முகப்பு
வெள்ளிமணி

அ​ரு‌ள்​ வ​ழ‌ங்​கு‌ம் அ‌ஷ்ட புஜ‌‌ பெரு​மா‌ள்

நகரங்களில் மிகச் சிறந்த, காஞ்சிபுரத்தில் விளங்கும் வழிபாடு சிறப்புமிக்க பல கோயில்கள் அமைந்துள்ளன.

Updated On : 16 பிப்ரவரி, 2024 at 4:27 PM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2024 at 4:20 PM

அனைத்து சமயங்களும் மலர்ந்திருந்ததை இங்கு காணப்படும் மக்களால், கோயில்களால் அறிய முடிகிறது.

"சின்ன காஞ்சிபுரம்'எனப்படும் வைணவக் காஞ்சியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று "அஷ்ட

புஜப்பெருமாள்' எனப்படும் "எண்கரத்து எம்பெருமான் கோயில்' ஆகும்.

Advertisement

இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் தனது எட்டு கரங்களில் சக்கரம், கட்கம், மலர், அம்பு, இடது கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவை தாங்கி தன்னை வழிபடும் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி அருள்புரியும் அற்புத வடிவை காணலாம்.

"தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்ட புய கரத்தான்', "சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு" என்று மூன்றாம் திருவந்தாதியிலே பேயாழ்வார் போற்றுவதைக் காணலாம் (பாசுரம் 2380).

பெரிய திருமடலில் (பாசுரம் 128) "அட்டபுயகரத்து எம்மான் ஏற்றை என்னை மனம் கவர்ந்த ஈசனை' என்று திருமங்கையாழ்வார் புகழ்ந்து போற்றுகிறார். மேலும் தனது பெரிய திருமொழியிலும் (எட்டாம் திருமொழி) } "செம்பொன் இலங்கு வலங்கைவாளி, திண் சிலை, தண்டொடு சங்கம் ஒன்வாள், உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம், ஒன்மலா பற்றி எற்றே' என பெருமாளின் அழகை விவரித்துக் கூறுவதைக் காணலாம்.

இப்பெருமாளை, வானத்து அம்சுடர், அலைகடல், அழகிய வடிவு, ஆவி ஒப்பார் இவர் ஆர் கொல், புகழ் சூழ்ந்த கச்சி, அட்டபுயகரத்து ஆதி என்றெல்லாம் போற்றுவதையும் காணலாம். ஒவ்வொரு பாசுரத்தின் இறுதி வரியில் "அட்டபுயகரத்தேன் என்றாரே" என்று முடிவதையும் பார்க்கிறோம்.

"மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன் } வணங்கும்; அட்டபுயகரதது பெருமாள்' எனக் குறிப்பிடுகிறார். பல்லவ மன்னர் நந்திவர்மன் (கி.பி. 796 } 847) "வயிரமேகன்' என்ற சிறப்புப் பெயர் பெற்றிருந்தார். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தின் இறுதியில் "கலிகன்றி' என்று அழைக்கப்பட்ட அவர் அருளிய இந்தச் சொல் மாலையைக் கொண்டு "அட்டபுயகர பெருமாளை வணங்கினால் வைகுந்தம் கிடைக்கும்" எனச் சிறப்பித்துக் கூறுகிறார். வேதாந்த தேசிகரும் இந்தப் பெருமாளைப் போற்றி பத்து சுலோகங்களை இயற்றி உள்ளார்.

மேற்கு நோக்கிய கோயில். வடக்கு நோக்கிய ராஜகோபுரம். எட்டு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தரும் எண்கரப் பெருமாள் "ஆதிகேசவ பெருமாள்' என அழைக்கப்படுகிறார். தாயார் அலர்மேல்மங்கை, புஷ்பவல்லித் தாயார் எனப் போற்றி வணங்கப்படுகிறார். கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காப்பாற்றியதால் உற்சவர் "கஜேந்திர வரதர்' என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் "கஜேந்திர புஷ்கரணி' என வழங்கப்படுகிறது. கோயில் திருச்சுற்றில் பரமபதவாசல், வராகப் பெருமாள்,

சக்கரவர்த்தித் திருமகன், ஆண்டாள் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

பெருமாள் எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் சக்ராக்ருதி விமானம் என சிறப்பித்து அழைக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோயிலுக்கு சோழமன்னன் முதலாம் ராசேந்திர சோழன் காலத்தில் (கி.பி.1034) திரு அஷ்ட புஜ கிரகத்து மகாவிஷ்ணு வழிபாட்டுக்கு நிலம் அளித்த செய்தி காணப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இவ்வூர் "இராஜசுந்தரி சதுர்வேதி மங்கலம்' என அழைக்கப்பட்டது.

திருஷ்டபுஜகிரகத்து நின்றருளிய பரமசுவாமி கோயிலில் பெருமாளுக்கு அமுது படைப்பதற்கு தானம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. விஜய நகர மன்னன் வேங்கடன் கி.பி.1593) ஆட்சிக்காலத்தில் இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு வழிபாடு தொடர நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன.

இந்தக் கோயிலில் சித்திரை, தை மாத ரோகிணி, ஆடி அஸ்தம் நாள்களில் உற்சவங்களும், வைகுண்ட ஏகாதசி நாளில் பரம்பத சேவையும் சிறப்பாக நடைபெறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டுதலின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிப். 26}இல் திருக்குடமுழுக்கு நடைபெறுகிறது.

தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.