தியப் பங்குதாரர்கள் இருந்தனர். இன்றைய ஹார்வி, மதுரா கோட்ஸ் தொழிற்குழுமங்களின் வளர்ச்சியும் தொடர்ச்சியும் இவர்களின் தொடக்கத்தால் என்பதிலோ, அதிகார ஏகாதிபத்திய எண்ணமில்லாமல் செயல்பட்டவர்கள் இவர்கள் என்பதிலோ ஐயம் இருக்கமுடியாது.
ஆனாலும், விதிவசத்தால், தூத்துக்குடி கோரல் மில் போராட்டம், இந்தியாவின் வரலாற்றிலும், தமிழ்நாட்டின் மேன்மையிலும் தனியிடம் பெற்றுவிட்டது என்பதுதான் உண்மை.
ஆலையைக் களத்தில் நிர்வகித்தவர்கள், தொழிலாளர்களை மதிக்கத் தவறியதால் நேர்ந்த விபரீதம்.
1908-ஆம் ஆண்டு ஜனவரி வாக்கில், கோரல் மில்லில் (பவழ ஆலை என்றே வரலாற்றாளர்கள் பலரும் இதனைப் பதிவு செய்கின்றனர்) சுமார் 1,700 பணியாளர்கள் இருந்தனர்.
இவர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் 13 வயது முதல் 16 வயது வரையான சிறுவர்கள். பத்து வயதுச் சிறுவர்கள்கூடப் பணியில் இருந்தனர். "ரேகை டியூட்டி' என்னும் முறை பின் தொடரப்பட்டது.
அதாவது, கையிலுள்ள ரேகைகள் பளிச்சென்று தெரிகிற காலை வெளிச்சத்தில் டியூட்டி தொடங்கும். கைகள் களைத்துப்போய், ரேகைகளும் மங்கலாகத் தெரிகிற இருட்டு வேளையில் பணி முடியும்.
எவ்வளவு நேரம் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். வார விடுமுறை என்பதே கிடையாது. உடம்பு சரியில்லாமல் யாரவது ஒரு நாள் வேலைக்குப் போகவில்லையானாலும், அடுத்த நாள் போனால் வேலை இருக்காது; பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள்.
பலநாட்கள், உணவு இடைவேளைகூட மறுக்கப்படும். இப்படிப்பட்ட நிலையில் பணி செய்துகொண்டிருந்த பணியாளர்கள் ஏற்கெனவே பொருமிக் கொண்டிருந்தனர். சுதேசிக் குரல்களும் அவர்களிடம் எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
இத்தகைய சூழலில், கோரல் மில்லிலும் தொழிற்சங்கத்திற்கு வித்திட்டார் வ. உ. சி. இதே காலகட்டத்தில், அதாவது, 1908 பிப்ரவரியில் சுப்பிரமணியசிவாவின் உணர்ச்சி வேகமிக்க உரைகள் நிகழ்ந்தன. பிப்ரவரி மூன்றாவது வாரம் உரையாற்றிய உரைகள் பலவற்றில், சிவாவும், இவரின் செல்வாக்கால் வ. உ. சி-யும், தொழிலாளர் ஆதரவைத் திரட்டத் தொடங்கியிருந்தனர்.
சிவாவின் வாதம் இதுதான்:
"ஐரோப்பிய வணிகர்களின் வெற்றிக்கும் செழிப்புக்கும் மூல காரணம், இந்தியாவில் அவர்கள் நிறுவிய தொழிலிலும் தொழிலகங்களிலும் கிட்டிய வெற்றியே ஆகும்.
இந்த வெற்றிக்கான அடிப்படை, தொழிலகங்களில் பணிபுரிந்த இந்தியர்கள். இந்தியப் பணியாளர்களும் தொழிலாளர்களும் நிர்வாகிகளால் ஒடுக்கப்படுகின்றனர்.
குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆலைத் தொழிலாளர்கள் அனைவரும் உயர் ஊதியம் கோரவேண்டும். அப்போது ஐரோப்பிய ஆலைகள் மூடப்படும். இது ஐரோப்பியர்களை வழிக்குக் கொண்டுவரும். எங்கேயோ இருக்கிற முதலாளிகள், நிர்வாகிகள் செய்வதற்குக் கண்ணை மூடிக்கொள்வதாலும், சரி என்று நம்புவதாலும், காவல் துறை துணை போவதாலும், நிர்வாகிகளின் ஆட்டம் தொடர்கிறது.
