புனிதம் வாய்ந்த புரட்டாசி!
தமிழ் மாதங்களில் புரட்டாசியானது மகாவிஷ்ணுவுக்கு மட்டுமல்லாமல் அவருடைய சகோதரியான அம்பிகைக்கும் உகந்த மாதமாகும். சிவபெருமானுக்கும் இம்மாதத்தில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ் மாதங்களில் புரட்டாசியானது மகாவிஷ்ணுவுக்கு மட்டுமல்லாமல் அவருடைய சகோதரியான அம்பிகைக்கும் உகந்த மாதமாகும். சிவபெருமானுக்கும் இம்மாதத்தில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் இந்த மாதத்தின் சிறப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்:
புரட்டாசி சனிக்கிழமை திருவோண நாளில்தான், திருமலைக்கு வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணு எழுந்தருளியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளும், புரட்டாசி திருவோண விழாவும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
திருமலைவாசனின் பிரம்மோற்சவம், கருடசேவை எனப் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. எல்லா வைணவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. பெருமாளுக்கு சனிக்கிழமை விரதம் இருப்பது சிறப்பாகும்.
குயவனின் பக்தி: சனிக்கிழமை விரதமிருந்து, வேங்கடவனை வழிபட்டு, பெரும் செல்வமும், வைகுண்ட பதவியும் பெற்றான் குயவன் பீமன். உடல் ஊனமுற்ற இவன் திருப்பதியில் மண்பாண்டங்கள் செய்து விற்று வாழ்ந்து வந்தான்.
பெருமாளின் தீவிர பக்தனான அவன் தன் நிலை உயர, சனிக்கிழமைகளில் பெருமாளுக்காக விரதம் இருந்து வந்தான். மிகவும் ஏழையாகவும், உடல் ஊனமுற்றும் இருந்ததால் அவனால் கோயிலுக்கும் செல்லமுடியவில்லை. அதனால் அங்கேயே ஒரு பெருமாள் சிலையை களிமண்ணில் செய்து வைத்து, அதற்கு மண்ணினாலேயே பூக்கள் செய்து, அதை மாலையாக அணிவித்து, சிலையை அலங்கரித்து பக்தியுடன் வணங்கி வந்தான்.
மாலை மாறியது: அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை பெருமாளுக்கு அணிவிப்பார். ஒரு சமயத்தில் அவ்வாறு பெருமாளுக்கு தங்கப் பூ மாலை அணிவித்து விட்டு, மறுவாரம் சென்று பார்க்கும் போது தங்கப் பூ மாலைக்கு பதிலாக, களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது. இதைப் பார்த்த மன்னனுக்கு கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் வர, குழப்பத்தில் ஆழ்ந்தார்.
அன்று அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியை எடுத்துக் கூறி, அவன் அணிவித்த களிமண் மாலையைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறி அவன் குழப்பத்தைத் தீர்த்து வைத்தார்.
மன்னன் உடனே இறையருள் பெற்ற குயவனைக் கண்டு வணங்கி, அவனுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்தான். குயவனும் பெருமாளிடம் பக்தி பூண்டு, தொடர்ந்து சனிக்கிழமை விரதம் இருந்து இறுதியில் வைகுண்டத்தை அடைந்தான்.
திருப்பதியில்...: பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கெளரவிக்கும் பொருட்டு, தற்போதும்கூட திருப்பதியில் மண் சட்டியில் தான் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து பெருமாளை வணங்குவது நல்லது. எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருக்க முடியாவிட்டால், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து, பெருமாளை பூஜை செய்து வழிபடுவது சிறப்பாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சத்தில் முன்னோர்களைக் குறித்து அவர்களின் ஆசியை வேண்டி, நீத்தார் கடன் செய்யப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டு, நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்களிடம் ஆசி பெறும் மாதமாக இம்மாதத்தைக் கொண்டாடுகிறோம்.
உமா மகேஸ்வரன் அருள்: புரட்டாசி பெளர்ணமி நாள் சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரரை வணங்கும் முக்கிய நாள். புரட்டாசி பௌர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றி வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
தேவியின் அருள்: இம்மாதத்தின் மற்றொரு புனிதமான விரதம் "கேதார கெளரி விரத'மாகும்.
சிவபெருமானைக் குறித்து, ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் பக்தர்கள் இவ்விரதத்தை ஆரம்பித்து, ஐப்பசி மாத அமாவாசையன்று நிறைவு செய்வர். கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமைக்காக இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
அம்பிகையைக் கொண்டாடும் காலம் நவராத்திரி. சிவனுக்கு சிறப்பாக சிவராத்திரி கொண்டாடுவது போல், அம்மனுக்குரிய விழாக்கள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றில் மிகவும் முக்கியமானது இந்த நவராத்திரி திருவிழா. இவ்விழா இம்மாதத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இதை மகா நவராத்திரி, தேவி சரண் நவராத்திரி, சரத் நவராத்திரி ஆகிய பெயர்களாலும் புராண நூல்கள் போற்றுகின்றன. இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கனிந்த முகமும் கருணை விழிகளும் கொண்டு, ஆயிரம் மடங்கு சாந்நித்தியத்துடனும் சக்தியுடனும் தேவி திகழ்கிறாள் என்பது ஐதீகம்.
தீமைக்கு எதிரான வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படும் இத்திருவிழா, பாரத தேசம் முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
விநாயகர் அருள்: புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இப்படி தெய்வங்களின் வழிபாடும், முன்னோர்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் புனிதமான மாதமாக விளங்குகிறது.
-ரஞ்சனா பாலசுப்ரமணியன்