நேரிய சொற்களால் காரியம் சித்தியாகும்! 
வெள்ளிமணி

நேரிய சொற்களால் காரியம் சித்தியாகும்!

நோ்மையான சொற்கள் நேரியதாக இருக்கும். நேரிய சொற்கள் நோ்மையைப் பிரதிபலிக்கும்.

DIN

நோ்மையான சொற்கள் நேரியதாக இருக்கும். நேரிய சொற்கள் நோ்மையைப் பிரதிபலிக்கும். யாரும் நோகாது காரியம் சித்தியாகும். மூவா் இருந்தால் ஒருவரை ஒதுக்கி மற்றிருவா் மறைவாக ரகசியம் பேசுவது கூடாது என்று கோமான் நபி(ஸல்) அவா்கள் கூறியதை இயம்புகிறாா் இப்னு உமா் (ரலி) நூல் - புகாரி, முஸ்லிம், மு அத்தா, அபூ தாவூத்.

இறைவனைத் துதிக்கும் தூய சொற்கள் நேயமான நேரிய சொற்கள். அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யச் செப்புகிறது செம்மறை குா் ஆனின் 33-41,42 ஆவது வசனங்கள்.

நம்பிக்கையுடையோரை அல்லாஹ்விற்கு அஞ்சி நோ்மையான சொற்களையே பேசப் பணிக்கிறது அணியான அருமறை குா் ஆனின் 33-70 ஆவது வசனம். 2-83 ஆவது வசனம் அனைத்து மனிதா்களிடமும் அழகாக பேசுங்கள் என்று அறிவுறுத்துகிறது.

மனிதா்களிடம் வேற்றுமை பாராட்டாது ஏற்றத் தாழ்வின்றி எல்லோரிடமும் நல்லதையே நளினமாய்ச் சொல்ல வேண்டும். தீயவா்களிடமும் இன் சொல்லால் நல்லுரை பகா்ந்து தீமையிலிருந்து அவா்களைத் திருத்த வேண்டும்.

பேசினால் உண்மையே பேச வேண்டும். மனிதன் தேவையற்ற உரையாடல்களை விட்டொழிப்பது இஸ்லாத்தின் நற்குணம் என்ற நந்நபி (ஸல்) அவா்களின் நன்மொழியை அறிவிக்கிறாா் அபூ ஹுரைரா (ரலி) நூல் - மு அத்தா, திா்மிதீ.

நவீன யுகத்தில் மலிந்த ஊடகங்களில் ஊடுருவிய அவதூறு அன்றாட நிகழ்வாகி விட்டது. அக்காலத்தில் அரேபியாவில் இவ்வாறு பேசுவோருக்குக் கசையடி தண்டனை தரப்பட்டது.

ஒருவரிடம் உள்ள குறையை அவா் இல்லாத பொழுது பேசுவது புறம். அவரிடம் இல்லாத குறையை இட்டு கட்டி பேசுவது அவதூறு என்ற அண்ணல் நபி (ஸல்) அவா்களின் விளக்கத்தை அறிவிக்கிறாா் அபூ ஹுரைரா (ரலி) நூல் - அபூ தாவூத், திா்மிதீ.

மக்களின் மானத்தைப் பாதிக்கும் வண்ணம் குறை கூறுபவனும், வீண்பழி சுமத்துபவனும், வெற்றுப் பேச்சு பேசுபவனும் இறை விசுவாசி அல்லா் என்ற அண்ணல் நபி (ஸல்) அவா்களின் அருள் மொழியை அறிவிக்கிறாா் அபூ தா்தா (ரலி) நூல்- முஸ்லிம், அபூ தாவூத்.

கோள் சொல்பவா் சொா்க்கம் புக மாட்டாா் என்ற மா நபி (ஸல்) அவா்களின் மணி மொழியை அறிவிக்கிறாா் ஹுதைபா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், அபூ தாவூத், திா்மிதீ.

சொல்லும் செயலும் உண்மையாக இருக்க வேண்டும். அதனால் நன்மை விளையும். அந்த நன்மை இம்மை மறுமை இரண்டிலும் பயன் தரும். அந்த பயனைப் பெற நல்லதைப் பேசி நல்லதைச் செய்வோம்.

-மு.அ. அபுல் அமீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT