முகப்பு
வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 160

சுதேசிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்கள், வ. உ. சி-க்கு ஆதரவு தராதது மாத்திரமல்ல, கம்பெனியையும் சீர்குலைத்தார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:


சுதேசிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்கள், வ. உ. சி-க்கு ஆதரவு தராதது மாத்திரமல்ல, கம்பெனியையும் சீர்குலைத்தார்கள். பாரதியார் மனம் நொந்து இந்தியா பத்திரிகையில் எழுதினார்: 

அவர்கள் (கம்பெனிப் பங்காளிகள்) சிதம்பரம் பிள்ளைக்குத் தக்கவாறு நன்றிக் கடனைச் செலுத்தா விட்டால், இவர்களது முயற்சிகளின் மீது தருமதேவதைக்குச் சினம் பிறக்கும். மேற்படி கம்பெனிப் பங்காளிகளில் ஒவ்வொருவரும் தலைக்கு நாலணா வீதம் போட்டால் எவ்வளவோ பெரிய நிதி சேர்க்கலாம். இவ்விஷயம் அவசியம் நடத்தித் தீர்வதற்குரியது. 

ஆனால், பாரதியாரின் விருப்பம் விழலுக்கிறைத்த நீரானது. திரும்பவும் எழுதினார்: 

சுதேசிக் கப்பல் நிதிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டுமென்று நாம் திரிகரண சுத்தியுடன் ஜனங்களிடம் விண்ணப்பம் செய்தோம். இரண்டு லட்சம் கேட்டதற்கு இரண்டு நூறு வந்திருக்கிறது. என்ன செய்யலாம்?

கம்பெனி கலைக்கப்பட்டது. "கேலியா' கப்பல் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கே விற்கப்பட்டது. 

கப்பல் கம்பெனிக்கு நட்டம் ஏற்பட்டதற்கு வ. உ. சி-யின் அரசியல் போக்கே காரணம் என்று குற்றம் சுமத்தி, பங்குதாரர்களுக்கு இழப்பீடு கேட்டு, சிறையிலிருந்த சிதம்பரனாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போதும்கூட பெருந்தன்மையோடு சேலம் பெருந்தகை விஜய ராகவாச்சாரியாருக்கு ஆலோசனை எழுதினார்: 

என்னால் துவக்கப்பட்ட சுதேசிக் கப்பல் கம்பெனிக்குப் பொருள் உதவிய எல்லோருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவியுங்கள். அக்கடன்களை நானே கொடுத்து விடுகிறேன். ஆனால், நான் சிறை மீளும்வரை அவர்களைப் பொறுத்திருக்கச் சொல்லுங்கள். 

பாரதத்தின் மீதும் பாரதத் தாயின் மீதும் எத்தனை நம்பிக்கை!

சுதேசிக் கப்பல் கம்பெனியின் சிதிலத்தைச் செவிமடுத்த நிலையில்,  வ. உ. சி-யின் மனம் என்ன பாடுபட்டது என்பதை இவரே எழுதியிருக்கும் கவிதைகள் காட்டுகின்றன. 

"என்மனமும் என்னுடலும் என்சுகமும் என்னறமும்
என்மனையும் என்மகவும் என்பொருளும் - என்னுயிரும்
குன்றிடினும் யான் குன்றேன்கூற்றுவனே வந்தாலும்
வென்றிடுவேன் காலால் மிதித்து'. 

பின்னாட்களில், "காலா, என் காலருகே வாடா..... சற்றே உனை மிதிக்கிறேன்...' என்று பாரதிப் புலவர் பாடியதற்கு, வ. உ. சி-யின் மனத்திட்பமே உந்துதலாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. 

நீதிமன்றத் தீர்ப்பின்படி தீவாந்தரமாக அந்தமானுக்கு அனுப்பப்பட வேண்டிய வ. உ. சி, ஏன் இங்கேயே சிறைக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதிலும் சில சர்ச்சைகள் எழுந்தன. 

அப்போதைய முறைகளில், அரசியல் கைதிகளுக்கு, சாதாரணக் காவல் அல்லது நாடு கடத்தல் தண்டனை விதிக்கப்படும். பெருங்குற்றக் கைதிகளுக்கு, கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது கடும் உழைப்புக் கடுங்காவல் 
தண்டனை விதிக்கப்படும். 

வ. உ. சி, சிவா போன்றோர், அரசியல் கைதிகளாக நடத்தப்படாமல், பெருங்குற்றக் கைதிகளைப் போல், கடின உழைப்புக்கு உள்ளாக்கப்பட்டது ஏன்..? என்னும் ஐயம் பலருக்கும் இருந்தது.  

1906-இல், பிரிட்டிஷ் அரசாங்கம் ஆணையொன்றை வெளியிட்டிருந்தது. இந்த ஆணையானது, தீவாந்தரம் பெற்றவர்களை அந்தமானுக்கு அனுப்புவதைத் தடை செய்தது. விலக்குகளைஅளிப்பதற்கான இடம் ஆணையில் இருந்ததென்றாலும், நடைமுறையில், சகட்டுமேனிக்கு இந்த ஆணை எல்லோருக்கும் பொதுவாகவே அமல் செய்யப்பட்டது. 

அரசியல் கைதிகளைப் பழிவாங்கிக் கடுமையான உழைப்புக்கு உள்ளாக்கும் உள்நோக்கத்தோடுதான் இந்த ஆணை வெளியிடப்பட்டதாகவும் சந்தேகம் அப்போது இருந்தது. 

1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி வ. உ. சி. கண்ணனூர்ச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்தபோது, எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள், மனைவி மக்களைத் தவிர, இரண்டே பேர் - ஒருவர், தாமும் விடுதலையாகியிருந்த சுப்பிரமணிய சிவா; மற்றவர், அத்யந்த நண்பர் கணபதிப் பிள்ளை. 

விடுதலைக்குப் பின்னர், சென்னையின் மயிலாப்பூர்,சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர் போன்ற பகுதிகளில் சில காலம் வசித்தார். வக்கீல் தொழில் செய்ய முடியவில்லை. அரச நிந்தனைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர் என்னும் காரணத்தால், வக்கீலாகத் தொழில் செய்வதற்கான உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. 

வாரி வாரி பிறருக்கு வழங்கியவர், வறுமையின் கோரப் பிடியில் சிக்கினார். பலசரக்குக்கடை வைத்து, மண்ணெண்ணெய் வியாபாரமும் செய்தார். இருப்பினும், பிறருக்கு உதவும் மனப்பான்மை இவரை விட்டு நீங்கவில்லை. பெரம்பூர் ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராகச் சிலகாலம் செயல்பட்டு, தொழிலாளர் நலனுக்காக உழைத்தார். 

திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டு அரச நிந்தனைக் குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட வ. உ. சி-யின் வழக்கு விசாரணை 1908, மார்ச் 26-ஆம் தேதி, முதன்முதலாக மாவட்டக் கூடுதல் நீதிபதி வாலஸ் முன்னிலையில் தொடங்கியது என்பதை முன்னரே கண்டோம். 

பின்னர், சிறப்பு செஷன்ஸ் நீதிபதி பின்ஹேயிடம் மாற்றப்பட்டது. இதற்கிடையில், நீதிபதி எட்வர்ட் ஹாமில்டன் வாலஸ், தஞ்சை மாவட்ட நீதிபதியாகப் பொறுப்பு வகித்து, பின்னர் மதராஸ்  உயர்நீதிமன்றத்தின் துணை நடுவர் (ப்யூஸ்ன் ஜட்ஜ்) ஆகியிருந்தார். 

வ. உ. சி. வறுமையில் வாடுவதைக் கேள்விப்பட்டு, வழக்கறிஞர் உரிமம் அவருக்கு மீண்டும் கிடைப்பதற்கு வழி செய்தார். தம்முடைய அன்பையும்,  நன்றியையும் காட்ட, தம்முடைய கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்' என்று வ. உ. சி. பெயரிட்டார் என்பது உலகறிந்த வரலாறு.பெருந்தகையாளர் வாலேஸ்வரன் தொழிலாளர் நல அலுவலராகப் பொறுப்பு வகித்து, எளிமையும் மேன்மையுமாக வாழ்ந்து 2015-இல் மறைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.