முகப்பு
வெள்ளிமணி

காலேஸ்வரம் ப்ரணீதா புஷ்கரம்!

புஷ்கர விழா நதிகளைப் போற்றி வணங்கும் ஒரு திருவிழாவாகும். சிருஷ்டியில் இருக்கும் மூன்றரைக்கோடி தீர்த்தங்களுக்கும் அதிபதி பிரம்ம தேவன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

புஷ்கர விழா நதிகளைப் போற்றி வணங்கும் ஒரு திருவிழாவாகும். சிருஷ்டியில் இருக்கும் மூன்றரைக்கோடி தீர்த்தங்களுக்கும் அதிபதி பிரம்ம தேவன். அவற்றினுள் ஒரு சில தீர்த்தங்களுக்கு நம் புராணங்கள் புஷ்கர விசேஷத்தை நிர்வகித்துள்ளன. புஷ்கரவிழா ப்ராசீனமான 12 புனித தீர்த்தங்களின் கரையிலும், அதையொட்டி உள்ள ஆலயங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயரும் பொழுது, அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுகின்றது. அவ்வகையில் திருக்கணித பஞ்சாங்காத்தின்படி இவ்வாண்டு (பிலவ வருடம்) பங்குனி மாதம் 30-ஆம் தேதி, ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 7.54 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியடைகின்றார். மீன ராசிக்குரிய ப்ரணீதா (பரணீதா) நதிக்கரையில், காலேஸ்வரம் திருத்தலத்தில் புஷ்கரவிழா நடைபெறுகின்றது.

ஆதிபுஷ்கரம்: பிரும்மாவின் கமண்டலத்திலுள்ள தீர்த்தத்தில் சகலதீர்த்த அதிபதியான 'புஷ்கரர்' என்ற அரசர் வகிக்கிறார் என்பது ஐதீகம். பிரம்மனின் ஆக்ஞைப்படி புஷ்கரர் ஒவ்வொரு பெயர்ச்சியின் போதும் அந்த ராசிக்குரிய நதியில் குருபகவானுடன் முதல் 12 நாட்கள் வாசம் செய்கின்றார். இதுவே "ஆதி புஷ்கரம்' எனப்படும். இந்த ஆதிபுஷ்கர புண்ய காலத்தில் அனைத்து நதி தீர்த்தங்களுக்கும் அதிபதியான பிரம்மா உட்பட மும்மூர்த்திகளும், தேவர்களும், ரிஷிகளும் வந்து நீராடி மகிழ்வதாக புராணங்கள் வாயிலாக அறியப்படும் செய்தியாகும். 

எனவே, அந்த நாட்களில் நாம் அங்கு சென்று புனித நீராடினால் பாரதத்தில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும் ஆதிபுஷ்கர காலங்களில் செய்யப்படும் பல்வேறு தானங்களுக்கும், தர்ப்பணம் முதலிய பித்ருக்கள் வழிபாட்டிற்கும், நடைபெறும் யாகங்கள், பூஜைகள், காம்யார்த்த ஹோமங்களில் பங்கேற்பதும் அபரிமிதமான பலன்கள் கிடைப்பதாக புராணங்கள் அறுதியிட்டு கூறுகின்றன.

இவ்வாண்டு மீனராசி குருபெயர்ச்சியை முன்னிட்டு ப்ரணீதா நதியில் குருபகவான் வாசம் செய்யும் முதல் 12 நாட்களும் (ஏப்ரல் 14 முதல் 25 வரை) ஆதி புஷ்கர புண்யகாலமாக கருதப்படுகிறது.

ப்ரணீதா நதிச்சிறப்பு: பிரும்மா யக்ஞம் செய்யும் போது பயன்படுத்தும் ப்ரணீதா பாத்திரத்தில் இருந்து வந்த அற்புதமான நீரே ப்ரணீதா நதியாக மாறியது என்று புராணம் கூறும். இந்த நதியின் பழம்பெருமை பிரும்ம புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கோதாவரியின் முக்கிய துணை நதியான ப்ரணீதா மகாராஷ்டிராவின் பண்டைய விதர்பா பகுதியில் தோன்றி சுமார் 113 கி.மீ பாய்ந்து ஓடி, பல புண்ணிய தலங்கள் வழியாக தட்சிணாகாசி என அழைக்கப்படும், காலேஸ்வரத்தில் (தெலங்கானா மாவட்டத்தில் உள்ளது) தட்சிண கங்கை என்ற சிறப்புடன் திகழும் கோதாவரியுடன் இணைகிறாள்.

