நதிக்கு ஆசிச்சீர் வழங்கும் நம்பெருமாள்
காகத்தால் விரிக்கப்பட்ட வரலாறு உள்ளதாலும் "காவிரி' எனப்படுகிறது.
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் "காவிரி' எனப் பெயர் பெற்றது. காகத்தால் விரிக்கப்பட்ட வரலாறு உள்ளதாலும் "காவிரி' எனப்படுகிறது.
இந்த ஆறு சோழ நாட்டை செழிக்கச் செய்கிறது. "பொன்படு நெடுவரை' என்கிற சங்கக் காலப் பாடலின்படி, குடகு மலையில் தோன்றிப் பாய்வதாலும் "பொன்னி' என்னும் பெயர் உடைய காவிரியின் வரலாறு சுவை மிகுந்தது.
சுர்வதமன் என்ற அரக்கன் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தான். தான் என்றும் வெற்றி அடைய வேண்டும் என்ற வரத்தைப் பெற்று, தேவர்களைச் சிறைப்பிடித்தான். ஆனால், இந்திரனும், வருணனும் தப்பிச் சென்று தென் இந்தியாவில் ஒளிந்தனர். இந்திரனைப் பிடிக்க சுர்வதமன், வருணனைப் பிடித்து மிரட்டி, தென் இந்தியாவில் ஒரு சொட்டு மழை கூட பொழிய விடாமல் செய்ததால், அந்தப்பகுதி பாலைவனமானது.
மக்கள் அல்லல் கண்ட அகத்தியரும் தவமிருக்க பிரம்மன் காட்சி தந்தார். அவரிடம் உதவி கேட்க, சிவனிடம் முறையிடக் கூறினார். அகத்தியருக்கு சிவனும் தன் தலையிருந்த கங்கையின் ஒரு பகுதியைக் கொடுக்க அதை கமண்டலத்திலேந்தியவாறு தென் பகுதிக்கு வந்தார். தென் பகுதியைக் காண பின் தொடர்ந்தார் விநாயகர்.
அகத்தியர் ஓரிடத்தில் கமண்டலத்தை அருகில் வைத்து அமர்ந்தார். அப்போது விநாயகரும் காகமாக உருவெடுத்து, கமண்டல நீரை கீழே சாய்த்து விட்டார். நீர் பெருகியோட சொந்த உருவுக்குத் திரும்பினார் விநாயகர். சினந்த அகத்தியரிடம் விநாயகர், ""வறண்ட பகுதியை வளமாக்க நினைத்து செய்தேன்'' என்றார். இருவர் நோக்கமும் நிறைவேறியது.
கவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திரப் பாக்கியம் வேண்டி பிரம்மாவை நோக்கி தவம் செய்தான். பிரம்மாவும் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உருவாக்கி, அளித்தார். காவிரி என்ற பெயரில் வளர்ந்தவள், உரிய பருவத்தில் தகுந்த கணவனை வேண்டி தவம் செய்தாள். அகத்தியரைக் கண்ட காவிரி, லோபாமுத்ரா என்ற பெயருடன் திருமணம் செய்துகொண்டாள். இந்த உலகில் பிற நதிகளுக்கும் மனிதர்களுக்குமான பாவங்களை நீக்கவும், மோட்சத்தை கொடுக்கும் மறு உருவாகத் திகழ, அகத்தியமுனி அருள அதன்படி காவிரி நதியாகப் பிறந்தாள் என வரலாறு உள்ளது.
கர்நாடகத்தின் குடகில் இருந்து வந்த அவள் கால் கொண்டது சோழநாடு. காவிரி தொடர்ந்து வந்து ஓடி அரங்கனை சூழ்ந்து மாலையாக விளங்கும் பேறு பெற்றதால் கங்கையிலும் புனிதமான காவிரி என சிறப்பு பெற்று, அரங்கனின் திருமஞ்சன தீர்த்தமாகும் பேறு பெற்றாள்.
"கங்கையில் நீராடியவர்களின் பாவத்தை ஏற்று, மொத்த பாவத்தைப் போக்கிக் கொள்ள கங்கையே காவிரியில் வந்து நீராடி பாவம் அனைத்தையும் போக்கி பொலிவையும் புனிதத்தையும் அடைவதால் கங்கையிலும் புனிதமாய காவிரி' என்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.
ஆடி மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழையில் ஆறுகளில் புதுப் புனலாகப் பொங்கி வரும். இதனை "ஆடிப்பெருக்கு' என்பர்.
காவிரி பாயும் பகுதிகளில் வாழும் மக்கள் காவிரி ஆற்றை அன்னையாகவும் தெயவமாகவும் வழிபடுவார்கள். விவசாயிகள் வற்றாத நதிகளைக் கடவுளாகப் போற்றி , இந்நாளில் வழிபட்டு உழவைத் தொடங்குவார்கள். இதனடிப்படையில்தான் "ஆடிப்பட்டம் தேடி விதை' என்று கூறுவர்.
சோழ நாட்டில் , ஆடி பதினெட்டாம் நாளன்று "ஆடிப்பெருக்கு' விழா காலங்காலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் குடும்பத்துடன் காவிரி தெய்வத்துக்கு வழிபாடு செய்யப்படுகிறது . புதுமணத் தம்பதிகளை காவிரிக்கு அழைத்துச் சென்று தாலி பிரித்துக் கோர்த்து, "காவிரி போல் நீடூழி வாழ்க!' என வாழ்த்தி, சித்திரான்னங்களைப் படைத்து குடும்பத்துடன் அமர்ந்து உண்டு இல்லம் திரும்புவர்.
"காக்கும் கடவுளான பெருமாள் ஸ்ரீரங்கம் பெருமாள் தென்னீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடும் கருமணியை கோமளத்தை' என்று குலசேகர ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும்படி சயனிக்கிறார். ஆடிப் பெருக்கன்று படித் துறையில் பெருமாள் எழுந்தருளுவதற்காக, அம்மா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள காவிரியம்மன் கோயிலில், நின்ற கோலத்தில் தன்னிரு கரங்களுடன் கையில் குடமேந்தி அருளும் அம்மனை பக்தர்கள் வழிபடுவர்.
காவிரியை கெüரவப்படுத்த நாள் முழுவதும் அங்கு தங்கி பக்தர்களுக்கு அருளுவார். மாலையில் சந்நிதியிலிருந்து காவிரிக்கென யானை மீது பெருமாள் அமரவைக்கப்பட்டு, சீராக புஷ்பம், மாலை,புடவை,பொன், பொட்டு திருத்தாலி, கருகமணி புடவை, பிரசாதம் ஆகியவை கொண்டு வரப்படும். நல்ல நேரத்தில் மேள தாளம் முழங்க அரங்கன் சீராக அவை காவிரிக்கு "மரியாதை'யாக சமர்ப்பிக்கப்படும். பின்னர், பெருமாள் சந்நிதி திரும்புவார்.
இவ்வாண்டு ஆடிப்பெருக்கு ஆக. 3}இல் நடைபெறுகிறது.
இரா.இரகுநாதன்