மக்களைக் காக்க வந்த மகராஜன்!
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மாடுகள் வளர்ப்பு அதிக அளவில் இருந்தது. அந்தக் காலத்தில் மாடுகள்தான் பெரும் செல்வம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மாடுகள் வளர்ப்பு அதிக அளவில் இருந்தது. அந்தக் காலத்தில் மாடுகள்தான் பெரும் செல்வம். பகலில் மாடுகள் காடு மற்றும் மலையடிவாரத்தில் மேய்ந்து விட்டு வரும். அந்த மாடுகளை அடைத்து வைக்க, ஏராளமான மாட்டுத் தொழுவங்கள் இருந்தன. அங்கிருந்து கறந்த பாலை மலையடிவாரத்தில் வசிக்கும் பல கிராம மக்களுக்கு தினமும் ஒரு பால்காரர் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவார்.
ரங்கன் அருள்: அவ்வாறு தொழுவங்களில் கறக்கும் பாலை வியாபாரத்திற்கு எடுத்துச் செல்வோர் ""ரங்கா!'' என்று அழைத்து விட்டே செல்வார்கள்.
பால்காரர் ஒருவர் பால் கொண்டு செல்லும் போதெல்லாம் ஓரிடத்தில் தினமும் கால் இடறி பால் கொட்டி வீணாகி வந்தது.
இதனால் திகைத்த அவர், ஒருநாள் பாலுடன் கிளம்பும்போது, கையில் ஒரு கோடரியையும் எடுத்துக் கொண்டு ""ரங்கா!'' என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
வழக்கமாக கால் இடறும் இடத்தில் பால் கொட்டியதும், கோடரியால் அங்கிருந்த மரத்தின் வேரை வெட்டினார். வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குபு குபுவென பீறிட்டு வந்த குருதி மலையுயரத்திற்குப் பீய்ச்சி அடித்தது. ரத்தத்தைப் பார்த்த பால்காரர் பயந்து போய் வீடு திரும்பினார். அவருக்கு காய்ச்சல் வந்து விட்டது.
அன்று இரவில் அவ்வூர் ஜமீன்தார் கனவில் தோன்றிய பெருமாள், பால்காரர் மூலம் நடந்த நிகழ்ச்சியையும், அவ்விடத்தில், தான் சுயம்புவாக எழுந்தருளி இருப்பது பற்றியும் கூறி, அவ்விடத்தில் ஒரு கோயில் எழுப்புமாறு தெரிவித்து மறைந்தார்.
மறுநாள் காலையில், பால்காரர் மூலம் நடந்த சம்பவத்தைக் கேட்டும், ஜமீன்தார் கனவில் கோயில் எழுப்புமாறு பெருமாள் கூறியதைக் கேட்டும் அவ்வூர் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
மக்கள் அனைவரும் ராமக்கல் மலைக்குச் சென்று, பால்காரர் காட்டிய அதே இடத்தில் சுயம்பு மூலவர் ரங்கநாதரை தரிசனம் செய்து திருமலை நாயக்க மன்னருக்குத் தகவல் தெரிவித்து, அங்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தத் தொடங்கினர்.
அவ்விடத்தில் பெருமாள் ரங்கநாதர் சுயம்பு மூர்த்தியாக தெற்கே தலை வைத்து, வடக்கில் கால் நீட்டி, கிழக்கே முகம் காட்டி, மார்பில் இலக்குமியுடன் "திருமலைராயப்பெருமாள்' என்ற பெயரோடு அருள்பாலிக்கிறார்.
தமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் "ராமக்கல்' என்கிற "ராமமெட்டு' அருகே மலையடிவாரத்தில் கோயில் கொண்டுள்ளார் திருமலைராயப்பெருமாள்.
வளைவான மலையடிவாரம் என்பதை "முடக்கு' எனவும் "கோம்பை' எனவும் அழைப்பர். இருமலைகளுக்கு இடையே வளைந்து உள் வாங்கியிருக்கும் இடத்தில் இவ்வூர் அமைந்ததால் "கோம்பை' எனப்பெயர் பெற்றது.
இந்தப் பெருமாளிடம் மனமுருகி வேண்டினால், காரியங்களைத் தடையின்றி நடத்துவார். சகல பாவங்களையும் போக்குவார். இவரை வழிபட தொழில் அபிவிருத்தி, குடும்பம் ஐஸ்வர்யம் பெருகும்.
உற்சவர் ஊரின் மையத்தில் உள்ள மற்றொரு கோயிலில் "ரங்கநாதர்' என்ற பெயரோடு ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளியிருக்கிறார்.
புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளிலும் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.
நேரம்: சாதாரண நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தரிசன நேரமாகும்.
அமைவிடம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில், தேனியில் இருந்து தேவாரம் செல்லும் பேருந்து வழித்தடத்தில் உத்தமபாளையத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் கோம்பை திருமலைராயப்பெருமாள் திருத்தலம் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 9385663539; 9486095424.