மும்மூர்த்திகளில் பக்தர்களிடம் பரிவுடன் உதவுவதில் சாந்த மூர்த்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய பிருகு முனிவர், ஒருமுறை பிரம்மனின் அவைக்குச் சென்றார். அவரை கவனிக்காத பிரம்மனைச் சபித்து, கயிலாயத்துக்கு பிருகு முனிவர் சென்றார். அங்கு சிவனும் கண்டு கொள்ளாததால் சாபமிட்டுவிட்டு, வைகுண்டத்துக்கு போனார்.
அங்கோ திருமாலுக்கு லட்சுமி திருவடிச் சேவை செய்தவாறு இருந்தார். திருமாலும் கவனிக்காததால் அவரது நெஞ்சிலே உதைத்தார். ஆனால், திருமாலோ பிருகு முனிவரின் செயலுக்குக் கோபப்படாமல், முனிவரின் திருவடிகள் வலிக்குமோ' என்று நினைத்து, கால்களைப் பிடித்தார். இதனால் சாந்தமானவர் திருமால் என பிருகு முனிவர் வாழ்த்திச் சென்றார்.
திருமாலின் இட மார்பில் நீங்காதிருக்கும் திருமகள் முனிவரின் செயலால் சினம் அடைந்து உதைத்த கால்களைப் பிடித்ததால், "உங்களைப் பிரிந்து செல்கிறேன்'' எனக் கூறி பூலோகம் வந்து தவத்தில் ஈடுபட்டாள்.
தனிமையில் இருந்த தம்பதியைத் தொந்தரவு செய்து பிரிந்து செல்லச் செய்த பாவத்துக்குப் பரிகாரம் வேண்டி லட்சுமியை நோக்கி மணிமுத்தாறு நதிக்கரையில் மலைகள் கோட்டைபோல் அமைந்து சூழ்ந்திருந்த வளம் மிகுந்த "அழகிய ஸ்ரீ சைலபுரம்' என்னும் பகுதியில் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டார் பிருகு முனிவர்.
மகாலட்சுமி பெண் குழந்தை வடிவில் இங்கு வர அவளை உணர்ந்த பிருகு முனிவர் குழந்தையை தவச் சாலையிலேயே வைத்து வளர்த்தார். திருமண வயதில், திருமால் அழகிரிநாதராக ஆசிரமத்திற்கு வர அவர்களுக்கு மணம் முடித்து வைத்து பரிகாரம் செய்தார் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
திருமணத்துக்குப் பின்னர் அங்கேயே தங்கி அருள்புரிய பிருகு முனிவர் வேண்ட, அதன்படி அழகிரிநாதர் ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் என்று கருவறையிலும் லட்சுமி ஸ்ரீ சுந்தரவல்லித்தாயார் தனிக் கோயில் நாச்சியாராகவும் எழுந்தருளி வணங்கப்படுகின்றனர். வளமும் செழுமையும் மிகுந்த ஸ்ரீசைலபுரம் "சேலம்' என அழைக்கப்பட்டது. மலை நாற்புறமும் சிறப்புற கோட்டையாக அமைந்துள்ளதால் இவருக்கு "கோட்டைப்பெருமாள்' எனவும் "கோட்டை அழகிரிநாதர்' எனவும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளுடன் கூடியது. திருமணிமுத்தாறு நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆதிவேணுகோபாலர், சுவாமி, ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், சந்தான கோபாலர், துர்க்கை, ஆழ்வார்கள் சந்நிதிகள் மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளன. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பே கோயில் பிரசித்தி பெற்ற அபிமானத் தலமாக இருந்துள்ளது என்றும் 12-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியன் முதலில் கருங்கல் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்துள்ளார் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலவர் கருவறை மீது சாலை விமானம் அமைந்துள்ளது . அதன்கீழ் பெருமாள் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம் அபயமாக சதுர்புஜத்துடன் கரங்கள் கொண்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். 4 கால பூஜை நடைபெறும் கோயில் மக்களின் பிரார்த்தனை தெய்வமாக விளங்கும் தலமாகும்.
"வேண்டுவோருக்கு வேண்டிய வரம் கிடைக்கும். திருமணப் பாக்கியம் கிட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பதவிகள் கிடைக்கும். வியாபாரம் பெருகும். தடைகள் நீங்க வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். எங்கும் காணக் கிடைக்காத சிறப்பாக கொடி மரத்துக்கு முன் கருடன், பின்னர் ஆஞ்சநேயர் திருவுருவங்களும் அமைந்துள்ளன, ராமனைத் தவிர எவருக்கும் தலை வணங்காத அனுமன், அழகிரிநாதருக்குப் பணிந்து கொடி மரத்தின் முன் இருகரம் கூப்பி மிக கம்பீரத்துடன் அருளுகிறார்.
புதன், சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தாயார், மூல நட்சத்திரத்தில் அனுமன், புனர்வசுவில் ராமர், சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் என வழிபடும் வழக்கம் உள்ளது. பெளர்ணமியில் பகல் நேரத்திலும், அமாவாசை தினத்தில் மாலை, இரவு வேளைகளிலும் இந்தக் கோயிலில் வழிபடுவது மிக நல்லது எனப்படுகிறது.
சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும், சேலம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.