முன்னதாக நடந்திருந்த இன்னொன்றையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.
வங்காளத்தில், "வந்தே மாதரம்' என்னும் பத்திரிகையை அரவிந்த கோஷ் நடத்தி வந்தார். இந்தப் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றுக்காக அரவிந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்தது. இந்த வழக்கில், அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொல்வதற்காக பிபின் சந்திர பால் அழைக்கப்
பட்டார்.
சர்க்கார் சாட்சியாக அரவிந்தரை எதிர்ப்பதற்குப் பால் மறுத்தார்; கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆறு மாதங்கள் நிறைவடையப் போவதைக் கருத்தில் கொண்டு, பாலின் விடுதலை நாளை தேசமெங்கணும் வெற்றி நாளாகக் கொண்டாடுவதற்கு தேசியவாதிகள் முடிவு செய்தனர். திலக்கின் சீடராக மாறியிருந்த வ. உ. சி-யும் நெல்லைப் பகுதிகளிலும், பொருநைக் கரையிலும் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார்.
பொதுக்கூட்டத் தடையுத்தரவு நீக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 1-ஆம் தேதி முதலே வ. உ. சி-யும், சிவாவும் பொதுக்கூட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டிருந்தனர்.
சுதேசியம், அந்நிய பகிஷ்கரிப்பு ஆகியவை விரிந்து, சுயராஜ்ஜியம், 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பியர்களால் நிகழ்ந்துகொண்டிருந்த பொருளாதாரச் சீரழிவு போன்றவையும் இவர்களின் அனல் கக்கும் உரைகளில் இடம் பிடித்தன.
மார்ச் 7-ஆம் தேதி கூட்டத்தில், விடுதலையாகவிருக்கும் பால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மார்ச் 9-ஆம் நாளன்று ஊர்வலம் ஒன்று நடைபெறும் என்று அறிவித்தனர்.
தொடர்ந்து, "பிபின் பால் இலவச மருந்தகம்' ஒன்றும், "பிபின் பால் வாசிப்பகம்' ஒன்றும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
சுதேசியவாதிகளின் உற்சாகம் குன்றவில்லை என்பதைக் கண்ட அதிகார வர்க்கத்திற்குச் சினம் பொங்கியது. மார்ச் 7-ஆம் தேதி மாலையே,
வ. உ. சி-க்குச் செய்தி விடுத்தார் வின்ச். 9-ஆம் தேதி ஊர்வலம் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டுத் தூத்துக்குடியை விட்டகலுமாறு எச்சரித்தார். வ. உ. சி-யிடமிருந்து மறுமொழி சென்றது - "எத்தகைய கேடு தனிப்பட்ட முறையிலும் தன்னைச் சூழினும் பாதகமில்லை; தேசப் பொது நலனுக்கான நடவடிக்கைகளை விட முடியாது' என்பதே அம்மொழி.
மார்ச் 8-ஆம் தேதி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-ஆம் பிரிவின் கீழ் (செக்ஷன் 144 - கிரிமினல் ப்ரொசீஜர் கோட்), வ. உ. சி., சிவா, தூத்துக்குடி பொதுமக்கள் ஆகியோர் கூட்டம் நடத்தவும், ஊர்வலம் போகவும் தடை விதித்து ஆணையிட்டார் வின்ச்.
இந்த ஆணையிடப்பட்ட ஒரே மணிநேரத்தில், வ. உ. சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது மற்றுமொரு ஆணை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 112-ஆம் பிரிவின் கீழ், மூவரும் மார்ச் 9-ஆம் தேதி காலை 10 மணிக்குத் திருநெல்வேலியில் ஆஜராகும்படி கூறப்பட்டிருந்தனர்.
இவ்வாறு ஆஜராகும்போது, ஒவ்வொருவரும் ரூபாய் 15,000-க்குப் பிணைப் பத்திரம் கொடுக்கவும், தலா ரூபாய் 1,000-க்கான மதிப்பு மிக்க ஜவாப்தாரிகள் இருவர் வழியாகப் பாதுகாப்புப் பிணை கொடுக்கவும், ஓராண்டுக் காலத்திற்கு நன்னடத்தை உறுதிமொழி வழங்கவும் நோட்டீஸ் இடப்பட்டிருந்தது.
நோட்டீஸ் கையில் கிடைத்தவுடன், பலரும் ஒன்று குழுமினர். தலைவர்கள் மூவரையும் சூழ்ந்தனர். நோட்டீஸ் சட்ட விரோதமானது என்று ஏகோபித்த குரலில் கர்ஜித்தனர். அமைதியாக இருக்கும் தூத்துக்குடியில், அமைதியாக ஊர்வலத்தை நடத்தினால், என்ன சேதம் வந்துவிடப்போகிறது என்று கொந்தளித்தனர்.
அப்போதைய இதழ்கள் சிலவற்றில் இந்நிகழ்வுகள் குறித்த பதிவுகளை வாசிக்கும்போது, ஊர்வலத்தை நடத்துவதற்கு வின்ச் அனுமதித்திருந்தால், தேசப் போராட்டம் இன்னும் சிறிது காலத்திற்கு திசை மாறியிருந்திருக்குமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
எது எப்படியோ, ஐரோப்பியர் மற்றும் பிரிட்டிஷாரின் உள்ளங்களில் கப்பியிருந்த பாதுகாப்பின்மை, பொருநைக் கரையில் தன்னுடைய ஆவேச-ஆக்ரோஷ முகத்தைக் காட்டியது.