காலேஸ்வர சேஷத்ர மகிமை: கோதாவரி, ப்ரணீதா, அந்தர் வாஹினியாக சரஸ்வதி (பூமிக்கடியில் ஓடுகின்றது) ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் இடமாக காலேஸ்வரம் இருப்பதால் அதற்கு தட்சிண திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பிரும்மாவினால் குசப்புல்லைக் (தர்ப்பை) கொண்டு இவ்விடத்தை புண்யாவாகனம் செய்யப்பட்டதால் இத்தலத்திற்கு குசதர்ப்பணம் என்ற பெயரும் உண்டு.

காலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோயில் முக்தேஸ்வர சுவாமி கோயில் என்பதாகும். இங்கு சிவபெருமான் யமனாகவும் (காலா அல்லது மரணத்தின் இறைவன்) மற்றும் ஈஸ்வரனாகவும் (உயிர்களின் இறைவன்) காட்சியளிக்கின்றார். இறைவன் வாழ்க்கை மற்றும் இறப்புக்கு அப்பாற்பட்டவர் மற்றும் ஒரே நிலையானவர் என்பதை உணர்த்தும் விதத்தில் காலேஸ்வரர் முக்தேஸ்வரர் என்று அழைக்கப்பட்டுகிறார். இந்த கருத்தைக் குறிக்கும் விதமாக மூலஸ்தானத்தில் ஒரே பீடத்தில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன.

இவ்வாலயத்தில் தட்சிண கங்கையை இத்தலத்தில் கொணர்ந்தததற்கு விநாயகப் பெருமான் பெரிதும் காரணமாய இருந்தவர் ஆதலால், பக்தர்கள் முதலில் அவரை தரிசனம் செய்த பிறகு தான் பிற சந்நிதிகளுக்கு செல்ல வேண்டும் என்ற மரபு கடைபிடிக்கப்படுகின்றது. இதைத் தவிர சரஸ்வதிதேவி மற்றும் சூரிய பகவானுக்கு தனி சந்நிதிகள் உண்டு. இந்தியாவில் கேதார்நாத் தொடங்கி இராமேஸ்வரம் வரை எட்டுக் கோயில்கள் துல்லியமாக ஒரே புவியியல் நேர்க்கோட்டில் அமைந்துள்ளதாக கூறுவர். அதில் காலேஸ்வரர் சிவன் கோயிலும் ஒன்றாகும்.

காஞ்சி மகான் விஜயம்: காஞ்சி மகா சுவாமிகள் தன்னுடைய பாரத திக்விஜயத்தில் இரண்டு நாட்கள் இங்கு தங்கி வழிபாடுகள் நடத்தியுள்ளார். அவருக்குப் பின் பட்டமேற்ற 69,70வது பீடாதிபதிகளும் இத்தலத்திற்கு விஜயம் செய்துள்ளது சிறப்பு.

நடைபெறவிருக்கும் புஷ்கர விழா: ஏற்கெனவே கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்திரா, சந்திரபாகா நதிக்கரைகளில் புஷ்கரவிழாவினை சிறப்பாக நடத்திய அதே ஆன்மீக அன்பர்கள் கொண்ட விழாக்குழுவினரே ப்ரணீதா புஷ்கர விழாவிற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆக்ஞைப்படியும், அவரது அருளாசியுடனும், பல்வேறு மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்களின் ஆசிர் வாதத்துடனும், உடுப்பி, பெஜாவரா மடம் மற்றும் மத்வமத பீடாதிபதிகளின் அனுக்கிரகத்துடனும் இவ்விழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்ரல் 25-ஆம் தேதி இவ்விழா நிறைவு பெறுகின்றது.

காலேஸ்வரம் - இருப்பிடம்: தெலுங்கானா மாவட்டத்தில் ஜதராபாத்திலிருந்து வாரங்கல் வழியாக இத்தலத்திற்குச் செல்லலாம். காலேஸ்வரம் அருகில் உள்ளது, மான்சிரியால் இரயில் நிலையம் அருகில் உள்ளது.

தகவல் தொடர்பிற்கு: மகாலட்சுமி சுப்ரமண்யம் 9840053289 வளசை ஜெயராமன் (உறுப்பினர்): 9444279696.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.