சுதேசியத்திற்கான வழிமுறைகளில், ஆலை முதலாளிகளுக்குச் சேதம் விளைவிப்பதும் ஒன்று. இதனையும் இரு வழிகளில் செய்யலாம் - ஒன்று, ஆலை இயந்திரங்களுக்குச் சேதம் கொண்டு வரலாம்; இரண்டாவது, வேலை நிறுத்தம் செய்யலாம்; இரண்டாவதே என்னுடைய தேர்வு'.
ஒரே வாரத்தில் விளைவு வெடித்தது.
பிப்ரவரி 27-ஆம் நாள், கோரல் ஆலையின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆலை மூடப்பட்டது.
இந்திய தேச வரலாற்றில், புதிய வகைப் போராட்டமாகப் பவழ ஆலைப் போராட்டம் மாறியது. சுப்பிரமணிய சிவாவும், வ. உ. சி-யும் முன்னின்று நடத்திய இப்போராட்டம், தொழிலாளர்களையும் தேசியத்தையும் இந்த இருவரும் எவ்வளவு மதித்தார்கள் என்பதையும் உணர்த்தியது.
ஆலைத் தொழிலாளர்களுக்கிடையில் உரையாற்றிய வ. உ. சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவருமே, "மக்களின் புரட்சியே மகேசன் புரட்சி' என்னும் அளவில் உரையாற்றினர்.
ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்குச் செல்லும் வணிக வருமானத்தையும், லாபத்தையும் சுட்டிக் காட்டினர். அதுவும் பிப்ரவரி 25-ஆம் நாளன்று, "வந்தே மாதரம்' என்னும் சுதேசியக் குரலை எழுப்பியிருந்த சிவா, அதனையே போராட்டக் குரலாகவும் அறிவித்தார்.
தூத்துக்குடி பவழ ஆலைப் போராட்டம், இந்தியாவிலிருந்த ஐரோப்பியர்களால் மட்டுமல்லாமல், உலகெங்கிலிருந்தும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
பொருநைக் கரையோஅதகளமானது.
வேலையின்றி வீணே இருக்கும் ஆலைத் தொழிலாளர்கள் (ஐடில் மில் ஹாண்ட்ஸ் என்று இவர்களுக்குப் பெயர் சூட்டப்பட்டது), வ. உ. சி. மற்றும் சிவாவின் மாலை நேரச்சொற்பொழிவுகளைக் கேட்டால், மேலும் போராட்டம் வலுக்கும் என்று கருதப்பட்டதால், ஒரு வகையான ஒடுக்குமுறை கையாளப்பட்டது.
சுதேசிச் சொற்பொழிவுகள் நிகழ்ந்துவிடலாம் என்பதால், அனைத்து வகையான பொதுக்கூட்டங்களுக்கும் வட்டார நீதிபதி பிராக்கன் தடை விதித்தார்.
அடுத்த நடவடிக்கை என்ன என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் சிந்திக்கத் தொடங்கினர்.
1908, பிப்ரவரி 27-ஆம் தேதியன்று வெடித்த கோரல் மில் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, வட்டார நீதிபதி பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதித்தார்.
இருப்பினும், தேசியவாதிகள் பிப்ரவரி 28, 29-ஆம் நாள்களில் (அது லீஃப் வருடம்) பொதுக்கூட்டங்களை நடத்தினர். அதுவும்கூடஎப்படித் தெரியுமா? தங்களின் கூட்டங்களுக்குக் காவல்துறை அலுவலர்கள் வரக்கூடாது என்னும் கோரிக்கையை அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டு நடத்தினர்.
பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் காவல் துறை அலுவலர்கள், என்னென்ன பேசப்படுகின்றன, யார் யார் என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் குறிப்பெடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடியின் காவல் ஆய்வாளராக இருந்த ஜாஃபர் ஹுசைன், அவரிடம் உதவி ஆய்வாளர்களாகப் பணிபுரிந்த வேங்கட வரதாச்சாரி, சுந்தரம் ஐயர், ஹெட் கான்ஸ்டபிள் கலியுக ராமப்பிள்ளை ஆகியோர் இவ்வாறு செய்து வந்தனர்.
எனவே, இவர்களைத் தங்களின் கூட்டத்திற்கு வரவேண்டாம் என்னும் துணிச்சலான கோரிக்கையைக் கடிதமாக அனுப்பிவிட்டு, வ. உ. சி-க்குச் சொந்தமான பழைய நெசவுத் தொழிற்சாலையான தர்ம சங்கத்தில் இந்தக் கூட்டங்களை நடத்தினர்.
இதற்கிடையில், நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக மாவட்ட நீதிபதியான எல். எம். வின்ச் தூத்துக்குடிக்கு வந்தார்.
Advertisement