வ. உ. சி., சிவா, பத்மநாப ஐயங்கார் மீதான நோட்டீஸ், மக்களை உறுத்தியது. இந்த மூவர் எங்குச் சென்றாலும் தாங்களும் வருவதாக மக்கள் சீறியெழுந்தனர்.
அன்றைய கூட்டத்திலேயே கூட காவல் நடவடிக்கைகள் அத்துமீறியிருக்கக்கூடும்; ஆனால், வ. உ. சி., தம்முடைய சாதுர்யத்தால், மக்களைஅமைதிப்படுத்தினார்.
நோட்டீûஸ வாங்கிக் கொண்ட நிலையில், உள்ளே ஏதோ பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதோ என்னும் ஆர்வத்தில், வெளியில் காத்திருந்தார் காவல் கண்காணிப்பாளர் லூவிஸ்.
ஆர்ப்பாட்டமோ, கோபதாபமோ ஏற்பட்டால், சிலரையாவது கைது செய்து விடலாம் என்பதுதான் அவருடைய திட்டம். வ. உ. சி-யின் அமைதிப்படுத்தலில் லூவிஸின் திட்டம் தவிடுபொடியானது.
கோரல் மில் போராட்டம், சுதேசி நாவாய்க் கம்பெனியின் கப்பல் போக்குவரத்து ஆகியவை நடைபெற்ற காலகட்டத்தில்தான், தூத்துக்குடிப் பகுதிக்கான புதிய சப்-கலெக்டராக ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் பொறுப்பேற்றிருந்தார்.
தூத்துக்குடியில் இவர் பொறுப்பேற்றவுடனேயே, வ. உ. சி. குறித்தும், கப்பல்களுக்கான ஆதரவு குறித்தும் பிரிட்டிஷ் வணிகர்கள்அவரிடம் புலம்பியிருந்தனர்.
இயல்பாகவே பரபரப்பு மிக்க ஆஷ், இத்தகைய புகார்களுக்கு வசப்பட்டார். வ. உ. சி. மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் அடக்கப்பட்டாலொழிய, பொருநைக் கரைகளில் பிரிட்டிஷ் அரசு ஆட்சி நடத்த முடியாது என்று ஆஷும், அவரைச் சுற்றியிருந்த ஐரோப்பிய அதிகாரிகளும் நம்பத் தொடங்கினர்.
அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க வேண்டும் என்னும் எண்ணம், அதுவரை வ. உ. சி-க்கு இருந்ததாகத் தெரியவில்லை. சுதேசப் பொருள்களுக்கு ஆதரவு, சுயமான கடல் வாணிபம் என்று எண்ணினாரே தவிர, பிரிட்டிஷார் மீதோ, பிறர் மீதோ எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும், ஆத்திரமும் இவருக்கு இருக்கவில்லை.
பிபின் பால் விடுதலைக் கொண்டாட்டங்கள் பற்றிய சிக்கல் எழுந்தபோது, சுதேசியவாதிகள் மீதான தம்முடைய அத்தனை ஆத்திரத்தையும் சப்-கலெக்டர் ஆஷ், மாவட்டக் கலெக்டரும் மாவட்ட நீதிபதியுமான வின்ச் அவர்களிடம் கொட்டினார்.
ஏற்கெனவே ஏகாதிபத்திய அணுகுமுறை கொண்டிருந்த வின்ச்சுக்கு இது வசதியாகப் போயிற்று. வ. உ. சி-யும், சிவாவும், பத்மநாப ஐயங்காரும் ராஜ துரோகிகள் என்று நம்ப வைக்கப்பட்டிருந்த வின்ச், மார்ச் 9-ஆம் நாள் நெல்லையில் தம்மை இந்த மூவரும் சந்திக்க வேண்டும் என்னும் நோட்டீûஸ அனுப்பி விட்டார்.
மார்ச் 9-ஆம் நாள் காலை, மிகப் பெருங்கூட்டம் பின் தொடர, தூத்துக்குடியை விட்டுத் திருநெல்வேலிக்குப் புறப்பட்டனர். தூத்துக்குடியில் நடைபெறுவதாக இருந்த கூட்டமோ, ஊர்வலமோ நடைபெறவில்லை.
குறித்தபடி, காலை 10 மணிக்குக் கலெக்டர் வின்ச்சை மூவரும் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு நிகழ்ந்த விதத்தையும், வின்ச்சின் ஆதிக்கப் போக்கையும்,
வ. உ. சி. குறித்த தம்முடைய ஆய்வில் விரிவாகவே பதிவிடுகிறார் வரலாற்று ஆய்வு வித்தகர் ரா.அ.பத்மநாபன்.
முழுக்க முழுக்க அகம்பாவம் கொண்ட வின்ச், தேசிய வீரர்கள் மூவரையும் மரியாதைக் குறைவாகவே நடத்தினார்; கொடிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டினார். துணிவு கொண்ட வீரர்கள், சீராக விடையிறுத்தனர்.
"ஏகாதிபத்தியத்திற்கும் தேசியத்திற்கும், பிரிட்டிஷ் வலிமைக்கும் இந்திய அறத்திற்கும் இடையிலான வாக்குவாதம் அது' (It was an argument between
Imperialism and Nationalism, between British Might and Indian Right) என்று பத்மநாபன் எழுதுவது எண்ணி எண்ணி பெருமிதம்கொள்ளத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.