பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் (28/05/2021)
"பல்வேறு ஜாதிகள் உண்டு'' என்று சொல்கிறார்கள். ஆனால், இறைவன் ஓர் உடலில்தான் தங்குகின்றானா? இல்லையே! இறைவனுக்கு இந்த ஜாதி வேறுபாடுகள் இல்லை.
• நற்செயல்களில் ஈடுபடுபவனுக்கு உலகம் முழுவதும் சுகம் நிரம்பியிருக்கிறது. கடல் விரும்பாவிட்டாலும் நதிகளெல்லாம் கடலில் விழுகின்றன. அதுபோல் அறவழியில் நடப்பவர்களிடம் சுகமும் செல்வமும் அழைக்காமலே வந்தடைகின்றன.
-துளசி ராமாயணம்
• ஸ்ரீ பாஷ்யத்தை (பிரம்ம சூத்திரத்தை) அர்த்தத்துடன் முறையாகக் கற்க வேண்டும், கற்பிக்க வேண்டும். அது முடியா விட்டால் நம்மாழ்வாருடைய திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்க வேண்டும், கற்பிக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் பகவான் கோயில் கொண்டிருக்கும் திவ்ய தேசங்களில் வசித்து, பகவானுக்குத் தொண்டு செய்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல் போன்ற சத்காரியங்களில் ஈடுபட வேண்டும்.
-ஸ்ரீ ராமானுஜர்
• "பல்வேறு ஜாதிகள் உண்டு'' என்று சொல்கிறார்கள். ஆனால், இறைவன் ஓர் உடலில்தான் தங்குகின்றானா? இல்லையே! இறைவனுக்கு இந்த ஜாதி வேறுபாடுகள் இல்லை.
-கொங்கணச் சித்தர்
• முக்தி அடைவதற்கு வாயிலாக மனித சரீரம் இருக்கிறது. இந்த மானிட சரீரத்தை அடைந்திருந்தும், உலக வாழ்க்கையில் பற்று கொண்டிருப்பவன் உயர்ந்த பதவியிலிருந்து கீழே விழுந்தவனுக்கு ஒப்பானவன்.
-ஸ்ரீமத் பாகவதம் 1-7-74.
• முனிவர்களாலும் மற்றவர்களாலும் ஸ்ரீ ராமருக்கு பழங்கள் அளிக்கப்பட்டன. அந்தப் பழங்கள் "சபரியின் பக்தி' என்ற அமுதில் ஊறிய பழங்களின் இனிமையை அடையவில்லை.
-துளசிதாசர் இயற்றிய "வினய பத்ரிகா'.
• நாம், "சாயங்கால நேரத்தில் பகவானைத் தியானம் செய்வது' என்று கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். அந்தக் கங்கணம், தோஷங்களாகிய தீமைகள் நம்மை நெருங்காமல் தடுக்கும்.
-இந்துமதம்
• நாம் நல்லவர்களின் புத்திமதியைக் புறக்கணித்து, துஷ்டர்களின் யோசனையைப் பின்பற்றுகிறவன் உயிரைக் காப்பாற்ற முடியாது. அவன் கண்டதைத் தின்னும் நோயாளியைப் போன்றவன்.
-பஞ்ச தந்திரம்
• யாரிடமும் சென்று ஒரு பொருளை பிச்சை கேட்காதே. எந்த விதமான பற்றும் உன்னை ஆட்கொள்ளாமல் பார்த்துக்கொள். ஆனால், சிவபெருமான் மீது மட்டும் பற்றுகொண்டு, அவனை அடையும் வழியிலிருந்து திரும்பாதே..!
-கடுவெளிச் சித்தர்