அருணகிரிநாதர் 
வெள்ளிமணி

ஆறுமுகன் போற்றிய அருணகிரிநாதர்

அருணாசலேஸ்வரர் கோயிலின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரிநாதர்.

ரஞ்சனா பாலசுப்ரமணியன்

ஆறுமுகனைப் பாடிப் பணிந்தவர்களில் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் குறிப்பிடத்தக்கவர். இவர் கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்த ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

அக்னி தலமான திருவண்ணாமலையில் நல்லதோர் குடும்பத்தில் பிறந்த அருணகிரி, இளமையில் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். உரிய வயதில் திருமணமும் நடந்தது.

பின்னாளில் பெண்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டு விளங்கியதால், சொத்தையும் இழந்ததோடு, பெருநோயும் வந்து சேர்ந்தது. அப்போதும் காமம் மேலிட்ட அவரை உடன்பிறந்த சகோதரியே தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடன் சொல்ல, வீட்டை விட்டே வெளியேறி கால் போன போக்கில் அருணகிரிநாதர் சென்றார்.

முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் அருணகிரிநாதரின் கதையை பெரியவர் ஒருவர் கேட்டு, முருகனை நோக்கி தியானம் செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆனாலும் குழப்பத்தில் இருந்த அவருக்கு தியானத்தில் மனம் ஒப்பவில்லை.

இறுதியில் திருவண்ணாமலை கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து தம் உயிரை விட தீர்மானித்து முற்பட்டபோது, முருகன் தன்னுடைய திருக்கரங்களால் தாங்கினார். அவரை, ""அருணகிரிநாதரே!'' என அழைத்து வேலால் நாவிலே ""சரவணபவ'' என்னும் ஆறெழுத்து மந்திரத்தை எழுத, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்கு சித்தித்தது.

"எம்மைப் பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்'' என்று முருகன் அருள, ""பாடல் புனையும் வழியே அறியாத நான் எவ்விதம் உன்னைப் பாடுவேன்'' என்று அருணகிரிநாதர் கண்கலங்கினார். முருகனோ, ""யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!'' என்று சொல்லிவிட்டு, ""முத்தைத் தரு பத்தித் திருநகை...'' என பாட்டுக்கு முதலடியை எடுத்துகொடுத்துவிட்டு மறைந்தான்.

உடனே அருணகிரியாரின் திருவாக்கிலிருந்து, அழகான சந்தக் கவிதைகள் பிறந்தன. பின்னாளில், அவர் பல ஊர்களுக்கும் சென்று முருகனை இத்தகைய சந்தக் கவிகளால் பாடிப் பரவினார். இந்தக் கவிதைகளின் தொகுப்பே ""திருப்புகழ்'' .

அருணாசலேஸ்வரர் கோயிலின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரிநாதர். அப்போது அவருடன் திருவண்ணாமலையை ஆண்டு வந்த விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன் நட்பு பாராட்டி வந்தான்.

இதையறிந்து பொறாமை கொண்ட ஆஸ்தான பண்டிதனான சம்பந்தாண்டானோ இருவரின் நட்பைப் பிரிக்க நினைத்தும், மன்னனின் மனம் மாறவில்லை. தொடர்ச்சியாக, மன்னனிடம் சம்பந்தாண்டான், ""தனக்கும் அருணகிரிநாதருக்கும் போட்டி வைக்க வேண்டும். அதில் தோல்வியடைந்தால் ஊரைவிட்டே ஓடவேண்டும்'' என்றான்.

சம்பந்தாண்டான் தனது இஷ்ட தெய்வமான தேவியை அழைக்க வேண்டும் என்றும், அருணகிரிநாதர் முருகனை அழைக்க வேண்டும் என்றும், எவர் அழைக்கும்போது அவர்களுடைய தெய்வம் தோன்றுகிறதோ அவரே வெற்றி பெற்றவர் என்பதே போட்டி.

போட்டி நாளன்று சம்பந்தாண்டானுக்கு தேவி காட்சியளிக்கவேயில்லை. அருணகிரிநாதருக்கு அருணாசலேஸ்வரர் கோயிலின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் வண்ண மயிலேறி காட்சி தந்து மறைந்தான்.

ஒருமுறை அருணகிரிநாதர் திருவண்ணாமலையை வலம் வந்தபோது, பழித்துப் பேசிய பலர் சாம்பலாகினர். அதைக் கண்ட அருணகிரிநாதர் மனம் வருந்தி முருகனிடம் முறையிட, செவி சாய்த்து அனைவருக்கும் உயிர் பிச்சையளித்தான்.

மற்ற கவிஞர்களுடன் போட்டியிட்டு, தோல்வியுற்றவர்களின் காதுகளை அறுத்தெறிந்த வில்லிபுத்தூராரின் தலைக்

கனத்தை அடக்க பாடிய பாடல்களே "கந்தரந்தாதி' ஆகும். அருணகிரிநாதர் இறுதியில் திருவண்ணாமலைக்குத் திரும்பி வந்து, தியானத்திலேயே இறுதிக் காலத்தைக் கழித்தார். நாளடைவில் இறைவனோடு இரண்டறக் கலந்து, அத்வைத நிலையாகிய சாயுஜ்ய நிலையை அடைந்தவுடன், கோயிலில் மேலைப் பிரகாரத்தில் அடக்கம் செய்து சிறிய கோயிலும் அமைத்தான் மன்னன் பிரபுடதேவராயன். அதில் அருணகிரிநாதரின் கல் விக்கிரஹத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்தச் சமாதிக் கோயில் இன்றும் உள்ளது.

வரும் ஜூன் 22}ஆம் தேதி (ஆனி மூலம்) அருணகிரிநாதரின் அவதாரத் திருநாளாகும். அருணாசலேஸ்வரர் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள மணிமண்டபத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.

ரஞ்சனா பாலசுப்பிரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT