வெள்ளிமணி

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

அஷ்ட பைரவர்களின் அருளால் நன்மைகள் பெறும் பைரவபுரி

இணையதளச் செய்திப் பிரிவு

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச்சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம். ஜீவர்கள் இடர்ப்படும் காலங்களில் விரைந்து வந்து அவர்களைக் காத்தருள்வதற்காக ஆவிர்பவிக்கும் சிவபெருமானின் வேகவடிவமே பைரவமூர்த்தி.

சகல உலகங்களையும், அதில் அமைந்துள்ள திருத்தலங்களையும், அங்குள்ள தீர்த்தங்களையும் காத்தருள்பவர் ஸ்ரீ பைரவ மூர்த்தியே.

பைரவர் திருக்கோலங்களில் அஷ்ட (எட்டு) வடிவங்களை விசேஷமானதாகக் கருதுவர். இந்த எட்டு திருவடிவங்களும் இன்னும் 64 திருவடிவங்களாக விரியும். இவற்றுக்கு "அஷ்டாஷ்ட பைரவமூர்த்தங்கள்' என்பது பெயர்.

இந்த 64 பைரவ அவதாரங்கள் அத்துணைக்கும் முன்தோன்றலான "ஆதி மகா பைரவ மூர்த்தி' தோன்றியருளிய தலம்தான் பைரவபுரி அல்லது வயிரவபுரி என்றழைக்கப்பெற்ற இன்றைய சோழபுரம்.

மேலாக, அஷ்டாஷ்ட பைரவர்களும் சிவபெருமானை லிங்கத்திருமேனியராக பூஜித்த தலமும் இது மட்டும்தான் என்கிறார்கள். பைரவர்கள் பூஜித்த காரணத்தால் இங்கருளும் மூலவருக்கு ஸ்ரீ பைரவேஸ்வரர் என்பதும், அம்பிகைக்கு ஸ்ரீ பைரவேஸ்வரி என்பதும் திருநாமங்கள்.

புண்ணிய பூமியான இத்தலத்தில் எட்டு என்ற எண்ணே சிறப்புடன் விளங்குகின்றது. அஷ்டாஷ்ட பைரவர்களுடன் அஷ்ட திக் பாலகர்களும், அஷ்ட வசுக்களும் பூஜித்த தலம் இது. இன்றும் அவர்களுடன் சித்த புருஷர்களும் அரூபமாக இத்தலத்தில் பூஜிப்பதாக ஐதீகம்.

கிழமைகளில் ஞாயிறும், திதிகளில் அஷ்டமியும் பைரவருக்கு உகந்தவை. திதிகளில் எட்டாவது திதியாகிய இந்த அஷ்டமி திதி பிறந்திட்ட தலம் இந்த பைரவபுரிதான் என்கிறது தலபுராணம். அதுபோல, பாரம்பரிய சங்கீதத்தில் அம்பிகைக்கு உகந்த ராகமான "பைரவி' ராகம் பிறந்த தலமும் இதுதான்.

கலியுகத்தின் தொடக்கத்தில், மாமுனிவர் அகத்தியர் இத்தலத்து இறைவனை "பைரவி துணைவா' எனச் சொல்லி துதித்திட, அதைக்கேட்ட மாத்திரத்திலேயே அம்பிகையான பைரவேஸ்வரியின் கல் திருமேனியிலிருந்து பேரானந்தக் கண்ணீர் கசிந்ததாம். அகத்திய முனிவரின் இந்த வார்த்தைகளே தன்னைப் பேரானந்தத்தில் ஆழ்த்தியதாக மகிழ்ந்த அம்மை இதனை உத்தமமான "பைரவி' ராகத்தினால் தனது திருவாக்கு மலர்ந்து அருளியதாக ஐதீகம். அஷ்டமி தினங்களில் இத்தலத்தில் பைரவி ராகத்தில் அமைந்த பண்களைப் பாடிட அன்னையினருளால் பெண்கள் நலம் சிறக்கும்.

