களக்காட்டில் சிறியதொரு கத்தோலிக்க தேவாலயம் இருந்தது குறித்து பேட் துரை பதிவு செய்திருக்கிறார். பிரிட்டிஷ் படையின் 18-ஆவது ரெஜிமெண்ட்டில் சுபேதாராக இருந்த கஸ்தூரி என்பவருக்குப் பரிசாக, இந்த ஊரில் முப்பது கோட்டை நிலம் (சுமார் 48 ஏக்கர்கள்) வழங்கப்பட்டதாகவும், இந்த நிலத்தில் 1808-இல் இவர் இந்த தேவாலயத்தைக் கட்டியதாகவும் கூறுகிறார். இந்த தேவாலயம் இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.
களக்காட்டில் பழைய கோட்டை ஒன்றின் சுவடுகள் உண்டு. அவ்வப்போது, அந்தந்த ஆட்சியாளர்கள் இந்தப்பகுதியைத் தங்களின் ஆயுத தளவாடமாகப் பயன்படுத்தியுள்ளனர். 15-ஆம் நூற்றாண்டு தொடங்கி 18-ஆம் நூற்றாண்டுவரை, களக்காடு, திருக்குறுங்குடி மற்றும் பணகுடிப் பகுதிகள், யாருக்குச் சொந்தம் என்பதில் திருவிதாங்கூருக்கும் பாண்டிய நாட்டிற்கும் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. 1756-வாக்கில், திருவிதாங்கூரை வெற்றிகொண்ட யூசுஃப்கான் (இவர்தாம் மருதநாயகம் என்றும் கம்மந்தான் என்றும் அறியப்பட்டவர்), இப்பகுதிகளின் மீது ஆளுகை செலுத்தியுள்ளார்.
1765-இல், களக்காடு மாவட்டம் என்னும் பெயரோடு இந்தப்பகுதிகள் மீண்டும் திருவிதாங்கூரிடம் சென்றுள்ளன. 1766-வாக்கில், கிழக்கிந்திய கம்பெனி மத்தியஸ்தம் செய்து வைக்க, களக்காடு மாவட்டத்தின் மீதான தனது ஆக்கிரமிப்பைத் திருவிதாங்கூர் ராஜா, நவாப்புக்கு விட்டுக் கொடுத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு ஆளுகை முழுவதும் பிரிட்டிஷாரிடம் வந்த நிலையில், நான்கு நேரிப் பகுதியைக் கண்காணிப்பதற்கான துருப்புகளை பிரிட்டிஷார் இங்கு நிறுத்தினர். இப்படியாக, கோட்டையும் கொத்தளமும் அமைக்கப்படுவதற்கான அவசியம் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. களக்காட்டில் பாயும் ஆற்றுக்கு கெளதமி நதி என்றே பெயர்.
அனுமான் நதிக்கரையிலிருக்கும் பணகுடியின் பெயரைப் பற்றி வேறுபட்ட தகவல்கள். முன்னர் இங்கு வாழ்ந்தவர்கள் பாணர்கள்; இவர்களின் பெயரால் "பாணர்குடி' என்றழைக்கப்பட்டு, பிறகு பணகுடி என்றானது- இப்படியொரு சாரார். பனைமரங்கள் நிறைந்திருந்த பகுதி; இதனால், "பனைக்குடி' என்றாகிப் பின்னர் "பணகுடி' ஆனது - இவ்வாறொரு சாரார். "பணம் குடி' என்பது "பணகுடி' ஆனதாகவும் சில பதிவுகள். "உத்தமபாண்டியபுரம்', "முரத்தநாடு' என்பவை இவ்வூரின் பண்டைய பெயர்கள்.
ராதாபுரம் என்னும் ஊரின் பழைய பெயர் ராஜராஜபுரம். ஆனால், இது எந்த ராஜராஜன் என்பது தெரியவில்லை.
நம்பியாற்றின் கரையிலிருக்கும் திருக்குறுங்குடிக்கு வைணவ பரிபாஷையில் "தெற்கு வீடு' என்றே பெயர்.
திருக்குறுங்குடியிலிருக்கும் "லெவிஞ்சிபுரம்', "ஐயர்லாந்து எட்டாவது பாரனெட்சர்வீர் ஹென்றி லெவிஞ்சி' என்பாரின் பெயரால் அமைந்தது. வழிபோக்கர்களுக்காகக் கஞ்சிப் பிறை (வழிபோக்கர்கள் தங்குவதற்கும் உண்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட சிறிய விடுதி) ஒன்றை இங்கு அவர் நிறுவினர். அவருடைய பெயரே, இடத்திற்கும் வழங்கப்பட்டது. தூத்துக்குடியிலும் ஒரு "லெவிஞ்சிபுரம்' உண்டு. அங்குக் கஞ்சிப் பிறை நிறுவப்பட்டதாகத் தெரியவில்லை.
