வெள்ளிமணி

அச்சம் நீக்கும் முனியப்பன்

பயத்தை நீக்கி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் சேலம் வெண்ணங்கொடி முனியப்பன்

இணையதளச் செய்திப் பிரிவு

அக்காலத்தில் கடும் தொல்லைகளை அளித்து வந்த அந்தகாசுரன் எனும் அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் அன்னை பராசக்தியை வேண்டி நின்றனர். இதனால் "காத்தாயி அம்மன்' என்ற பெயரில் பராசக்தி அவதரித்து, லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கி அசுரனை அழித்தார். பின்னர் ஏழு முனிகளும் ஒன்றாகி "முனியப்பன்' என்ற ஒரே வடிவமாகி கலியுகத்தில் புவியில் அருள்பாலிக்கின்றனர் என்பது தல வரலாறு.

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இவர் "வெண்ணங்கொடி' என்ற ஒரு வகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்து அருள்பாலிப்பதால் இத்தல முனியப்பன் "வெண்ணங்கொடி முனியப்பன்' என அழைக்கப்படுகிறார்.

இவர் கனல் கக்கும் வீரக்கண்களும், அருள் ஒளிரும் மேனியழகும், அஞ்சேல் என அபயம் காட்டும் அருளழகும் பொங்க வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு வலது கையில் திரிசூலமும், இடது கையில் வாளும் வைத்து கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

அமாவாசை நாளில் உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த பரிகார பூஜைகளும், எலுமிச்சைப் பழத்தில் குங்குமம் தடவி குழந்தைகள் முதல் பெரியவர் வரை திருஷ்டி கழிக்கப்படுதலும் இங்கு நடைபெறுகிறது. முக்கிய பண்டிகை நாள்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும்.

திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு கிடைக்க எனப் பல்வேறு கோரிக்கைகளுக்காக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தொட்டில் கட்டியும், பொங்கல் வைத்தும், ஆடு}கோழிகளை காணிக்கையாக்கியும் முனியப்பனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

சேலத்தில் இருந்து நீண்ட தூரம் வெளியூர் செல்பவர்கள் வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் தங்கள் வாகனத்தை நிறுத்தி வழிபட்டுச் செல்கின்றனர். பயணங்களின்போது இவரை வேண்டி எலுமிச்சைக் கனி பெற்றுச் சென்றால், அவரே உடன் வந்து விபத்துகளில் இருந்து காப்பதாக அனுபவத்தில் உணர்ந்தவர்கள் மெய்சிலிர்க்கச் சொல்கின்றனர்.

கோயிலில் உள்ள வேல்விலங்கு என்னும் சிறிய இரும்புக் கம்பி கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால், தீய சக்திகளின் பிடியிலிருந்து விடுபடலாம், பய உணர்வு நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டை "கட்டுவர்த்தனம்' என்கின்றனர்.

தீய பழக்கத்துக்கு அடிமையானோர், வெண்ணங்கொடி முனியப்பனிடம் வேண்டுதலை வைத்து கையில் கயிறு கட்டிக் கொண்டால், ஆறு மாதம் முதல் ஒரு வருடத்தில் அந்தத் தீய பழக்கத்திலிருந்து விடுபடலாம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

24 மணி நேரமும் இக்கோயிலில் வழிபாடு செய்யலாம்.

காரமடை செ.சு.சரவணகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஷஃபாலி வர்மா!

காரம்... ஆயிஷா!

புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!

தமிழகத்தில் 98.23% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT