முகப்பு
வெள்ளிமணி

பாவங்களைப் போக்கும்...

Updated On : 31 மே, 2024 at 11:26 AM
பகிர்:

"நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்' என்பார்கள். நரசிம்மர் மந்திரங்களின் வடிவானவராதலால், "மந்திரமூர்த்தி' எனவும் வணங்குவர்.

அந்தப் பகுதியை வசந்தராஜன் என்னும் குறுநில மன்னன் ஆண்டுவந்தான். நரசிம்மமூர்த்தியின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த வசந்தராஜன் தன் படைகளின் ஒருபிரிவை நிறுத்தி வைத்திருந்த இடத்தில் நரசிம்மருக்கு கோயில் எழுப்ப முடிவுசெய்து, திருப்பணிகளைத் தொடங்கினான். இத்தருணம் பார்த்து பரிக்கலாசூரன் தன் மாயப்படைகளுடன் வந்து தாக்கி அழித்தான். மன்னனின் பெற்றோரும் மாண்டனர். இதை அபசகுனமாகக் கருதி மன்னன் திருப்பணியை நிறுத்திவிட்டான்.

சில காலம் கழித்து ராஜகுருவான வாமதேவரிடம் ஆலோசனை கேட்டபோது, வேறொரு இடத்தைத் தேர்வு செய்தார். அங்கு கோயில் திருப்பணி தொடங்குவதற்கு முன் மூன்று நாள்கள் இரவும், பகலும் தொடர்ந்து தடையில்லாமல் யாகம் நடத்துவதற்கும் ஏற்பாடுகளைச் செய்தார்.

திருவதிகையில் ஆண்டுவந்த தாரகாட்சன், கமலாட்சகன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். மூன்று அசுரர்களையும், அவர்களது கோட்டைகளையும் சிவன் எரித்து சாம்பலாக்கினார். இந்தத் தகனத்துக்கு திருமால் அம்பாக இருந்து உதவினார்.

மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிக்கலாசூரன் மனித உடலும், குதிரைமுகமும் கொண்டவன். நிகழ்ச்சியின்போது தப்பித்து சென்று திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வனப் பகுதிக்குள் சென்று மறைந்துகொண்டான்.

பரிக்கலாசூரனால் யாகத்துக்கு இடையூறு ஏற்படாதிருக்க பூஜை செய்த கங்கணம் ஒன்றை வசந்தராஜன் கையில் அணிவித்தார் வாமதேவர். முனிவர்களுடன் அமர்ந்து வாமதேவர் யாகம் நடத்த தொடங்கும் முன் மன்னருக்காகத் தனி யாகம் நடத்த வேண்டியிருந்ததால், பாதுகாப்பு கருதி சில முக்கிய மந்திரங்களைப் போதித்து புதருக்குள் மன்னன் அமரவைக்கப்பட்டிருந்தான்.

பரிக்கலாசுரன் யாகப் பொருள்களை காலால் இடறி கேடு செய்து வசந்தராஜனைத் தேடினான். வசந்தராஜனால் உச்சரிக்கப்பட்ட மந்திர ஒலி மட்டும் பரிக்கலாசூரனின் காதுகளில் கேட்டது. அங்கு சென்று கோடாரி எடுத்து வசந்தராஜனின் தலையை பிளந்தான். பிளந்த தலையில் இருந்து உக்கிரம் கலந்த கோபக்கனலுடன் நரசிம்மர் தோன்றி பரிக்கலாசூரனின் உடலை இரு கூறாக்கி, முக்தி தந்தார். பின்னர், நரசிம்மரும் வசந்தராஜனை உயிர்ப்பித்தார்.

"கோப உக்கிரம் பொதிந்த திருவுருவை மக்கள் துதிக்க, அஞ்சுவர். எனவே, சாந்த சொரூபராக அன்னை திருமகளோடு இங்கேயே எழுந்தருள வேண்டும்' என வசந்தராஜன் வேண்டினான். இதை ஏற்று லட்சுமி நரசிம்மராக இருந்து அருளினார். பரிக்கலாசூரனை ஸ்ரீநரசிம்மர் வதம் செய்த இடம் பரிக்கலாபுரம்}பரிக்கல் என குறுகியது.

ஆண்டுதோறும் பிரம்மோற்சவ திருவிழா நாள்களில் ஓலைச் சுவடிகளில் இருந்து வாசிக்கும் பழக்கம் இருந்துவருகிறது.

இக்கோயிலில் மூலவர் கருவறையில் மூன்று ஆஞ்சநேயர்களில் ஒருவர் கர்ப்பகிரகத்திலிருந்தே அருகிறார். கர்ப்பகிரகத்தில் நரசிம்மருடன் ஆஞ்சநேயர் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. மேலும் இரண்டு ஆஞ்சநேயர்கள் உள்பிரகாரத்தில் வலதுபுறமாக நின்ற கோலத்தில் வீர ஆஞ்சநேயர், அனுக்கிரக ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளனர்.

கோயிலில் மராட்டிய மன்னர் வீரசிவாஜி வந்து வணங்கியதால் பல வெற்றிகளைப் பெற்றார். வீரபாண்டிய கட்டபொம்மனும் தங்கி வணங்கி சென்றுள்ளார். ஐந்து நிலை ராஜகோபுரமுடைய இந்தக் கோயில் கருவறை மூலமூர்த்தி ஸ்ரீலட்சுமிநரசிம்மர், தாயார் ஸ்ரீகனகவல்லி எனவும் அழைத்து வழிபடப்படுகின்றனர்.

தெற்கு நோக்கிய சேத்திர பாலராக தனி சந்நிதியில் வரம்தரும் ஸ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும். தல

விருட்சமாக வன்னிமரம் உள்ளது.

மாதம்தோறும் சுவாதி தின சிறப்புத் தரிசனம் பலன் தரும் தரிசனமாகும். கோயிலில் திருப்பணிகள் முழு அளவில் நிறைவு பெற்று, ஜூன்

9}ஆம் தேதி காலை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. கள்ளக்

குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் அமைந்துள்ளது.

விவரங்களுக்கு 6379018094, 9943073722.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.