பொருநைக் கரை மக்களின் பேச்சு வழக்கில், ஒரு சில சொற்களின் உயிர்மெய் எழுத்துகள், ஒன்றுக்கொன்று இடம் மாறுவது சகஜம். குதிரை என்பது குரிதை அல்லது குருதை ஆகும்; அபராதம் என்பது அபதாரம் ஆகும்.
கதவுகளுக்கும் சாளரங்களுக்கும் தேக்குமரத்தைப் பயன்படுத்தினாலும், கூரை உத்தரங்களுக்குக் கோங்குமரத்தையே பொருநைக்கரைக்காரர்கள் விரும்பினர்.
வீட்டின் பகுதிகளை அமைப்பதில் பொருநைக்கரைக்காரர்கள், தனியானதொரு ரசனையைக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலான வீடுகள், நீளமாக அமையும். வீட்டின் வாசல்புறத்தில் திண்ணை இருக்கும். உள்ளே நுழைந்தவுடன், உள்திண்ணை என்றும் ஒன்றிருக்கும். வெளித்திண்ணையில் ஆண்கள் அமர்ந்து அளவளாவுவது வழக்கம். உள்திண்ணை பெண்களின் ராஜ்ஜியம். நடை, இடைகழி என்றெல்லாம் பிற ஊர்களில் குறிக்கப்படும் இடங்களை நெல்லைக்காரர்கள் "ரேழி' என்பார்கள்.
ரேழியைத் தாண்டி, நாலாம் வாசல்என்றொரு பகுதி; உள்வீட்டு "லாபி' என்று இதனைச் சொல்லலாம். வீட்டின் அளவைப் பொறுத்து, இரண்டு மூன்று கூடுதல் திண்ணைகளும் (நடுத்திண்ணை, சதுரத் திண்ணை என்பனபோன்று) முற்றங்களும் (உள்முற்றம், அடுக்களை முற்றம் என்பனபோன்று) இருக்கும்.
பெண்களின் பிரத்தியேகப் பகுதி "பட்டாசாலை'. பெரும்பாலான வீட்டுப் பகுதிகளின் கூரை, சாய்வுக் கூரையாக இருந்தாலும், உள்திண்ணைக்கும் முதல் ரேழிக்கும் மேலே, தளமிடப்பட்டு, மேல் தளத்திலும் அறைகள் அமைக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த மேல் அறைகள், பொருள்களை பத்திரப்படுத்தப்படும் அறைகளாக, தானியங்களைச் சேகரிக்கும் அறைகளாக இருக்கும். இப்படிப்பட்ட மேல்தள அறையைக் "குச்சில்' அல்லது "பாவுள்' என்பார்கள்.
சில வீடுகளில், ரேழியிலிருந்தபடியே குச்சில் பொருளை எடுப்பதற்கான சிறு கதவோ, இடுக்கோ இருக்கலாம். ரேழிக்கு மேலே பரண்களும் அமைக்கப்பட்டிருக்கும். மாடிப் பகுதி இருந்தால், அதனை மச்சில் என்பார்கள்.
சேர-மலையாள நாட்டின் வழக்கங்களும் சொலவடைகளும் பொருநையில் கலந்து பாய்வது வெகுவான வழக்கம். இப்படிப்பட்ட வழக்கத்தின் வெளிப்பாடு ஒன்று, சென்ற நூற்றாண்டுவரை மிகப் பரவலாகவே இருந்தது. வீட்டின் முன்வாசல் கதவில், வலது கைப் பதிவு (வலது கையை விரித்து வைத்துக் கதவில் பதித்ததுபோல்- உள்ளங்கை, விரல்நுனிகள் என்று) ஒன்று காணப்படும். இதற்கொரு சுவாரசியமான காரணம் சொல்லப்படும். பாதாள லோகத்திற்குத் தள்ளப்பட்டுவிட்ட மகாபலி, ஆண்டுக்கொரு முறை, கார்த்திகை மாதத்தில் பூலோகம் வருகிறார். அப்படி வரும்போது, நம்முடைய வீட்டுக் கதவைத் தம்முடைய வலது கையில் தள்ளிக்கொண்டே வருகிறார். அவருடைய கைப்பதிவுதான் அது!
ஊரில் எல்லோரும் பயன்படுத்துகிற பொது இடங்கள், கோயில்கள், குளங்கள் போன்றவற்றைப் பராமரிக்கவும், இதர பொதுச் செலவுகளுக்குமாகச் சமுதாயம் அல்லது ஒப்படி வசூலித்துச் சேகரிக்கப்படும். அதாவது, ஊர்மக்கள் அனைவரும் தங்களின் பங்கைக் கொடுத்து பணம் சேர்த்திருப்பார்கள். இந்தப் பொதுப்பணத்திலிருந்து ஊருக்கான பொதுச் செலவுகள் நடக்கும். சில ஊர்களில், இதைத் தவிர, அந்தந்த இனத்தார், அவரவர்களுக்குள் இப்படியொரு சேகரம் செய்திருப்பார்கள். அதற்கு, "மகமை' என்று பெயர்.
