வெள்ளிமணி

தீர்த்தங்கள் வழிபட்ட கோயில்

 முற்காலத்தில் மயில்கள் அதிகம் வாழும் வனப் பகுதியான பரசலூர் என்ற இடத்தருகே சிவனை அவமதித்து தட்சன் யாகம் செய்தார்

தினமணி

 முற்காலத்தில் மயில்கள் அதிகம் வாழும் வனப் பகுதியான பரசலூர் என்ற இடத்தருகே சிவனை அவமதித்து தட்சன் யாகம் செய்தார். அப்போது, கெளதம முனிவரின் சாபத்தால் அந்த யாகத்துக்கு பயந்து தப்பிவந்த மயில்களுக்கு பார்வதி தேவி அபயம் அளித்து காப்பாற்றியதாகவும், சினம் கொண்ட சிவன், பார்வதியையும் மயில் ஆகும்படி கூறியுள்ளார்.
 பெண் மயிலாக இருந்த பார்வதி வெகுநாள்கள் தங்கி, லிங்க வடிவில் சிவனை பூஜித்தார். இறுதியில் சிவன் தாமும் ஆண் மயில் உருவம் எடுத்து சேர்ந்து ஆடினார். இருவரும் சேர்ந்து ஆடியதால், இவ்வூர் "மயிலாடுதுறை' ஆனது.
 பார்வதி மயில் உருவம் கொண்டு பூஜை செய்தமைக்கு சான்றாக, வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக அமைந்துள்ளது அருள்மிகு அபயாம்பிகை உடனுறை ஸ்ரீஆதிமாயூரநாதர் கோயில். இங்கு தாமிரத்தினால் ஆன மயில் உருவம் உள்ளது. கிழக்கு நோக்கிய 9 நிலை கொண்ட மிகப் பெரிய ராஜகோபுரம் சுமார் 160 அடி உயரத்தில் இருக்கிறது.
 இந்தக் கோயிலில் உள்ள அருணாசலேஸ்வரருக்கு பெளர்ணமியன்று வெளி பிரதட்சணம் செய்து, 11 முறை கிரிவலம் வருவது வழக்கமாக உள்ளது. இது திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதற்கு சமமாகும். இக்கோயிலில் அம்பாள் அபயப்பிரதாம்பிகை, அஞ்சல்நாயகி, அஞ்சலை, மயிலம்மை உள்ளிட்ட பெயர்களிலும் வணங்கப்படுகிறார்.
 பெண் மயில் உருக்கொண்ட பார்வதி தேவியுடன் மாயூரநாதர் ஆண் மயில் உருக்கொண்டு ஆடிய தாண்டவம் மாயூர தாண்டவம். இதை "கெளரி தாண்டவம்' என்றும் கூறுவர். இதையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் துலா உற்சவத்தில் 5-ஆம் திருநாளன்று தேவி மயிலாக பூஜித்ததை குறிக்கும் வகையில் ஆண், பெண் மயில் திருவுருவங்கள் கோயிலில் இருந்து காவிரி துலாக்கட்டம் வரை திருவீதியுலா வருவது வழக்கமாக உள்ளது.
 புண்ணிய நதியான காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ள மாயூரநாதர் கோயிலின் கிழக்கே விளநகரில் துறைகாட்டும் வள்ளலாரும், தெற்கே பெருஞ்சேரி என்னும் இடத்தில் நெறிகாட்டும் வள்ளலாரும், மேற்கே மூவலூர் என்ற இடத்தில் வழிகாட்டும் வள்ளலாரும், வடக்கே காவிரி வடகரையில் ஞானம் காட்டும் வள்ளலாரும் உள்ளனர். இவற்றின் நடுவில் மாயூரநாதர் வள்ளல் பெருமானாக அருள்பாலிக்கிறார்.
 இந்தக் கோயிலைச் சுற்றிலும் துலாக்கட்டத்தின் தெற்கே கடைத்தெரு காசி விஸ்வநாதர் கோயில், காவிரி பாலத்தின் தென் கரையில் பாலக்கரை விஸ்வநாதர் கோயில், வள்ளலார் தீர்த்த மண்டபத்தின் காவிரி நதியின் வடகரையில் வள்ளலார் விஸ்வநாதர் கோயில், திம்மநாயக்கன்படித்துறையில் படித்துறை விஸ்வநாதர் கோயில், மாயூரநாதர் வடக்கு வீதிக்கும், வடக்கு திருமதில்களுக்கும் இடையே உள்ள விஸ்வநாதர் கோயில் ஆகியவற்றை முறையே கெளதமர், அகத்தியர், பரத்வாஜர், கண்ணுவர், இந்திரன் ஆகியோர் பூஜித்துள்ளனர்.
 சமயக் குரவர்களில் திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் இத்தலம் குறித்துப் பாடியுள்ளனர். இத்தலத்தை 300 ஆண்டுகளுக்கு முன்பு பொன்விளைந்த களத்தூர் ஆதியப்ப நாவலர் தனது மாயூர புராணத்தில் பாடியுள்ளார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை புதிய மாயூர புராணம் பாடியுள்ளார். இப்புராணம் 1,895 செய்யுள்களையும், 64 படலங்களையும் உள்ளடக்கியது. முத்துசாமி அய்யர் திருமயிலை வெண்பா அந்தாதி இயற்றியுள்ளார். நல்லாத்துக்குடியில் வாழ்ந்த கிருஷ்ண ஐயர் அபயாம்பிகை சதகம் எழுதியுள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
 பெருமான் துலா மாதமாக ஐப்பசி மாதத்தில் மாயூரத்தில் இடப தீர்த்தத்தில் மூழ்கி, குறைகளை போக்கிக் கொள்ள அருளியதாகவும், தீர்த்தங்கள் அவ்வாறே வந்து நீராடி மாயூரநாதரை வழிபட்டு புனிதம் அடைந்தன என்பதும் வரலாறு.
 இதையொட்டி, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கி புனித நீராடிச் செல்வது வழக்கமாக உள்ளது.
 இந்தக் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (செப்.3) காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
 இந்த விழாவை ஆக. 27-இல் திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தில் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கிவைத்தார்.
 விழா ஏற்பாடுகளை மாயூரநாதர் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
 -ஜி.கிருஷ்ணகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT