வெள்ளிமணி

பதினாறு பேறு தரும் பரமன்

பராக்கிரம பாண்டியன் கனவில் தோன்றிய சிவபெருமான்..

இணையதளச் செய்திப் பிரிவு

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மை சமேத காசி விசுவநாதர் கோயில். இது உலகம்மன் கோயில், தென்காசி பெரிய கோயில் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

"காசியில் இறந்தால்தான் முக்தி; தென்காசியிலோ பிறந்தால், இருந்தால், இறந்தால், அத்தலத்தை தரிசித்தாலே முக்தி' என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

குற்றால மலைச்சாரலில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோயில், விந்தன் கோட்டையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பராக்கிரம பாண்டியனால் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

"முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை

மிக்க வேத வியாசன் விரித்ததை

தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்

களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்...''

என்று தொடங்கி, செண்பக விநாயகரை வணங்கி, தலபுராணத்தை உலகம்மை சந்நிதியில் அரங்கேற்றி இருக்கிறார், அழகிய சிற்றம்பலக் கவிராயர். இது ஏறத்தாழ 1770 பாடல்களையும், 30 படலங்களையும் கொண்டது.

பராக்கிரம பாண்டியனால் காசியில் இருந்து எடுத்துவரப்பட்ட லிங்கம், சந்தர்ப்ப வசத்தால் சிவகாசியிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டது.

ஒரு நாள் இரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ""கோட்டையில் இருந்து ஊர்ந்து செல்லும் எறும்பு வரிசை முடியும் இடத்தில் ஒரு சிவலிங்கம் இருக்கும். அங்கு கோயில் எழுப்புவாயாக!'' என்று கூறினார்.

காலையில் எறும்பு வரிசையைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தான் மன்னன். கனவில் இறைவன் உரைத்தபடியே அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது. மகிழ்ச்சி அடைந்த மன்னனால், அந்த இடத்தில் கட்டப்பட்டதுதான் தென்காசி காசி விசுவநாதர் கோயில்.

முகப்பில் உள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் கோயிலுக்குக் கம்பீரத்தைத் தருகிறது. 178 அடி உயரமுடைய கோபுரத்தின் உச்சியில் 11 செப்புக் கலசங்கள் உள்ளன. இந்தக் கலசங்கள் ஒவ்வொன்றும் 110 கிலோ எடை கொண்டவை. கோயில் கோபுரத்தை வண்ணமயமான 800 சிலைகள் அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி.

இரண்டு பெரிய யானைகள் பெரும் தேர் ஒன்றை இழுத்துச் செல்வது போல் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் வடக்குப் பகுதியில் மகிஷாசுரமர்த்தினி அருள்கிறாள்.

ஏராளமான சிற்பங்களைக் கொண்ட முக மண்டபம், மணிமண்டபம், மகா மண்டபத்தைக் கடந்தால் கருவறை.

காசியில் உள்ள லிங்கத்தைப் போன்று கருணை வடிவோடு காட்சி தருகிறார் சுயம்பு மூர்த்தமான தென்காசி காசி விசுவநாதர். பதினாறு பேறுகளும் அருளும் பெரும் வரப்பிரசாதி. மூலவரையும், இவரை வணங்கி நிற்கும் பராக்கிரம பாண்டியனையும், வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கி நின்றாடும் நடராஜப்பெருமானையும் தரிசிக்கிறோம்.

பிரகாரத்தில் சுரதேவர், நால்வர், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், மகாலட்சுமி, முருகப்பெருமான், சனிபகவான், காரைக்கால் அம்மையார், வியாக்ரபாதர், பதஞ்சலி, நடராஜர், சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் காசிக்கிணறு உள்ளது.

அம்மன் சந்நிதிக்குள் அழகே உருவெடுத்த உலகம்மன் பத்ம பீடத்தில் நின்று நம் நெஞ்சையெல்லாம் நெகிழ்விக்கிறாள். அவள் சந்நிதியில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் இரவு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

அம்மன் சந்நிதிக்கும் சுவாமி சந்நிதிக்கும் நடுவில் பாலமுருகன் சந்நிதி உள்ளது. இங்கு பஞ்சபாண்டவர்கள் சிலை, கர்ணன் சிலை என கலைநயமிக்க சிலைகள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்துள்ள வடக்குச் சுற்றில் சகஸ்ர லிங்கமும், தரணி பீடமும் அமைந்துள்ளன. அதைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியும் சொக்கலிங்கப் பெருமானும் எழுந்தருளியுள்ளனர். மேலும் ரதி, மன்மதன் சிற்பங்கள், பைரவ மூர்த்தி, துர்க்கை அம்மன், திருமால், காளிதேவி, இரண்டு தமிழணங்குகள், இரண்டு வீரபத்திரர்கள், இரண்டு தாண்டவ மூர்த்திகளையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.

சென்ற ஆண்டு மகாகும்பாபிஷேகம் கண்டு புதுப்பொலிவுடன் காணப்படும் இக்கோயிலில் சிவாலயத்துக்குரிய அனைத்து உற்சவங்களும் சிறப்பிக்கப்படுகின்றன. மாசியில் பிரம்மோற்சவம் மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தென்காசி காசி விசுவநாதரை வழிபடுவது, வடக்கே உள்ள காசி விசுவநாதரை வணங்குவதற்குச் சமமானது என்றும், ஏராளமான புண்ணியப் பலன்களைத் தரக்கூடியது என்றும் நம்பப்படுகிறது.

தென்காசி ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் காசி விசுவநாதர் கோயில் அமைந்துள்ளது.

- மு. வெங்கடேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% அதிகரிப்பு!

உத்தரப் பிரதேசம்: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரைக் கொன்ற இளம்பெண் கைது!

ஆஃப் ஸ்பின், விக்கெட் கீப்பிங், மிடில் ஆர்டர் பேட்டிங் செய்துள்ளேன்: ஜஸ்பிரித் பும்ரா

மத்தியப் பிரதேசம்: நர்மதா நதிக்கரை அருகே இறந்த நிலையில் 200 கிளிகள் கண்டெடுப்பு

சாகித்திய சம்மான் விருது விழா: புனைவுக்கான பிரிவில் விருது பெற்ற எழுத்தாளர் சுபி தாபா!

SCROLL FOR NEXT