அம்மையின் இந்த ஆனந்தாமிர்தக் கண்ணீர்த் துளிகளே இத்தலத்துத் தீர்த்தமாக "பைரவ அமிர்த தீர்த்தம்' என்பதாக ஆகிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. எட்டு தளங்களை உடைய வில்வமே இத்தலத்துக்குரிய விருட்சம்.

வீடு, நிலம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் வாஸ்து குறைபாடுகளினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து வழிபாடாற்றி நிவாரணம் பெறுகின்றனர்.

பைரவருக்கு உகந்த எட்டு என்ற எண்ணின் அடிப்படையில் மாமுனி அகத்தியப்பெருமான் "அட்டகந்த எட்டுசந்த முஃட்டவிந்த நிட்டசிந்தம்' என்ற அபூர்வமான வாரணத்துதியை இத்தலத்தில் பாடியருளியுள்ளார்.

வேறெங்கும் காண இயலாத வண்ணம்' அட்ட முஃட்ட நிட்டைப் படிகள்' எனப்பெறும் எட்டு பைரவப்படிகள் இத்தலத்துக்கே உரிய சிறப்பாகத் திகழ்கின்றன.

இவ்வெட்டுப்படிகளையும் நீரால் சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, எட்டு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் அளப்பரிய நன்மைகள் பெறலாம்.

குறிப்பாக நரம்பியல், மூளை பிரச்னைகள் உடையவர்கள், விபத்துகளைச் சந்தித்து மீள்பவர்கள், தலை சம்பந்தமான கோளாறு உடையவர்கள் போன்றோர் இத்தலத்து பைரவ படிபூஜையினை செய்து பலன் பெறுவது இன்றளவும் கண்கூடு.

தொடக்கத்தில் அஷ்ட பைரவர்களும் பூஜித்த அஷ்ட லிங்கங்கள், அவர்களுக்குரிய பீடங்களுடன் எட்டு திக்குகளிலும் இருந்துள்ளன. காலத்தின் வேகத்திற்கு ஈடு செய்ய இயலாமல் சிதையத் தொடங்கிய கோயிலுடன் இவை பூமியில் தூர்ந்து விட்டன. தற்பொழுது மூல லிங்கம் உள்ள மையக்கோயில் மட்டும் எஞ்சியுள்ளது. கங்கா விசர்ஜனர், துர்கை, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர் ஆதிகாலபைரவர் ஆகிய கோஷ்ட திருமேனிகள் தொன்மை அழகும், வரலாற்றுச் சிறப்பும் உடையவை.

யோக மார்க்கத்தில் சிறப்பான பலன்களைப் பெற எண்ணுபவர்கள் இத்தலத்தில் தியானிப்பது கைமேல் பலன் தந்திடும். கார்த்திகை மாதத்தில் செய்யப்பெறும் மகா காலபைரவாஷ்டமி இத்தலத்தில் சிறப்புற நிகழ்த்தப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

உன்னதமான பைரவ சக்தி நிறைந்துள்ள இத்தலத்தில் அருளும் ஸ்ரீ பைரவேஸ்வரி உடனருளும் பைரவேஸ்வரரை தரிசித்து அற்புதமான பலன்களைப் பெறலாமே..!

கும்பகோணத்திலிருந்து சென்னை நெடுஞ்சாலை வழித்தடத்தில் திருப்பனந்தாளுக்கு 4 கி. மீ. முன்னதாக அமைந்திருக்கிறது இந்த சோழபுரம்.

-சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

நியாய விலைக் கடை வேறு பகுதிக்கு மாற்றம்! பொங்கல் தொகுப்பை புறக்கணித்த கிராம மக்கள்!

புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது

தமிழ்நாடு தனியாா் பள்ளி ஆசிரியா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் முப்பெரும் விழா

அரசுத் துறை அலுவலகங்களில் பொது தகவல் அலுவலா் பெயா்ப் பலகை அவசியம்! தகவல் ஆணையா் வி.பி.ஆா். இளம்பரிதி அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT