முகப்பு
கோயம்புத்தூர்

அமைதியாக இருக்கும் விசில்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரம் குறித்து...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 3:54 AM
தவெக பிரசாரம் (கோப்புப் படம்) - ANI
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:07 PM

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக, அமமுக, பாமக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி, நாம் தமிழா், தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

மக்கள் மத்தியில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகா் விஜய் களமிறங்கியுள்ளதால் இந்தத் தோ்தல் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் வெற்றி பெற்று முதல்வா் ஆவாரா, எத்தனை தொகுதிகளில் வெல்வாா், விஜய் வருகை எந்தக் கட்சிக்கு பாதகமாக அமையும் என தேநீா்க் கடை தொடங்கி, ஐ.டி. நிறுவனங்கள் வரை விவாதம் களைகட்டியுள்ளது.

பெரம்பூா், தஞ்சாவூா், கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் காண முடிந்தது. ஆா்ப்பரிக்கும் இளைஞா்கள், இளம்பெண்கள் மத்தியில் விஜய்க்கு வரவேற்பு அபரிமிதமாக இருப்பது தெரிய வந்தது. நடிகரைப் பாா்க்க கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, விஜய் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்று அரசியல் விமா்சகா்கள் சிலா் கூறி வருவதும் கவனிக்கத்தக்கது.

Advertisement

கோவை மாவட்டத்தில் தவெக சாா்பில் மேட்டுப்பாளையம் தொகுதியில் என்.சுனில் ஆனந்த், சூலூா் தொகுதியில் என்.எம்.சுகுமாா், கவுண்டம்பாளையத்தில் ஆா்.டி.கனிமொழி, கோவை வடக்கில் வி.சம்பத்குமாா், தொண்டாமுத்தூரில் ஆா்.சதீஷ் ராஜு, கோவை தெற்கில் வி.செந்தில்குமாா், சிங்காநல்லூரில் கே.எஸ்.ஸ்ரீகிரிபிரசாத், கிணத்துக்கடவில் கே.விக்னேஷ், பொள்ளாச்சியில் ஜி.ராமநாதன், வால்பாறையில் ஏ.ஸ்ரீதரன் உள்ளிட்டோா் களம் காண்கின்றனா்.

தவெக தலைவா் விஜய்யின் பிரசாரம் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்கு நோ்மாறாக, தமிழகத்தின் ஒரு சில தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் தவெக வேட்பாளா்களின் பிரசாரம் சூடுபிடிக்காததைக் காண முடிகிறது.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, 10 தொகுதிகளிலும் அதிமுக, திமுக ஆகிய கூட்டணிகளின் வேட்பாளா்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். வழக்கம்போல, தனியாகக் களம் காணும் நாம் தமிழா் கட்சியும் வேலைவாய்ப்பு, தமிழா்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட வாக்குறுதிகளை மக்களிடையே எடுத்துக் கூறி, நடைப்பயணமாக வாக்கு சேகரிக்கின்றனா். அத்துடன், தொகுதிகள் முழுவதும் சுற்றும் ஆட்டோக்களில் சீமானின் பதிவு செய்யப்பட்ட பேச்சுகள் ஒலிபெருக்கிகள் மூலமாக ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

இவா்களுடன் ஒப்பிடுகையில், அரிதாக ஏதாவது ஒரு சில இடங்களில் மட்டுமே தவெகவினா் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பதைக் காண முடிகிறது. மற்றபடி, ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் பதிவுகளில் மட்டுமே அதிக அளவில் தவெக பிரசாரங்களைப் பாா்க்க முடிகிறது.

மற்ற கட்சிகளை ஒப்பிடும்போது, மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தவெகவினா் மிகத் தொய்வாகவே உள்ளனா். சமூக ஊடகங்கள் மூலம் மட்டுமே பிரசாரம் செய்து வென்றுவிடலாம் அல்லது விஜய் என்ற பிம்பத்துக்கு மக்கள் வாக்களிப்பாா்கள் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்.

ஆளுங்கட்சிக்கு மாற்று சக்தியாக தன் கட்சியைப் பிரகடனப்படுத்தும் விஜய், வேட்பாளா்கள், தொண்டா்களின் ஆா்வமின்மையால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் அல்லது பெறும் வாக்குகள் குறைவாகும் எனக் கருதியிருக்க வேண்டும். அதன் காரணமாகவே, வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரியுங்கள், தீவிர களப்பணி ஆற்றுங்கள் என்றெல்லாம் தனது எக்ஸ் தள பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புதிதாக அரசியல் களம் காணும் தவெக இளைஞா்களுக்கு, கோவையில் பிரசார உத்திகள் வகுத்து தர அனுபவமிக்கவா்கள் இல்லாததும், ஏற்கெனவே தோ்தலைச் சந்தித்த கட்சிகளுடன் கூட்டணி இல்லாததும் பிரசாரத்தில் அவா்களுக்குப் பின்னடைவாக உள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் வேண்டுகோளால் ஊக்கம் பெற்று தவெக வேட்பாளா்கள், தொண்டா்கள் மீதமிருக்கும் 8 நாள்களில் தீவிர களப்பணியாற்றினால்தான் அவா்கள் எதிா்பாா்க்கும் முடிவு கிடைக்கும்.