முகப்பு
வெள்ளிமணி

மா​த​வ‌ன் எ‌ன்று சொன்னால்...!

சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரியில், மகா பெரியவா 1950-களில் 48 நாள்கள் முகாமிட்டிருந்தார்.

Updated On : 16 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரியில், மகா பெரியவா 1950-களில் 48 நாள்கள் முகாமிட்டிருந்தார். அப்போது அவர் தினமும் மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பார். அவருடைய உத்தரவின்பேரில், தல வரலாறு ஆராயப்பட்டது.

ஓலைச்சுவடியாய் இருந்த "மயூரபுரி மகாத்மியம்' என்னும் வரலாற்று நூல் தேடி எடுக்கப்பட்டு ஸ்ரீ உ.வே. மயுர சடகோபாச்சாரை விளக்கம் எழுதச் சொல்லப்பட்டு 1957}ஆம் ஆண்டில் 5 பாகங்களாக வெளியிடப்பட்டது.

கலியுகம் பிறந்த நேரத்தில், தவம் செய்து கொண்டிருந்த வசிஷ்ட மஹரிஷியிடம் முனிவர்களும் தேவர்களும் வந்து, "கலிதோஷம் தீண்டாத இடம் எது' என்று கேட்டபோது, "பிருகு முனிவரின் ஆசிரமம் அமைந்திருக்கும் இடம்' என்றார்.

திருமால் குடிகொண்டதாலும், மாதவம் புரிந்தோர் கூடியதாலும் "மாதவபுரம்' என வழங்கப்படுகிறது. அந்த இடத்தில் அமைந்திருப்பது "மயிலை மாதவப் பெருமாள் கோயில்'. கலி தீண்டாத இங்கு பிருகு முனிவரின் ஆசிரமத்தின் வாவிக்கரையில் சோலையில் அமர்ந்து தனக்கு ஒரு மகவு வேண்டி தவம் செய்து கொண்டிருந்தார். பெருமாள் காட்சி தந்து,

"திருமகளே உனக்கு மகளாக அவதரிப்பாள். அவளை யாம் உம்மிடம் இருந்து உலக நலன் வேண்டி சாயா மணம் முடிப்போம்' எனக் கூறி மறைந்தார்.

பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்தபோது வந்த மங்கலப் பொருள்களுடன் அமிர்தம், அதனோடு லட்சுமியும் தோன்றினாள். பிருந்தாரண்ய ஷேத்திரத்தில் மயூரபுரி பிருகுவின் ஆசிரமத்தில் லட்சுமியும் திருமால் காட்டிய வழிப்படி பிருகுமுனிவரின் ஆசிரமத்தை அடைந்தாள். சிறுமியைக் கண்ட பிருகு முனிவர் தன் தவ வலிமையால் உண்மையை உணர்ந்து அவள் அமிர்தத்தோடு தோன்றியவள் ஆதலால் "அமிர்தவல்லி' எனத்திருநாமமிட்டு வளர்த்தார்.

உரிய காலத்தில் பூவுலகில் திருமால் அவதரித்து மயூரபுரியின் ஆசிரமத்தை அடைந்தார். வந்தது மாலென ஞானத்தால் உணர்ந்த பிருகு முனிவர் அவரை உபசரித்து பங்குனி உத்திரத்தன்று அமிருதவல்லியை திருமணம் செய்து வைத்தார். தன் ஆசிரமம் இருந்த பகுதியை நாராயணனுக்கு தானமாகக் கொடுத்து அவ்விடத்தில் தொடர்ந்து நித்தியவாசம் செய்ய வேண்டினார்.

அதன்படி திருமகளுடன் மாதவன் என்னும் திருநாமம் தாங்கி திருமால் அங்கு இருந்து அருளத் தொடங்கினார்.

1,200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோயில் இருந்துள்ளது. தற்போதைய கட்டுமான அமைப்பு சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இத்தலத்தின் தலாதிபதி பேயாழ்வார் மாதவனை வழிபட்டு, திருமழிசை ஆழ்வாருக்கு ஞானோபதேசம் செய்துள்ளார்.

ஆனந்த நிலைய விமானம் எனப்படும் கருவறை விமானத்தின் கீழ், சந்நிதியில் அமர்ந்த கல்யாணக் கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிப்பவர் கல்யாண மாதவனாக வணங்கப்படுகிறார். அரவிந்த மாதவன் என்னும் திருநாமத்தோடு உற்சவ மூர்த்தியாய் வந்து வரம் நல்கும் மாதவருக்கு பெயர் ஆகும். கோயிலிலும் பிரார்த்தனைத் திருமஞ்சனங்களுக்காகவும் எழுந்தருளும் மாதவன் "நிரஞ்சன மாதவன்' என வணங்கப்படுகிறார். தனிக் கோயில் நாச்சியாராக அமிர்தவல்லித்தாயார் படிதாண்டாதவளாக தாயாராக இருந்து அருள்கிறாள்.

"ஆழ்வார் பாசுரங்களில் ஞானபிரான்' என அழைக்கப்படும் ஸ்ரீ லட்சுமிவராகர் உரிய இடத்தில் தனி சந்நிதியில் அமர்ந்து மாணவர்களுக்கு கல்விக்கு உற்ற துணையாக இருந்து அருளுகிறார்.

ப்ராந்தகயோகி என அழைக்கப்பட்ட பேயாழ்வார் மயிலையில் திருமால் மீது ஆழங்கால்பட்டு பேய் போல் பிடித்துக் கொண்டவராதலால் "பேயாழ்வார்' என அழைக்கப்பட்டார். இவரை "தமிழ்த் தலைவன்' எனவும் அழைப்பர். இங்கு திருமழிசை ஆழ்வாருக்கு ஞானோபதேசம் செய்து வைத்தார். இவ்வைபவம் ஆழ்வார் அவதார உற்சவத்தில் நான்காம் நாள் உற்சவமாக நடைபெறுகிறது. ஆழ்வார் அவதார உற்சவத்தில் தேருக்கு அடுத்த நாள் முதலாழ்வார் மூவருக்கும் திருக்கோவிலூரில் காட்சி கொடுத்த "திருக்கோவிலூர் வைபவம்' என்னும் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

இத்தலத்தின் தீர்த்தம் சந்தானபுஷ்கரணி என்ற பெயரோடு கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது. பிருகு மாமுனிவரின் ஆசிரமத்தில் இருந்த வாவியே இந்த சந்தானபுஷ்கரணியாகும். குழந்தை வரம் நல்கும் சிறப்புடைய தீர்த்தமாகும். இந்தத் தீர்த்தத்தில் மாசி மக நட்சத்திரத்தில் சுக்கில பட்சத்துப் பெüர்ணமி திதியில், அனைத்துப் புண்ணிய நதிகளும் வந்து சேர்ந்து மாதவனை வணங்கிச் செல்வதாக வரலாறு தெரிவிக்கிறது.

கிருஷ்ணாவதார உருவில் மாதவப்பெருமாளாக புன்னை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட இத்தலத்தில் குடிகொண்டுள்ளார். "மாதவன்' என்று சொன்னால் "எந்த இடறும் வாராது' என நம்மாழ்வார் சொல்கிறார். கோயில் திருப்பணி நிறைவு பெற்று, குடமுழுக்கு பிப். 21}ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.