இறைவன் அருளாட்சிக்கு ஜாதி, மத பேதங்கள் இல்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்ந்தவர், திருக்குறிப்புத் தொண்ட நாயனார். 63 நாயன்மார்களில் சலவைத் தொழிலாளியாக வாழ்ந்து, தமது சிவத்தொண்டின் மூலம் இறையருள் பெற்றவர்.
காஞ்சிபுரம் மாநகரில் தோன்றியவர், திருக்குறிப்புத் தொண்டர். சிவனடியார்களைத் தேடிச் சென்று அவர்களுடைய ஆடைகளின் அழுக்கு நீக்கி துவைத்துத் தருவதை தம் அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் தன் தொண்டை செய்ய ஓர் அடியார்கூட கிடைக்காத நிலையில் இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்தது.
சிவபெருமான் ஒரு சிவனடியார் போல வேடம் பூண்டு, அழுக்கேறிய ஆடையை உடுத்திக்கொண்டு வறியவராக திருக்குறிப்புத் தொண்டரிடம் வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட திருக்குறிப்பு நாயனார் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
""தங்களுடைய ஆடை மிகவும் அழுக்கேறி உள்ளது. இதனை தாங்கள் என்னிடம் தந்தால், துணியைத் துவைத்து வெண்மையாக்கித் தருவேன்.'' என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு சிவனடியார் வேடத்தில் இருந்த எம்பெருமான், ""நீங்கள் சொல்வது உண்மைதான். என்றாலும், இந்தக் குளிருக்கு இந்த ஆடை தேவைப்படுகின்றது'' என்றார்.
""தாங்கள் சிறிது நேரம் அவகாசம் கொடுங்கள். விரைவில் துவைத்துத் தந்து விடுகிறேன்'' என்றார்.
அதைக் கேட்ட சிவபெருமான், ""அப்படி என்றால் ஒரு நிபந்தனை. சூரியன் மறைவதற்குள் எனக்குத் துணியைத் துவைத்துத் தந்துவிடவேண்டும்,
சம்மதமா?'' என்றார்.
""தங்கள் விருப்பப்படியே செய்வேன்!'' என்று உறுதி கூறினார்.
அந்தத் துணியை மகிழ்ச்சியுடன் பெற்ற திருக்குறிப்புத் தொண்டர், கந்தையை வெளுக்க ஆயத்தமானார். அப்போது வானில் மேகங்கள் சூழ்ந்தன. அடைமழை பெய்யத் தொடங்கியது. இதைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், சிறிதுநேரத்தில் மழை விட்டுவிடும் என்று காத்திருந்தார். மழைவிட்டபாடில்லை.
"அந்தி சாயும் முன் அடியாரின் கந்தலாடையைத் துவைத்து தருவதாகக் கூறியிருந்தோமே... இப்பொழுது என்ன செய்வது? ஒரு தூய அடியாரின் உடல் குளிரால் வாடும்படி தவறிழைத்து விட்டேனே!' என்று மனம் வருந்தினார்.
அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அடியார்க்குத் தீமை செய்த தான் செய்ய வேண்டிய கடமை இதுதான் என முடிவு எடுத்தார். "துணிகளை அடித்துத் துவைக்கும் கற்பாறை மீது எனது தலையை முட்டி உயிர் துறப்போம்' என்று தீர்மானித்தார். அவ்வாறே கற்பாறையில் தலையை வேகமாக முட்டினார். அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
அடியாரைச் சோதிப்பது மட்டும்தான் இறைவனின் திருவிளையாடல். ஆனால், அவருக்குத் துன்பத்தைத் தருவது அவரது வழக்கமல்ல. அந்த வகையில் தலை பாறையில் முட்டுவதற்கு முன்பாகவே சிவபெருமானின் திருக்கரம் அவரது தலையைத் தாங்கிக்கொண்டது.
விடாமல் பெய்த அடைமழை நின்றது. அங்கே மலர் மாரி பொழிந்தது. சிவபெருமான் உமையோடு காளை வாகனத்தில் காட்சி தந்தார். அதைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் பேரானந்தம் அடைந்து சிவபெருமானை கைக்கூப்பி வணங்கி நின்றார்.
""அன்பரே, உனது கடமையையும் பெருமையும் உலகம் அறிவதற்காகவே இந்த திருவிளையாடலை நாம் செய்தோம். நீர் எமது உலகை அடைந்து எம்முடனே சேர்ந்து வாழ்வாயாக'' என்று கூறி மறைந்தார். அதன்படியே திருக்
குறிப்புத் தொண்டரும் இறைவன்
திருவடி அடைந்தார்.
முத்தீஸ்வரர், ஒட்டுக்கேட்ட முத்தீஸ்வரர் எனும் பெயர்களில் வேறு தலங்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன } என்றாலும், காந்தி சாலையில் அமைந்துள்ள முத்தீஸ்வரர் திருக்கோயில் திருக்குறிப்புத் தொண்டரின் திருக்கோயிலாகும்.
திருக்குறிப்புத் தொண்டருக்கு மரியாதை செய்யும் வகையில் சித்திரை சுவாதியில் அவருக்கு அபிஷேக ஆராதனை, வீதி உலா, அன்னதானம், சொற்பொழிவுகள் முதலானவையும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. மார்கழி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. செல்வ விநாயகர், வள்ளி } தெய்வானை உடனுறை முருகப்பெருமான், கருவறை எதிரே திருக்குறிப்புத் தொண்டரின் தனி சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன.
காசிப முனிவர் மற்றும் அவரது மனைவியர் தொடர்புடைய புராண வரலாறு இத்தலத்துக்கு உண்டு. இதற்குச் சாட்சியாக முத்தீஸ்வரரின் பின்புறத்தில் கருடேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. காஞ்சிபுரம் செல்வோர், சிவன் அருள் பெற்ற நாயன்மார்களுள் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டரை வணங்கி வழிபட்டு நலம் பெறலாம்.
காஞ்சிபுரம் மாநகரில் உள்ள ஆடிசன்பேட்டை காந்தி சாலையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.