பங்குனி உத்திரத் திருநாளில் "சாஸ்தா ப்ரீதி' என்னும் விழா நடத்துவது, நெல்லைப்பகுதியெங்கணும் நிரம்பக் காணப்பட்டது. பங்குனி உத்திரத்தன்று முடியவில்லையானால், அடுத்து வருகிற சனிக்கிழமைகளில் இது செய்யப்படும். காலையில் சாஸ்தாவின் திருவுருவத்திற்கு அபிஷேக, ஆராதனைகளும், தொடர்ந்து படையல் நைவேத்தியங்களும் நடைபெறும். மாலையில், கோலாகலமான திருவிழா. சாஸ்தா திருவுருவம் அதியற்புதமாக அணிமணிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்படும். கனிவகைகளும் கரும்பும் சோறும் படைக்கப்படும். விளக்குகளை ஆட்டி சமிக்ஞை கொடுப்பார்கள். சமிக்ஞை கிடைத்தவுடன், "கோமரத்தாட்டம்' தொடங்கும்.
கோமரத்தாட்டத்தில், வழக்கமாக, நான்கு இளைஞர்கள் நிற்பார்கள். சாஸ்தா, சாஸ்தாவின் மூத்த மகனான செல்லப்பிள்ளை, சாஸ்தாவின் சேவகர்களான சங்கிலி பூதத்தான் மற்றும் யக்ஷி ஆகியோரையே இந்த நால்வரும் பிரதிபலிக்கிறார்கள். இசைக் கலைஞர்கள், சாஸ்தாவின் வரலாற்றையும் பெருமைகளையும் பாடப் பாட, பானை பானையாக ஏற்றப்பட்டிருக்கும் கற்பூர வாசத்தை உள்ளிழுத்தபடியே கோமரத்தாடிகள் ஆடுவார்கள்.
சில நேரங்களில், இவர்களில் ஒருவருக்கோ பலருக்கோ "சாமி வந்து', பக்தர்களின் கேள்விகளுக்குக் குறி சொல்வதும் உண்டு.
பொதுவாக, சாஸ்தாவின் பிரதிநிதியாக நின்றவர் மட்டுமே இவ்வாறு குறி சொல்வார். சங்கிலி பூதத்தானும் யக்ஷியும்ஆடுவார்களேயன்றி, குறி சொல்வதில்லை. ஆட்டங்களும் குறி சொல்வதும் முடிந்தவுடன், கோமரத்தாடிகள் நால்வரும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, நதிக்கரையில் நீராட்டப்பெற்று, சாஸ்தா திருமுன்னர் மீண்டும் அழைத்து வரப்படுவர். சாஸ்தாவை வணங்கியதும், கோமரம் அவர்களை விட்டு நீங்கும். படையலிடப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்படும்.
கோமரம் என்னும் சொல், விந்தையாகத் தோன்றலாம். சாஸ்தா என்பவர் ஹரிஹரபுத்திரர் இல்லையா? அதாவது, சிவனாரின் பிள்ளை. எனவே, இவரும் குமாரர் என்றழைக்கப்படுகிறார் (சிவகுமாரர் என்பதால், முருகனுக்கும் இப்பெயர் உண்டு). குமாரம் என்பது கோமரம் ஆகிவிட்டது. குமாரத் தன்மை என்பதே குமாரம். குமாரனுக்காக ஆடுபவர்களும், குமாரனின் பிரதிநிதிகளாக ஆடுபவர்களும், குமாரத்து ஆடி என்றழைக்கப்பட்டார்கள். இதுவே, காலப்போக்கில் "கோமரத்தாடி' ஆகிவிட்டது.
பொருநைக் கரை முழுவதும், உச்சினமாகாளி அம்மன், முத்தாரம்மன், உலகம்மன், முப்பிடாதியம்மன் திருக்கோயில்களைக் காணலாம். தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றுபவள் உச்சினமாகாளி (காவிரிக்கரையில், இவளுக்கே மாரியம்மா என்று திருநாமம்). உலகம்மை, வளமையும் மகப்பேறும் நல்குபவள். சற்றே உக்கிரமாக இருந்து, தீமைகளை அழிப்பவள் முப்பிடாதி.
"நஞ்சை மேல் புஞ்சை' என்னும் வழக்கத்தின்படி, சோளம், ராகி, எள், மிளகாய், மிளகு, காய்கறிகள் ஆகியவற்றை, இடைப்பயிர்களாக (சில சமயம், ஊடுபயிர்களாகவும்) பயிரிட்டுள்ளனர். தாமிரவருணியின் கரையையொட்டி எள் விளைவிப்பார்கள். மற்றவற்றைப் பிசானத்திற்கும் கார் சாகுபடிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆற்றிலிருந்து உள்ளடங்கி, நீர் குறைவாக இருக்கும் இடங்களில் பயிரிடுவார்கள்.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.