மலையான மாலன்
நாமக்குன்றமீதமர்ந்த நரசிங்கமே' என்று அனுமனை நாமக்கல் மலையாகவும், ராமனை நரசிம்மராகவும் உருவகப்படுத்தி கம்பர் பாடியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், வடவேங்கடமலை, ஸ்ரீரங்கம் ஆகிய மூன்றையும் ஒருமுறை தரிசித்தால் முக்தி நிச்சயம் என்பர். மூன்று திவ்ய தேசங்களும் ஒன்றாக இணைந்தது "ஆரைக்கல்' என்றழைக்கப்பட்டு, நாமக்கல் என்ற பெயரோடு இன்று அழைக்கப்படுகிறது.
"உலக இயக்கத்துக்குப் பிரதானமாக இருக்கும் ஊர்' என்ற பொருளிலான நாமக்கல்லை திருமாலின் கோட்டை என்பர். மலையின் கீழ்புறம் ரங்கநாதராகவும், மேலே மலைக்கோட்டையின் உள்ளே வரதராஜராகவும், மலையின் மேற்குப் பகுதியில் நரசிம்மராகவும் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது.
"நாமக்குன்றமீதமர்ந்த நரசிங்கமே' என்று அனுமனை நாமக்கல் மலையாகவும், ராமனை நரசிம்மராகவும் உருவகப்படுத்தி கம்பர் பாடியுள்ளார்.
இரண்யகசிபுவை வதம் செய்தவுடன் உக்கிரம் தணியாத நரசிம்மரை பிரகலாதன் வேண்ட இமயமலை சென்று சாளக்கிராமமாக உருமாறினார். திருமாலைக் காணாமல் பூவுலகம் வந்த திருமகள், ஆரைக்கல்லில் திருத்தவம் மேற்கொண்டாள்.
ராமாயணப் போரில் மேகநாதனின் பாணத்தில் லட்சுமணன் மூர்ச்சித்து விழுந்தான். ஆஞ்சநேயரோ லட்சுமணனை ராமரிடம் கொண்டுவந்து சேர்த்தார். சுசேனர் சொன்னபடி, மூலிகைக்காக, சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து லட்சுமணனின் உயிரைக் காத்தார் ஆஞ்சநேயர். மீண்டும் இமயத்தில் சஞ்சீவி மலையை சேர்க்கச் சென்றபோது, அதன் அருகில் இருந்த இருமுக சாளக்கிராமத்தால் ஈர்க்கப்பட்டார். அதனோடு ஆகாய வழியில் இலங்கை திரும்பிய ஆஞ்சநேயர் நீர் அருந்த நிலம் இறங்க, தவக்கோலத்தில் இருந்த திருமகளை தரிசனம் செய்தார்.
தான் நீர் அருந்தி வரும் வரை, சாளக்கிராமத்தை திருமகள் , திருக்கரங்களில் ஒப்படைத்துச் சென்றார். நேரமானதால் பாரம் காரணமாக திருமகள் சாளக்கிராமத்தை நிலத்தில் வைத்து, ஆஞ்சநேயருக்காக காத்திருந்தாள். திரும்பி வந்த ஆஞ்சநேயரால் நிலத்தில் கால் கொண்டுவிட்ட சாளக்கிராமத்தை எடுக்க முயற்சிக்க அவரால் அசைக்கக் கூட முடியவில்லை. மாறாக, சாளக்கிராமம் விஸ்வரூபம் கொண்டு மலையாக மாறியது. பின்னர், திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் திருக்காட்சி அளித்தார் நரசிம்மர்.
தன்னையும் திருமாலையும் இணைத்த ஆஞ்சநேயரை வாழ்த்தி, அவரை அவ்விடம் நித்திய வாசம் செய்யும்படி பணித்தாள். அவ்வாறே மலையை நோக்கியவாறு இன்றும் வாசம் செய்து கொண்டிருக்கிறார் ஆஞ்சநேயர். நரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனத்தில் பாறையில் பிரம்மாண்டமாக சிம்மாசனத்தின் மீது ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்து காட்சியளிக்கிறார் நரசிம்மர்.
நரசிம்மரின் வலதுகையில் இரணியனை வதம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் நுட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்த நாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களிலும் அருள்பாலிக்கின்றனர். மலையைக் குடைந்த குடைவரைக்கோயிலில் மலையே மாலெனும் பெருமாளாக அமைந்துள்ளது.
தேவசிற்பி மயனால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கோயில் மலையைக் குடைந்து வடிவமைக்கப்பட்ட, 25 அடி நீளம் கொண்ட குடவரைக் கோயிலாக, பிற்காலத்தில் மகேந்திரவர்மன் என்ற பல்லவ மன்னனால் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தொண்டை மண்டலத்தை ஆண்ட அதியமான் வழிவந்த குணசீலன் என்ற மன்னனால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை குறிக்கும் கல்வெட்டுகள் "அதியேந்திர விஷ்ணு கிரகம்' எனக் குறிக்கின்றன.
இந்த மலை மீது இருக்கும் கோட்டை,சுமார் 400 ஆண்டுகள் முன்பு சேந்தமங்கலம் பாளையக்காரர் ராமச்சந்திர நாயக்கரால் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டையாகும். இந்த மலைக்குன்றின் மீதுதான் 1623-இல் திப்பு சுல்தான், மறைந்திருந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார்.
கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள நாமகிரித் தாயாரின் சந்நிதி கட்டுக் கோயிலாகும். நாமகிரி மலையின் கிழக்குப்புற குடைவரைக் கோயிலில் கார்கோடகனின் மீது தெற்கில் சிரம் வைத்து, வடக்கில் திருப்பாதம் நீட்டி சயன நிலையில் திருமால் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
மலையின் அடிவாரத்தில், ஒருபுறம் நரசிம்மரும், மறுபுறம் அரங்கநாதரும் உள்ளனர். பொதுவாக, அரங்கர் ஆதிசேஷனில் பள்ளிகொள்வதற்கு மாறாக, இத்தலத்தில் கார்கோடகனின் தவத்துக்கு இணங்கி, மிகவும் உக்கிரமான கார்கோடகன் மீது பள்ளிகொண்டு காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் கோயிலில் எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் கோயிலையே ஆஞ்சநேயரின் பிரதான கோயிலாகக் கருதுகின்றனர். முதலில் நாமகிரி தாயாரை தரிசித்துப் பின்னர், நரசிம்மமூர்த்தியை வணங்கி, மூன்றாவதாக அனுமனை தரிசித்தல் இங்கு வழக்கம்.