முகப்பு
தமிழ்மணி

எப்படி நிகழ்ந்தது அது?

அந்தச் செய்தி கேள்விப்பட்டதிலிருந்து அந்த அம்மையாரால் அமைதியாக இருக்க முடியவில்லை.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 5:37 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 5:35 PM

அந்தச் செய்தி கேள்விப்பட்டதிலிருந்து அந்த அம்மையாரால் அமைதியாக இருக்க முடியவில்லை. எப்படி நிகழ்ந்திருக்கும் என்றே கேட்டுக்கொண்டிருந்தது அவர் உள்மனம். அந்த அம்மையின் பெயர் நமக்குத் தெரியவில்லை. அவர் புலமை மிக்கவர்; காதலனைப் பிரிந்த காதலியின் மேனியில் பசலை என்னும் தேமல் படர்வது குறித்து அழகாகப் பாடியதால் அவர் 'நப்பசலையார்' என்று பேர் பெற்றார்.

நப்பசலையார் பாண்டி நாட்டுக் கொற்கையை அடுத்த மாறோக்கம் என்ற ஊரில் வாழ்ந்தவர். 'மாறோக்கத்து நப்பசலையார்' என்று அழைக்கப்பட்டவர். அவர் தன்னுடைய ஊரிலிருந்து உறையூர் சென்று அங்கு அரசாண்டிருந்த கிள்ளிவளவன் என்னும் சோழ அரசனைச் சந்தித்து, அவனுடைய பெரு வீரத்தையும் வெற்றியையும் தம் புலமைத்திறம் கொண்டு போற்றியுள்ளார்.

'கிள்ளிவளவனே ! நீ ஒரு புறா உற்ற துன்பத்தைத் தீர்த்த புகழ்மிக்க சோழர் மரபில் வந்தவன். நீ பகைவருடைய பெரிய கோட்டை மதில்களைத் தகர்த்து வெற்றி பெறும் ஆற்றலும் உடையாய். இமயமலையின் மீது தனது வெற்றிமிக்க வில்லின் முத்திரையைப் பொறித்து வந்த சேர அரசனையும் வென்ற சிறப்பை நான் எப்படி போற்றிப் பாடுவேன்! அது மிகவும் அரிய செயலன்றோ!' என்று பாடிப் பரவினார்.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 5:37 PM

இவையெல்லாம் முன் நிகழ்ந்தன. இப்போது, நப்பசலையார் செவியுற்ற செய்தி அவரைத் திடுக்கிடச் செய்தது. அது கிள்ளிவளவன் இயற்கை எய்தி விட்டான் என்ற செய்தியாகும்.

பகைவனுக்கெல்லாம் காலனாக வாய்த்த அவன் உயிரை காலன் எப்படி கவர்ந்து கொண்டிருக்க முடியும்? காலனும் அஞ்சும் அவன் வலியும் திறனும் எங்கே போயின? என்று எண்ணினார். அவர் உறையூருக்கு விரைந்தார்.

உண்மைதான்; கிள்ளிவளவன் இறந்து விட்டான். இந்த இறப்பு எப்படி நிகழ்ந்தது எனக் கேட்டது அவர் உள்ளம். அவர் நீர் சொரிய அவன் உடலைப் பார்த்தபோது, அவன் உயிர் காலனால் எப்படி கொல்லப்பட்டிருக்கும் என்பதற்கு விடை கிடைத்தது.

வலிமைமிக்க தேர்களை உடைய கிள்ளிவளவனின் உயிரை காலன் பகை உணர்வோடு வந்து, 'உன் உயிரைப் பறிக்கிறேன் பார்' என்று வலிமையோடு வந்து, அவனோடு மோதி அவன் உயிரைப் பறித்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி அவன் வந்திருப்பின் காலன் காலமாகி போயிருப்பான்.

காலன் கிள்ளிவளவனின் வலிமையை உணர்ந்தவன். எனவே, அவன் பணிவோடு மெல்ல வந்து கிள்ளிவளவனிடம் பரிசில் கேட்கும் இரவலன் போல நின்று கையால் தொழுது வாழ்த்தி, 'ஐயனே! உன் உயிரைத் தந்தருள வேண்டும்' என்று கேட்டுத்தான் பெற்றிருக்க வேண்டும். அப்படித்தான் நிகழ்ந்திருக்குமோ அது?

செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,

உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;

பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,

இரந்தன்று ஆகல் வேண்டும்; பொலந்தார்

மண்டமர் கடக்கும் தானைத்

திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!

(புறம் : 226)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.